தினமும் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?

thinamum-evvalavu-neram-thoonga-vendum

நான் தினமும் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்? நல்ல தாயாக இருக்க என்ன செய்ய வேண்டும்? ஆகிய இரு கேள்விகளுக்கும் சத்குருவின் பதில் இங்கே உங்களுக்காக…

கேள்வி
நான் தினமும் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?

சத்குரு:

எஞ்சினியரிங் என்ற சொல்லுக்கு ஒன்றை நிகழ்த்துவது என்று பொருள். நமக்குத் தேவையான ஒன்றை மிக சிறப்பான முறையில் இயங்கச் செய்வதே எஞ்சினியரிங். திறமையற்ற, கேவலமான முறைகளில் ஒன்றை நீங்கள் செய்தால் அது எஞ்சினியரிங் கிடையாது. ஒரு பொருளைப் பார்த்து “ஓ! என்ன ஒரு அற்புதமான பொறியியல் கலைநயத்துடன் இருக்கிறது!” என்று நீங்கள் எப்போது பாராட்டுவீர்கள்? உராய்வில்லாமல், குறைந்த அளவு சக்தியை உபயோகித்து செயல்படும்போது தானே? அதுபோல், உடலுக்கு 12 மணி நேர விழிப்பு, 12 மணி நேர தூக்கம் என்றிருந்தால், உங்கள் உடலைப் பராமரிக்க 12 மணி நேரம் தேவை என்று அர்த்தம்.

12 மணி நேரம் தூங்கி 12 மணி நேரம் விழித்திருக்கும் உடலமைப்பை நீங்கள் வைத்திருந்தால், அது சிறந்த உடல் அல்ல.
தூக்கம் என்பது உடலின் பராமரிப்பு வேலை. உங்கள் காரினை, மாதத்திற்கு 15 நாள் கொட்டகையில் வைத்துவிட்டு, 15 நாள் மட்டும் ஓட்டுவதாய் இருந்தால் அதற்கு நீங்கள் பஸ்ஸிலேயே போகலாம் அல்லவா? 12 மணி நேரம் தூங்கி 12 மணி நேரம் விழித்திருக்கும் உடலமைப்பை நீங்கள் வைத்திருந்தால், அது சிறந்த உடல் அல்ல. நீங்கள் அதை சரியாக நிர்வகிக்கவில்லை என்று அர்த்தம்.

மருத்துவரீதியாக நீங்கள் ஆரோக்கியமாக இருந்தாலும் 8 முதல் 10 மணி நேரம் தூக்கம் தேவைப்படுகிறது என்றால் உங்கள் உடல் என்னும் இயந்திரத்தை மிகத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அறியலாம்.

துரதிருஷ்டவசமாக மருத்துவ தகுதியுள்ளவர்களே ஒரு மனிதன் தினமும் 8 முதல் 10 மணி நேரம் தூங்கவேண்டும் என்று கூறுகிறார்கள். இந்தப் பூமியிலேயே அதிநவீனமான இயந்திரம் உண்டென்றால், அது மனித உடலின் இயக்குமுறைதான். இதன் இயக்கத்தை 10 மணி நேரம் தினமும் பராமரிப்புக்கு நீங்கள் மூடிவிட்டால் பிறகு அது எப்படி அதிநவீனமாக இருக்க முடியும்?

கேள்வி
நல்ல தாயாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

சத்குரு:

ஒரு பொருளைத் திறமையுடன் செயல்படுத்துவதற்குத்தானே நீங்கள் திட்டமிடுவீர்கள்? திறனில்லாமல் செயல்படுத்துவது சிறந்த பொறியியல் ஆகாது. “நான் ஒரு தாய்; அலுவலகம் செல்ல வேண்டும்; எனக்கு வேலை இருக்கிறது” என்று உங்களுக்கு எவ்வளவு காரணம் இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் செய்யும் செயல் எதுவாக இருந்தாலும் அது முக்கியம் என்று நினைப்பதால் தானே செய்கிறீர்கள்? உங்களுக்கு முக்கியம் உங்கள் வேலைதான் என்றால், முதலில் நீங்கள் உங்களோடு வேலை செய்ய வேண்டும்.

உங்களோடு நீங்கள் சீரான முறையில் வேலை செய்வதே இன்னர் எஞ்சினியரிங். உடல் மட்டும் அல்ல, மனம் மட்டும் அல்ல, உணர்ச்சிகள் மட்டும் அல்ல. உடல், மன, உணர்ச்சி, சக்திநிலைகள் எல்லாம் இசைவுடன் ஒழுங்காக செயல்பட்டால், இந்த இயந்திரம் இன்னும் நன்றாக நிறைய வேலை செய்யும். தூக்கம், உணவு, ஓய்வு இவற்றிற்கான தேவையை உடனே குறைத்துவிட முடியும், அதேநேரத்தில் நீங்கள் இன்னும் திறமையாக அதிக சக்தியுடன் செயல்படவும் முடியும். அதிலும் நீங்கள் ஒரு தாயாக இருந்தால், உங்கள் உயிர் மட்டுமின்றி மற்ற ஓரிரு உயிர்களையும் நன்றாகச் செயல்பட வைப்பது உங்கள் பொறுப்பல்லவா? இப்பேற்பட்ட மகத்தான பொறுப்பை நீங்கள் ஏற்றுக் கொண்டதால் உங்களுடைய விருப்பத்திற்கு இடமேயில்லை. வேறு வேலை செய்பவராய் இருந்தால் கூட இன்னர் எஞ்சினியரிங் செய்வதைப் பற்றி யோசிக்கலாம். ஆனால் தாய்மார்கள் கட்டாயம் செய்ய வேண்டும்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert