Question: நம் நாட்டில் மட்டும்தான் காலம் காலமாக சமைப்பது, பூஜை செய்வது, திருமணம் செய்வது, சாப்பிடுவது, படிப்பது என்று எல்லாவற்றையுமே பூமியின் மீது, தரையில் அமர்ந்து செய்கிறோம். இப்போதெல்லாம் நாமும் டைனிங் டேபிளுக்கு மாறிக்கொண்டிருக்கிறோம். தரையில் உட்காருவதால் பயன் உண்டா?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பூமியிலிருந்து வந்த உடல்

உங்கள் உடல் வானத்திலிருந்து வரவில்லை. அது பூமியின் பாகம். எது பூமியாக இருந்ததோ அது இப்போது மனிதனாக அமர்ந்திருக்கிறது. ஒரு நாள் இது மீண்டும் மண்ணாக ஆகிவிடும். எனவே பூமியில் நடக்கும் மாற்றங்கள் எல்லாம் நம் உடலிலும் நடக்கின்றது. நீங்கள் சூட்சுமமாக இருந்தால் அதை கவனிக்கமுடியும்.

சூழ்நிலைகளை சவாலாக எடுத்து வெற்றி பெறுவதும் அல்லது துன்பமாக எடுத்துக் கொண்டு கஷ்டப்படுவதும் உங்களிடம்தான் இருக்கிறது.

ஒரு சில உயிரினங்கள் இதை நுட்பமாக உணரும். மனிதர்களால் இதை உணரமுடிவதில்லை. குறிப்பாக பாம்புகளுக்கு இந்த உணரும் தன்மை அதிகம். அவற்றுக்குக் காதுகளே இல்லை. சப்தங்களைக்கூட அவை அதிர்வுகளாகவே உணர்கின்றன. இது எப்படிச் சாத்தியம் என்றால் பாம்பின் உடல் முழுவதும் மண்ணோடு தொடர்பில் இருப்பதால்தான். இங்கு இருக்கும் ஒரு பாம்பு, இன்னும் பத்து நாள் கழித்து அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் நடக்கப்போகும் பூகம்பத்தைக்கூட அறிந்து கொள்ளும்.

உடல் உபாதைகளோடு இங்கு யோகா மையத்திற்கு வருபவர்களிடம் நான் எளிமையான ஒரு வழியைச் சொல்வதுண்டு. செருப்பு அணியாமல் தினமும் சிறிது நேரம் தோட்ட வேலை செய்யுங்கள் என்பேன். ஓரிரு மணிநேரங்களாவது கை, கால் எல்லாம் மண்ணில் படும்படி இருக்கவேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். இதனால் உடலில் புதிய உறுதி ஏற்படும். மண்தானே நம் உடலாக மாறியுள்ளது? சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோய் உள்ளவர்களுக்கு யோகக் கலாச்சாரத்தில் ஒரு சிகிச்சை உண்டு. குழி தோண்டி அவர்களை கழுத்து வரை புதைத்துவிடுவார்கள். சிலமணி நேரம் அவர்கள் தம் உடலை முழுமையாக பூமியுடன் தொடர்பில் வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் நோயிலிருந்து முழுமையாக வெளிவரமுடியும். ஆனால் புதைப்பது என்றால் இப்போது மிகவும் பயப்படுகிறார்கள். எனவே தோட்ட வேலை செய்யச் சொல்கிறோம், அல்லது உடல் முழுவதும் மண் பூசும் (Mud Bath) முறையைக் கையாள்கிறோம்.

உங்களுக்குள் இனிமை உருவாக்கிட

மேலும் நீங்கள் உங்களுக்குள் எப்போதும் மிகவும் இனிமையான உணர்வுடன் இருப்பது மிகவும் முக்கியமாக இருக்கிறது. வாழ்க்கையின் உயரத்தை அடைய அப்போதுதான் தேவையான உறுதி மற்றும் தைரியத்துடன் இருப்பீர்கள். உங்களுக்குள் அந்த இனிமைத்தன்மை நிலையானதாக இருந்தால் வெளிப்புறத்தில் நடக்கும் எந்த நிகழ்வுகளும் உங்களைப் பாதிக்க முடியாது. நீங்கள் பாதிக்கப்பட முக்கியமான காரணமாக இருப்பது எது? உங்கள் உடலும் மனமும்தான். இவைதான் உங்களுக்கு பாதிப்பைத் தரமுடியும். கடவுளோ, பிசாசோ, அல்லது அடுத்துள்ள ஆளோ உங்களுக்கு பாதிப்பைத் தரமுடியாது. அவை உங்களுக்கு சூழ்நிலைகளை உருவாக்கலாம். ஆனால் அந்த சூழ்நிலைகளை சவாலாக எடுத்து வெற்றி பெறுவதும் அல்லது துன்பமாக எடுத்துக் கொண்டு கஷ்டப்படுவதும் உங்களிடம்தான் இருக்கிறது.

எனவே பாதிப்பைத் தரும் உங்கள் உடலோ மனமோ எல்லாம் பொருள்தன்மையானதுதான். மூளை என்பதும் உடலின் ஒரு பகுதிதான். உங்கள் உடல் மண்ணிலிருந்து வந்ததுதான். எனவே நீங்கள் வெறும் மண் மட்டுமே. அதைத் தவிர வேறு எதுவும் கிடையாது. எனவே உடல், மனம் தரும் பாதிப்பிலிருந்து நீங்கி உங்களுக்குள் இனிமையான உணர்வை உறுதியுடன் ஏற்படுத்திக் கொள்ள ஒரு வழி, உங்களை பல வழிகளிலும் பூமியுடன், இந்த மண்ணுடன் தொடர்புபடுத்திக் கொள்வதே.

எனவேதான் நம் கலாச்சாரத்தில் உட்கார்ந்தாலும், நின்றாலும், உறங்கினாலும் பூமியுடன் தொடர்பு வைத்துச் செய்கிறோம். நமக்கு ஒரு ‘நாற்காலி’ உருவாக்கத் தெரியாமல் அனைத்தையும் கீழே அமர்ந்து செய்தோம் என்று நினைத்துவிடாதீர்கள். வாழ்வின் அடிப்படையை ஆழமாகப் புரிந்து, இந்த உடல் எப்படி வேலை செய்கிறது என்பதை அறிந்து, இந்த உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதற்காக தரையுடனான தொடர்பு அவசியம் என்பதை உணர்ந்ததால்தான் இந்த பழக்கத்தை உருவாக்கினார்கள்.