பிரபல திரைப்பட இயக்குனரும், நடிகருமான சேரன் தன் உணவு அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்...

இயக்குனர் சேரன்:

"என்னுடைய நல்ல பல நண்பர்களில் கோவை மோனிஷாவும் ஒருவர். அங்கு செல்லும்போதெல்லாம் தன்னுடைய விருந்துபசாரத்தால் என்னைத் திணறடித்து விடுவார். கோவை என்றாலே தயிர் சேமியாதான் ஸ்பெஷல்? அதை ரொம்ப அருமையாக செய்வார். நிறைய உணவு வகைகளை சாப்பிட்டாலும், கடைசியில் அவருடைய ஸ்பெஷாலிட்டியான தயிர் சேமியாவை சாப்பிட்டு முடித்தால்தான் திருப்தி.

சாப்பாடு என்பது மனிதனுக்கு இன்றியமையாத அம்சம்தான். ஆனால் அது உடலை வளர்ப்பதற்கு மட்டுமல்ல. அதனுள் அன்பு, பாசம் என எத்தனை இருக்கிறது! மோனிஷா போன்ற நண்பர்களின் அன்பு போலவே சாப்பாடு என்றவுடன் என் அம்மாச்சிதான் நினைவுக்கு வருவார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

என் அம்மாவின் அம்மாவான அவர் அன்பையே கரைத்துச் செய்யப்பட்டவரோ என்று கூடத் தோன்றும். அவருக்கு வாழ்க்கை என்றாலே குழந்தைகளுக்கு சுவையானதாக, உடல்நலத்திற்கு நல்லதாக செய்து கொடுப்பது, அதையும் பாசத்தோடு கொடுப்பது இதுதான். வேறொன்றுமே தெரியாது என்றுகூட சொல்லலாம். கள்ளங்கபடமில்லாத கிராமத்துப் பெண்மணி.

அவர் கேப்பைக்களி பண்ணுவார் பாருங்கள், அந்தமாதிரி நான் எத்தனை உசத்தியான இடத்திலும் சாப்பிட்டதில்லை. கேப்பைக் களியைச் செய்து, அதன் நடுவில் குழி செய்து நல்லெண்ணெய் ஊற்றிக் கொடுப்பார். நாங்கள் விரும்பி உண்போம். விடுமுறைக்கு அங்கே போய்விட்டால் கொண்டாட்டம்தான். விளையாட்டு, சுவையான சாப்பாடு, நல்ல தூக்கம். ஆரோக்கியமான காற்றும், பூச்சிமருந்து இல்லாத உணவுமாக எத்தனை ஆரோக்கியமாக வாழ்ந்த நாட்கள் அவை.

கிராமம் முழுக்க எல்லோரையும் ஒருவருக்கொருவர் தெரியும். "டேய், நீ 'அவுக' வீட்டுப் பிள்ளைதானே...!" என நலம் விசாரிப்பார்கள். யாரும் 'சட்'டென்று தப்பு பண்ணிவிட முடியாது. குடும்பத்திலோ நெருக்கமான பாசம். டி.வி., சினிமா என்று இல்லாததால் திறந்தவெளியில் ஆரோக்கியமான விளையாட்டுக்கள். நல்லாதான் போயிட்டு இருந்தது எல்லாமே...

இப்போ ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே... எனப் பாட வேண்டியதாக இருக்கிறது. உணவு என்ற ஒரு விஷயம்தான் எத்தனை கதைகளை, மறக்க முடியாத சம்பவங்களை நினைவுபடுத்துகிறது!" என்று மனம் நெகிழ்ந்து பேசுவதோடு இரண்டு ரெசிபிகளையும் கூறுகிறார் சேரன்.

தயிர் சேமியா:

தேவையான பொருட்கள்:

சேமியா - 250 கிராம்
தயிர் - இரண்டு கப்
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - நான்கு
கறிவேப்பிலை - சிறிதளவு
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
வறுத்த முந்திரி - பத்து
நெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

  • சேமியாவை நெய் சேர்த்து வாணலியில் பொன்னிறமாக வறுக்கவும்.
  • இரண்டு கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் உப்பு மற்றும் சேமியாவை சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைக்கவும்.
  • சேமியா வெந்ததும் தண்ணீரை வடிகட்டி, குளிர்ந்த நீரில் அலசி மீண்டும் வடிகட்டவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய் 2 மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • இதை சேமியாவுடன் சேர்த்து தயிர், கொத்தமல்லி, முந்திரி போட்டு கலக்கவும்.
  • சுவையான இந்த தயிர் சேமியா ஜோராக இருக்கும்.

வெந்தயக் களி

தேவையான பொருட்கள்:

வெந்தயம் - மூன்று தேக்கரண்டி
அரிசி - ஒரு கப்
துருவிய வெல்லம் - கால் கப்
நல்லெண்ணெய் - மூன்று தேக்கரண்டி
துருவிய தேங்காய் - ஒரு மேஜைக்கரண்டி
உப்பு - இரண்டு சிட்டிகை

செய்முறை:

  • அரிசி மற்றும் வெந்தயத்தை நான்கு மணிநேரம் ஊறவைத்து மைய அரைக்கவும்.
  • இத்துடன் மூன்று கப் தண்ணீர், உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து மெல்லிய தீயில் கைவிடாமல் கிளறவும். மாவு நன்றாக வெந்ததும், சூடாக உருட்டி நடுவில் குழி செய்து அதில் நல்லெண்ணெய் மற்றும் வெல்லம் போட்டுப் பரிமாறவும்.