நம்மில் பலர் சில விஷயங்களை அற்புதங்கள் என்று எண்ணி ஒரு பிம்பம் உருவாக்கியுள்ளோம். தண்ணீரில் நடப்பது, கையிலிருந்து விபூதி வரவைப்பது, காற்றில் மிதப்பது என்றெல்லாம் கேள்விப்படும் அற்புதங்கள் உண்மையானவையா? இந்த அற்புதங்கள் எப்படி சாத்தியம்? இதோ சத்குருவின் பதில்...

Question: சத்குரு, நாங்கள் அற்புதங்கள் என்றும் குணப்படுத்துதல் என்றும் பல விஷயங்களைச் சொல்கிறோம். மருத்துவ அறிவியலில் விளக்கப்பட முடியாத இந்த அம்சங்களைப் பற்றி நீங்கள் எங்களுக்கு விளக்குவீர்களா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

வாழ்க்கை பல விதங்களில் செயல்படுகிறது. உங்களுக்கு ஏதாவது புரியவில்லை என்றால் அதை உடனே அற்புதம் என்று சொல்லிவிடுவீர்கள். உதாரணத்திற்கு உங்களுக்கு மின்சாரம் பற்றி எதுவும் தெரியாது என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த அரங்கம் முழுவதும் இருட்டில் இருக்கிறது. நான் ஒரு பொத்தானை அழுத்தினால் ஒளி, வெள்ளம் போல் பாயும் என்று நான் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நம்பமாட்டீர்கள். நான் அந்தப் பொத்தானை அமுக்குகிறேன், வெளிச்சம் தோன்றுகிறது. உடனே நீங்கள் என்னை என்ன சொல்லுவீர்கள்? ‘கடவுளின் தூதுவர்’ என்பீர்கள். ‘கடவுளின் புதல்வன்’ என்பீர்கள் அல்லது ‘கடவுளே நீங்கள்தான்’ என்பீர்கள். என்ன காரணம்? மின்சாரம் எப்படி செயல்படுகிறது என்று உங்களுக்குத் தெரியவில்லை. அதேபோல் வாழ்க்கை பல்வேறு விதங்களிலும் செயல்படுகிறது. நீங்கள் உங்களை ஸ்தூல அளவிலும், தர்க்க அளவிலும் நிறுத்திக்கொண்டீர்கள். அனுபவத்தில் ஸ்தூல நிலையிலேயும், சிந்தனையில் தர்க்க அளவிலேயும் நிறுத்திக்கொண்டு இதைத் தாண்டி எது நிகழ்ந்தாலும் அதை ஓர் அற்புதம் என்கிறீர்கள்.

அற்புதம் என்ற ஒன்று இருக்குமேயானால், இந்த பிரபஞ்சத்தில் படைக்கப்பட்டிருக்கிற ஒவ்வொன்றும் ஒரு அற்புதம். ஒவ்வொரு அணுவும் ஓர் அற்புதம், இல்லையா?

இதைத்தான் நான் உங்களுக்கு திரும்பத் திரும்ப நினைவுபடுத்துகிறேன். அற்புதம் என்ற ஒன்று இருக்குமேயானால், இந்த பிரபஞ்சத்தில் படைக்கப்பட்டிருக்கிற ஒவ்வொன்றும் ஒரு அற்புதம். ஒவ்வொரு அணுவும் ஓர் அற்புதம், இல்லையா? இந்தச் சின்னஞ்சிறிய அணு, இதில் மூன்று விஷயங்கள் சுற்றிக்கொண்டிருக்கின்றன. இதை உடைப்பீர்களேயானால், அதில் கிளம்புகிற ஒரு குண்டு இந்த பூமியையே அழிக்க முடியுமென்றால் அதுதானே அற்புதம். ஒவ்வொரு அணுவும் ஓர் அற்புதம். இல்லையென்றால், அற்புதங்கள் என்று ஏதுமில்லை. எல்லாமே இயல்பாக இருக்கிறது. அதை நீங்கள் இயல்பு என்று அழைத்தாலும் சரி, அற்புதம் என்று அழைத்தாலும் சரி, அது ஒன்றுதான். பெயர்கள்தான் வேறு. உங்கள் கற்பனைக்குள், உங்கள் அனுபவத்திற்குள் வராத ஒன்றை அற்புதம் என்று சொல்ல முயல்கிறீர்கள். நீங்கள் நினைப்பது போன்று அற்புதங்கள் ஏதுமில்லை. உங்களுடைய மருத்துவ அறிவியல் உங்களை இந்த மனித உடலோடு நிறுத்தி வைத்திருக்கிறது. அதைத்தாண்டி எது நடந்தாலும் அதை நீங்கள் உடனே அற்புதம் என்று சொல்லிவிடுகிறீர்கள்.

கடந்த முறை நான் அமெரிக்காவுக்கு வந்திருந்தபோது டக்ளஸின் முழங்கால் சவ்வு கிழிந்திருந்தது. சொல்ல முடியாத வலியில் இருந்தார். அவர் ஏற்கனவே இந்தியாவில் ஓராண்டு காலம் யோக ஆசிரியர் பயிற்சியை மேற்கொண்டார். பின்னர் அமெரிக்காவுக்குத் திரும்பினார். திடீரென்று அவருடைய முழங்கால் தசை பெரிதும் வலிக்கத் தொடங்கியது. அவரால் வஜ்ராசனாவில் கூட அமரமுடியவில்லை. அதேநேரத்தில் அவர் மனதில் வேறு ஏதோ ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. என்னைச் சுற்றி சில விசித்திரமான விஷயங்களை அவர் எண்ணிக் கொண்டிருந்தார். நான் அவரை அப்படியே இருக்க அனுமதித்தேன். பல வகைகளில் அவர் எனக்கு அதைச் சொல்ல முயன்று கொண்டு இருந்தார். வார்த்தைகளில் அல்ல. ஆனால் அவருடைய செயலில், அவருடைய அசைவுகளில் தெரிந்தும் தெரியாமலும் தன்னுடைய முழங்கால் தசை வலிக்கிறது என்றும், இந்தியாவுக்கு திரும்புவது அவருக்கு சாத்தியமில்லை என்றும் எனக்குத் தெரிவிக்க முயன்று கொண்டிருந்தார். பிறகு சிகாகோவில் ஒரு மருத்துவரிடம் போனார். அவர் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்ய வேண்டும் என்றார். ஸ்கேன் செய்தபின், "உங்கள் முழங்கால் தசை கிழிந்திருக்கிறது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்" என்று சொன்னார்கள். "அது வெறுமனே கிழியவில்லை. அந்த முழங்கால் தசையின் துகள்கள் அந்த இணைப்புக்கு நடுவில் சிக்கிக் கொண்டிருக்கின்றன. அதனால்தான் இவ்வளவு வலி இருக்கிறது" என்றார்கள். நகரும்போதெல்லாம் அவருக்கு மிகவும் வலித்தது. எனவே அந்த எம்.ஆர்.ஐ ஸ்கேனை என்னிடம் கொண்டு வந்து காண்பித்தார். "அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்றார்கள். பத்தாயிரம் டாலர் செலவாகும். அப்படியானால் அதை சம்பாதிக்க நான் வேலைக்குப் போக வேண்டும். இந்தியாவிற்கு திரும்ப வர இயலாது" என்றார். "மருத்துவர் சொல்வதைப் பற்றி எல்லாம் கவலைப்படாதீர்கள்" என்று நான் சொன்னேன்.

பிறகு, நான் இந்த நாட்டை விட்டுக் கிளம்ப நான்கு ஐந்து நாட்கள்தான் இருந்தன. டக்ளஸும் என்னோடு கிளம்ப வேண்டி வந்தது. அவர் என்னிடம் வந்து கேட்டார். "நான் என்ன செய்வது? நான் அறுவை சிகிக்சை மேற்கொள்ள வேண்டி இருக்கும் என்கிறார்களே!" என்று. நான் சொன்னேன், "ஆனால் நீங்கள் தியானம் செய்ய வேண்டும் என்று என்னிடம் சொன்னீர்களே??" என்று. "எனக்கு தியானம் செய்யவேண்டும் என்றுதான் ஆசை. தியானத்தில் இன்னும் ஆழ்நிலைகளைப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்" என்றார். ஒரு தியான அன்பருக்கு, காலின் கீழ்ப்பகுதி ஒரு பெரிய சிக்கல் இல்லையா? இப்போது உங்கள் முழங்காலுக்குக் கீழே எடுத்துவிட்டால் உங்களுக்குத் தெரியும். உட்கார்ந்து தியானம் செய்வது அவ்வளவு எளிதாக இருக்கும். ஏனென்றால் காலில் வலியே இருக்காது. நான் சொன்னேன், "இந்தியாவில் உங்களுடைய இரண்டு கால்களையும் எடுத்துவிடுவோம். பிறகு நீங்கள் எப்போதும் உட்கார்ந்து தியானம் செய்து கொண்டே இருக்கலாம். உங்களுக்கு பெரிய தியானியாக வேண்டும் என்றுதானே ஆசை. இன்னும் ஆழ்ந்த தியானங்களுக்குப் போக வேண்டும் என்கிறீர்கள். அப்படியானால் என்ன? உங்கள் இரண்டு கால்களையும் எடுத்துவிடுவோம்" என்று சொன்னேன். "வேண்டாம், வேண்டாம். அதை செய்யாதீர்கள்" என்று அலறினார். "சரி, உங்கள் இஷ்டம். என்ன வேண்டுமோ செய்யுங்கள்" என்று சொன்னேன். அவர் மிகவும் சிரமப்பட்டு சிரமப்பட்டு இந்தியாவுக்கு திரும்பினார்.

வாழ்க்கை பலவிதங்களில் செயல்படுகிறது. நீங்கள் உங்களை ஸ்தூல அளவிலும், தர்க்க அளவிலும் நிறுத்திக் கொண்டிருக்கிறீர்கள். அதைக் கடந்து நடப்பதை எல்லாம் நீங்கள் அற்புதம் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள்.

அப்போது எல்லோரும் இமயமலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தோம். இமயமலையில் 12 நாட்களில் 85 கி.மீ. மலையேற்றம் நடக்கும். முன்னதாக நாங்கள் மலையேறுகிற குழுவை எல்லாம் நம் ஆசிரமத்திற்கு பின்னால் இருக்கிற பெரிய மலைக்கு அழைத்துக் கொண்டு போனோம். இவரும் வந்தார். அங்கே இவர் என்னிடம் வந்து கேட்டார், "ஒருமுறை நான் இமயமலைக்கு வரலாமா?" என்று. நான் சொன்னேன், "நீங்கள் கால்களை அகற்றத் தயாராவீர்கள் என்று நினைத்தேன். இமயமலைக்கு நீங்கள் எப்படி போகப் போகிறீர்கள்? அங்கிருக்கும் சுமை சுமக்கிற கழுதைகளைக் கொல்ல எங்களுக்கு எண்ணமில்லை. இருந்தாலும் பரவாயில்லை. இமயமலைக்கு நீங்கள் வாருங்கள்" என்றேன். உடனே அவருக்கு ஞாபகம் வந்தது. "அப்படியானால் என்னுடைய கால்கள்" என்றார். "உங்களுடைய கால்களை விட்டுவிட்டு வாருங்கள்" என்றேன்.

அவர் இமயமலைக்கு வந்தார். என்னோடு இணையாக 80 கி.மீ. நடந்தார். பொதுவாக நான் எல்லோரையும் விட்டுவிட்டு வேக வேகமாக முன்னால் போய்விடுவேன். இவர் என்னுடைய பையையும் சுமந்து கொண்டு நான் எங்கே போனாலும் எனக்கு இணையாக நடந்து வந்தார். அதனால், நான் எல்லோரிடமும் போய் விளம்பரப்படுத்தினேன். "இந்த மனிதர் என்னைப் பத்தாயிரம் டாலருக்கு ஏமாற்ற முற்பட்டார்" என்று. "ஒரு போலியான எம்.ஆர்.ஐ. அறிக்கையை என்னிடம் காண்பித்தார்" என்று எல்லோரிடமும் போய் சொன்னேன். என்னிடம் கேட்டார் "உண்மையில் என்னுடைய காலுக்கு என்ன ஏற்பட்டது? அவ்வளவு வலியாக இருந்தது. இப்பொழுது வலியே இல்லையே!" என்று.

நீங்கள் விரும்பினால் இதை அற்புதம் என்று அழைத்துக் கொள்ளலாம். நான் இதை இன்னொரு விதமான அறிவியல் என்று சொல்கிறேன், அவ்வளவுதான். இது இன்னொரு விதமான அறிவியல். வாழ்க்கை பலவிதங்களில் செயல்படுகிறது. நீங்கள் உங்களை ஸ்தூல அளவிலும், தர்க்க அளவிலும் நிறுத்திக் கொண்டிருக்கிறீர்கள். அதைக் கடந்து நடப்பதை எல்லாம் நீங்கள் அற்புதம் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள். இந்த உயிர்சக்திதான் உங்கள் முழு உடலையும் உருவாக்கியது. உங்கள் எலும்புகள், சதைகள், இதயம், சிறுநீரகம் என்று எல்லாவற்றையும் உருவாக்கிய உயிர்சக்தியால், ஒரு சிறு தசையை உருவாக்க முடியாதா என்ன? உங்கள் சக்திநிலை முழுவதும் ஒரே இடத்தில் சமநிலையோடு வைக்கப்பட்டிருந்தால் இந்த உடலை மறு உருவாக்கம் செய்வது அதற்குச் சாத்தியம்.

barsen @ flickr