மரம் நடுவது இன்று மிக மிக முக்கியமான ஒரு பணிதான். ஆனால், மரம் நடுவதிலும் நேக்குப் போக்கு வேண்டுமல்லவா?! எந்த மரமானாலும் நம் வீட்டைச் சுற்றி நட்டுவிடலாம் என்று இறங்கினால், மரமும் மிஞ்சாது, காலமும் வீணாகும். அப்படி வீணாகும் மரங்களில் தென்னை மரமும் ஒன்று. இங்கே தென்னை பற்றி சில தகவல்கள்...

சுள்ளென்று சுட்டெரிக்கும் சூரியனும், மழை நீரை பார்த்து நெடுநாளாகிவிட்ட நிலையில் வறண்டுபோன உங்கள் நாவும் மரம் நட வேண்டியதன் அவசியத்தை எந்நேரமும் உணர்த்திக்கொண்டேதான் இருக்கின்றன. ஆனால், உணர்ச்சி வேகத்தில் நாம் கிடைத்த மரக்கன்றை நம் வீட்டைச் சுற்றி நட்டு வைத்தாலோ, தோட்டங்களில் பயிரிட்டாலோ அவை நமக்கு பலனளிக்கும் என்று சொல்ல முடியாது. பொதுவாக, நம் தமிழகத்தின் தென்பகுதி மிகவும் வறண்ட நிலப்பகுதியாக உள்ளது. நாம் அங்கே தண்ணீர் வசதி அதிகம் தேவைப்படுகிற மரங்களை நடும்போது, அவை முழுவதுமாக வளராமல் பாதியிலேயே கருகிவிடுவதைப் பார்க்கிறோம்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

குறிப்பாக, தென் தமிழகத்தில் பேருந்துகளில் செல்லும்போது, கருகிய நிலையிலுள்ள தென்னை மரங்களை அதிகமாகப் பார்க்க முடிகிறது. தென்னங்கீற்றும் தென்றல் காற்றும் நம்மை கவிதை எழுத வைக்கலாம்; கீற்றுகளுக்கு நடுவே தெரியும் நிலவு ஏகாந்த நிலைக்கு கூட்டிச் செல்லலாம்;இளநீர் தாகம் தணிக்கலாம்; தேங்காய் சமைக்க உதவலாம். தென்னை மூலமாக இவையெல்லாம் கிடைத்தால் நல்லதுதான்! ஆனால், நமது சீதோஷ்ண நிலை தென்னை வளர்ப்பதற்கு ஏற்றதாய் உள்ளதா எனப்பார்ப்பது மிகவும் அவசியம்.

தென்னைகளை எங்கு நட வேண்டும்?

தென்னை மரங்கள் பொதுவாக ஆற்றோரங்களிலோ, நல்ல நீர் வசதி உள்ள இடங்களிலோ செழித்து வளரும். கேரளம் அதற்கு சரியான நிலமாக அமைகிறது. தமிழ்நாட்டில் பொள்ளாச்சி போன்ற சில இடங்களில் தென்னை நன்கு வளர்கிறது. நாம் நமது வீட்டைச் சுற்றியோ அல்லது நமது தோட்டத்திலோ தென்னையை வளர்த்து அழகு பார்க்க வேண்டுமென்றால், அதற்கான பருவமும் தண்ணீர் வசதியும் உள்ளதா என முதலில் பார்த்துக்கொள்ள வேண்டும். போதுமான தண்ணீர் வசதி இல்லையென்றால், தென்னைகள் நிலத்தடி நீரை முடிந்த அளவு உறிஞ்சிவிட்டு நிலத்தடி நீரை வற்றச் செய்துவிடும். உங்கள் வீட்டைச் சுற்றியுள்ள தென்னைகளால் நிலத்தடி நீர் வறண்டு போகலாம். அதுமட்டுமல்லாமல், ஒரு கட்டத்தில் மரங்களும் காய்ந்து போக வாய்ப்புள்ளது. எனவே, தென்னை மரங்களை நடுவதற்கு முன்பு, கொஞ்சம் சுற்றும் முற்றும் உள்ள சீதோஷ்ண நிலவரத்தைப் பார்த்து விட்டு நடவும்.

இதைக் கேட்டவுடன், "அப்பாடா... அதனால்தான் நாங்கள் மரங்களே நடுவதில்லை" என சிலர் பெருமூச்சு விடக்கூடும். மரம் நடாமல் இருப்பது நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது என்பதை காலை 10 மணிக்கு மேல் சாலையில் 10 நிமிடங்கள் நின்றுவிட்டு வந்தாலே அனல் பறக்கும் காற்று உங்களுக்கு உணர்த்தி விடும். மரங்களை நாம் நிச்சயம் நட வேண்டும். ஆனால், நமது பிரதேசத்தின் பருவ நிலையைக் கவனித்து அதற்கு தகுந்த மரங்களை நட்டு வளர்த்தால், மரங்கள் நிச்சயம் நல்ல பலனைத் தரும்.

ஈஷா பசுமைக் கரங்களின் ஆலோசனைகள்

உங்கள் நிலத்திற்கு ஏற்ற மரக்கன்றுகளை ஈஷா பசுமைக் கரங்களின் நாற்றுப்பண்ணைகளிலிருந்து மிகக் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும். வறட்சியைத் தாங்கும் மரங்களான வேம்பு, நாட்டுவாகை, பூவரசு போன்ற மரங்களை நடலாம். அதிக தண்ணீர் வசதி இல்லாத இடங்களில் நடலாம். தண்ணீர் வசதி இருக்கும் பட்சத்தில் அதற்கு ஏற்றாற் போல மலை வேம்பு, செஞ்சந்தனம், தேக்கு போன்ற வகை மரக்கன்றுகளை நட்டு சில வருடங்களில் நல்ல வருமானம் பெறமுடியும்.

ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம், தமிழகத்தில் மொத்தம் 33 நாற்றுப் பண்ணைகளை உருவாக்கியுள்ளது. எளிதில் வளரக்கூடிய செண்பகம், மகிழம், மந்தாரை, ஜக்ரண்டா, அவலாண்டா, லகஸ்ட்ரோமியா போன்ற அழகிய வண்ணப்பூக்கள் பூக்கும் மரக்கன்றுகள் மற்றும் பலா, எலுமிச்சை, நாவல் போன்ற பழ மரக்கன்றுகளும் ஈஷா நாற்றுப்பண்ணைகளில் இதற்காகப் பிரத்யேகமாக தயார் செய்து தரப்படுகிறது. புங்கன், வாகை, தேக்கு, கல்தேக்கு, செஞ்சந்தனம் மற்றும் மலைவேம்பு போன்ற மரப்பயிர் வகைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவையனைத்தும் மிகக் குறைந்த விலையில் (ரூ.5) விநியோகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகளைப் பெறுவதற்கும், மரம் நடுதல் தொடர்பான வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும். தொ. பே. 94425 90062