திரு.டேனியல் - குடும்ப வாழ்க்கையில் வீசிய புயலால் உடைந்துபோய், ஈஷாவின் துணையால் மீண்டெழுந்த கதையை நம்முடன் இங்கே பகிர்ந்துகொள்கிறார்...

திரு.டேனியல்:

என் பெயர் டேனியல், வயது 37. நான் ஒரு நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்து 22 வயதில் சொந்தமாகத் தொழில் துவங்கி, சுமார் 12 வருடங்களில், சென்னையில் ஐந்து retail garments outlet வைத்திருக்கிறேன். 2007ல் திருமணமாகி, 7 வயதில் ஒரு பெண் குழந்தையும், 4 வயதில் பையனும் உள்ளார்கள். எப்பொழுதும் தொழில் ஒன்றே கவனம். சின்னச் சின்ன சறுக்கல்கள் இருந்தாலும் அதை நிவர்த்தி செய்து வெற்றிகரமான வாழ்க்கை வாழ்ந்தேன். நல்ல மனைவி, பெற்றோர், நல்ல தம்பி, நண்பர்கள், குழந்தைகள் மற்றும் தொழில் எல்லாமும் வளமாகவே அமைந்திருந்தது. இதற்கிடையில் ஆனந்த விகடனில் ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரைத் தவறாமல் படிப்பேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
என் மனைவியின் மறைவு என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையை எனக்குள் ஏற்படுத்தியது.

2009-ல் ஷாம்பவி மஹாமுத்ரா என்ற 7 நாள் யோக வகுப்பில் கலந்துகொண்டேன். ஆனாலும் தொழில் காரணமாக என்னால் தினமும் பயிற்சி செய்ய முடியவில்லை. திடீரென்று ஆரம்பிப்பேன், பிறகு விட்டுவிடுவேன். ஆனால், ஈஷாவின் தமிழ் மாத இதழான காட்டுப்பூவை மட்டும் தவறாமல் படிப்பேன். பிரச்சினைகள் இல்லாமல் சென்று கொண்டிருந்த என் வாழ்க்கையில் சின்ன தடுமாற்றம். நல்ல புரிதலோடு வாழ்ந்து கொண்டிருந்த என் மனைவி ஒரு சாதாரண விளையாட்டிற்காக, பயமுறுத்துவதற்காக தற்கொலை முயற்சி செய்ய, அது வினையாகி ஒரு சில நிமிடங்களில் எல்லாம் முடிந்தது. அவளின் கடைசி நிமிடங்கள் என் கைகளிலும், மடியிலும் இருக்க... எங்களை விட்டுப் பிரிந்தாள். சிறந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தும் பலனில்லாமல் பிரிந்து சென்றாள்.

என் மனைவியின் மறைவு என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையை எனக்குள் ஏற்படுத்தியது. அப்போது என் பெண்ணுக்கு 4 வயதும், பையனுக்கு 14 மாதமும் ஆகியிருந்தது. எனக்கு எதுவுமே புரியாதிருந்தது. நான் என் வீட்டில் என்னுடைய அறையிலேயே இருப்பேன். நாள் முழுவதும் அந்த அறையின் உள்ளேயே இருப்பேன். என் பெற்றோர் மற்றும் என் குழந்தைகள் தவிர யாரையுமே பார்க்க மாட்டேன், பேச மாட்டேன். எந்தக் கடைகளுக்கும் செல்லமாட்டேன். விடிய விடிய தூக்கமே வராது. அழுகை, வேதனை, துக்கம் எனக்குள் நான், நான், நான் மட்டுமே! மது அருந்தினால் மட்டுமே தூக்கம் என்று ஆகியிருந்தது.

முன்பு, வீட்டில் எப்பொழுதும் 2 அல்லது 3 கார்கள். எல்லா வேலைகளுக்கும் ஆட்கள். எப்பொழுதும் என்னைச் சுற்றி 3, 4 பேர்கள் இப்படி இருந்த என்னுடைய வாழ்க்கை, சூழ்நிலை காரணமாக தொழிலைக் கவனிக்காமல், கடைகளுக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால் சுமார் 2 வருடங்களில் நிலைமை தலைகீழாக மாறியது. எது நடந்தாலும் ‘அவளே போய்ட்டா, இது போனால் என்ன?’ இப்படிச் சொல்லியே வீட்டிற்குள் இருப்பேன். ஒவ்வொன்றாக என்னை விட்டுப் போனது. பல வருடங்கள் என்னுடன் இருந்த 2, 3 பேரைத் தவிர யாருமே இல்லை. கடைகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டன. பொருளாதாரப் பிரச்சனைகள் தலைதூக்க ஆரம்பித்தன. என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. என் மனைவியின் மறைவு மட்டுமே என்னுடன் இருந்தது. ஒரு சமயத்தில் பிரச்சனைகள் கைமீறிச் சென்றதை உணர்ந்து, என் குழந்தைகளோடு சேர்ந்து நானும் என் மனைவி போல எனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவு செய்திருந்தேன்.

இப்படி இருந்த சமயத்தில் மணிகண்டன் அண்ணாவின் மூலமாக மைலாப்பூர் ஈஷா லைஃப் செல்ல நேர்ந்தது. அங்கு அண்ணாவின் மூலமாக பிருந்தா அக்கா அறிமுகம் ஆனார்கள். அவ்விடத்திற்கு சத்குரு சன்னிதி வரப்போவதாகவும், புதிய சென்டர் உருவாகப் போவதாகவும் சொன்னார்கள். எனக்கு சன்னிதி என்றால் என்னவென்றே தெரியவில்லை. திடீரென்று பிருந்தா அக்கா என்னை அழைத்து சத்குரு போட்டோவிற்கு போக்கஸ் லைட் மாட்டச் சொன்னார்கள். நானும் முழு மனதோடு அதைச் சந்தோஷமாகச் செய்தேன். அங்கே நானும் ஒரு தன்னார்வத் தொண்டராக இருந்ததை எண்ணி மேலும் சந்தோஷமடைந்தேன். அது முதற்கொண்டே சத்குரு போட்டோவைப் பார்க்கும்போது, அந்த போக்கஸ் லைட் ஒருவிதமான சந்தோஷமாக இருந்தது.

பிரச்சனைகளைப் பார்த்துப் பயந்த நான், அதன்பிறகு பயமின்றி நேருக்கு நேர் எல்லாவற்றையும் சந்தித்தேன்.

அதன்பிறகு சன்னிதியில் காலையிலும், மாலையிலும் சும்மா உட்காருவேன். எனக்குள் ஏதோ ஒருவித ஆனந்தத்தை உணர ஆரம்பித்தேன். தலைக்குமேல் உள்ள பிரச்சனைகள், வேதனைகள் படிப்படியாகக் குறைய, மனதிற்குள் ஏதோ இனம் புரியாத சந்தோஷம். மாத சத்சங்கத்தில் கலந்து கொண்டேன். மீண்டும் ஷாம்பவி பயிற்சியை ஆரம்பித்தேன். தினமும் ஷாம்பவி பயிற்சிக்குப் பிறகு சன்னிதியில் அமைதியாக கொஞ்ச நேரம் அமர்ந்திருப்பேன். இப்படியே நாட்கள் நகர நகர, எனக்குள் இருந்த இறுக்கம், மதுப் பழக்கம் முற்றிலும் என்னை விட்டுச் சென்றது.

நான் உருகுவதைப் போல உணர்ந்தேன். என்னால் முடிந்தவரை அக்கா சொல்லிய வேலைகளைச் செய்து வந்தேன். ஈஷா யோகா வகுப்பில் தன்னார்வத்தொண்டு செய்தேன். வகுப்பு என்னைச் சிறிது ஆழப்படுத்தியதை உணர்ந்தேன். ஒருநாள் இடைவெளி இல்லாமல் பயிற்சி, சன்னிதி என்று நாட்கள் நகர, திடீரென்று ஒரு நாள் கடைப் பையன் வந்து மார்க்கெட்டில் ஒரு புது கடை வந்திருப்பதாக சொல்லி, என்னைப் பார்க்க அழைத்தான். நானும் சென்று பார்த்தேன். அந்த கடை ரொம்ப ஓரமாக இருந்தது. ஆனாலும் சரி பரவாயில்லை என்று கடையை எடுக்க முடிவு செய்தேன். அதற்குப் பிறகு எதுவும் என் கையில் இல்லை. வேலை அதுவாக ஓடியது. பணம் எப்படி வந்தது, எதுவும் எனக்குப் புரியவில்லை.

கடையைத் திறந்தோம். நான் நினைத்துப் பார்க்க முடியாத வியாபாரம். நான் சும்மா உட்கார்ந்து பார்த்துக் கொண்டே இருப்பேன். வரிசையாக கஸ்டமர்ஸ், பெரிய பெரிய பில். அப்பொழுதுதான் எனக்குப் புரிய ஆரம்பித்தது, என் குருவின் மகிமை. நன்றி உணர்வோடு தினமும் சன்னிதியில் சத்குருவைப் பார்ப்பேன். என் கண்களில் தண்ணீர்தான் வரும். குருவை முழுமையாக உணர ஆரம்பித்தேன். பிரச்சனைகளைப் பார்த்துப் பயந்த நான், அதன்பிறகு பயமின்றி நேருக்கு நேர் எல்லாவற்றையும் சந்தித்தேன். எல்லாமும் ஆனந்தமாக இருந்தது. எது நடந்தாலும் சந்தோஷம், உற்சாகம், ஆனந்தம்தான்.

ஜனவரியில் சிவாங்கா விரதம் இருந்தேன். வீட்டில் எதிர்ப்புதான். அதைப் பற்றிக் கவலைப்படாமல் விரதம் இருந்தேன். பாவஸ்பந்தனா நிகழ்ச்சிக்காக ஆசிரமம் சென்றேன். சொல்ல முடியாத ஆனந்த அனுபவம். அதன்பிறகு தினமும் சன்னிதியில் காலை 5.30 மணிக்கு குருபூஜையில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன். ஷாம்பவி வகுப்பு பற்றி மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவதற்கான குழுவில் சேர கை தூக்கினேன். அசோக் அண்ணாவுடன் சேர்ந்து பப்ளிசிட்டி வேலையும் மிக அற்புதமாக, ஆனந்தமாகச் செல்கிறது.

மஹாசிவராத்திரி வெள்ளியங்கிரி மலை ஏற்றம். அடுத்த நாள் சென்னையில் மஹாசிவராத்திரி கொண்டாட்டம். அன்னதானம் ஏற்பாடு சுந்தர் அண்ணா வழிகாட்டுதலில் சிறப்பாக, கொண்டாட்டமாக நடந்தது. திக்குத் தெரியாமல் நின்று கொண்டிருந்த என் பாதங்கள் சத்குரு பாதம் சன்னிதி நோக்கி நகர்ந்து, சன்னிதியில் சரணடைந்து, என் வாழ்க்கையைக் கொண்டாட்டமாய் வாழ ஆரம்பித்துள்ளேன்.

இந்த நேரத்தில் என் மகனின் எல்கேஜி அட்மிஷனுக்காகக் காத்திருந்தேன். பல பள்ளிகளில் அட்மிஷன் முடிந்தே போனது. கவலையே படாமல் இருந்தேன். எனக்கென்ன கவலை, என் குரு இருக்கும்போது! அசோக் அண்ணாவின் மூலமாக கோபாலபுரம் டிஏவி ஸ்கூல் அட்மிஷன் திடீரென்று தேடி வந்தது. என் குருவின் கருணையை நினைத்து, கண்களில் தண்ணீர்தான். ஒரு இனம் புரியாத சந்தோஷம்தான். ஆனந்தம் ஆனந்தம்தான். நானும் என் பிள்ளைகளும் சீக்கிரம் சத்குரு பாத யந்திரம் வாங்கி என் குருவை வீட்டிற்கு அழைத்து வர வேண்டும் என எண்ணியிருக்கிறோம். என் பெற்றோரை என் குரு முன்னால் அமரச் செய்ய வேண்டும் என்று ஆசை. இந்த வாய்ப்பைத் தந்த என் குருவுக்கு, வேறு என்ன என்னால் கைமாறு செய்ய முடியும்?