இயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்... பகுதி 3

"மழை இல்ல; தண்ணியும் இல்ல. அதான் இருக்குற நெலத்த வித்திட்டு, பட்டணத்துக்குப் போறோம்!" இந்த வசனத்தை கேட்டு கேட்டு சலித்துவிட்டது. ஆனால், இப்படிச் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை. மழை வழக்கம்போல பெய்யத்தான் செய்கிறது. ஆனால், மழைநீர் நிற்காமல் ஓடிவிடுகிறது. ஏன் இந்த நிலை?! தொடர்ந்து படிக்கும்போது தண்ணீரைப் பிடித்து வைக்க தேவையானவை என்ன என்பதை அறியலாம்!!

ஆனந்த்,

ஈஷா பசுமைக் கரங்கள்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

காவிரியைப் பற்றி பேசும்போது கல்லணையைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது. காவிரி டெல்ட்டா பகுதிகளுக்கு நீர்ப்பாசனம் வழங்கும் நோக்கில் இரண்டாம் நூற்றாண்டில் கரிகாலச் சோழன் கல்லணையைக் கட்டினான். கல்லணையின் நினைவுகள் மறக்க முடியாதவை. அப்போதெல்லாம் கல்லணையில் நீர்நிலை கோடைகாலத்திலும் கூட வற்றியதை நான் பார்த்ததில்லை. இப்போது மழைக்காலத்தை தவிர மற்ற காலங்களில் வெகு சிறிதளவே தண்ணீரைக் காணமுடிகிறது.

20 வருடங்களுக்கு முன்பு, யாரோ என்னிடம் கூறினார்கள்... இன்னும் சில வருடங்களில் நாம் தண்ணீரை விலைகொடுத்து வாங்க வேண்டியிருக்குமென்று! நான் அவர்களை கேலி செய்தேன்.

மழையளவு குறைந்து விட்டது. தண்ணீர் பற்றாக்குறை என்றெல்லாம் கூக்குரல்கள் ஆங்காங்கே ஒலித்த வண்ணம் இருக்கிறது. இந்த அபரிமிதமான குரல்கள் மழையளவு குறித்த சந்தேகத்தை எழுப்பினாலும், உண்மையை ஆராய்ந்து பார்த்தால், மழையளவு குறைந்துவிடவில்லை என்ற உண்மை புரிகிறது!

வருடத்தின் சராசரி மழையளவு குறையவே இல்லை. முன்பு 120 - 150 நாட்களில் பெய்த மழை தற்போது 30 - 40 நாட்களில் கொட்டித் தீர்த்து விடுகிறது. மழை பெய்யும் நாட்கள் குறைந்திருக்கின்றனவே தவிர மழையளவு குறையவில்லை. அப்படியானால் ஏன் இந்த நிலை?! அதற்கான காரணம் என்னவென்றால், மழையைப் பிடித்து வைக்கும் தாரக மந்திரத்தை நாம் அழித்ததே காரணம்! மரம் எனும் அம்மந்திரம் மண்ணில் வேரூன்றி மண்ணைப் பிடித்து வைக்கிறது. மண்ணானது மழை நீரை தக்க வைத்து நிலத்தடிக்கு அனுப்புகிறது. ஆனால், தற்போது மரங்கள் பெருமளவிற்கு அழிக்கப்பட்டுவிட்டன. மண்வளம் அரிக்கப்பட்டு விட்டது. இதனால் மழைநீர் நிற்காமல் ஓடிவிடுகிறது. பற்றாக் குறைக்கு சமூக விரோதிகளால் சட்டவிரோதமாக அரங்கேறும் மணல் கொள்ளை வேறு!

"மனிதா...!

உன்னை மண்வாரி தூற்றுவதற்கேனும்

ஆற்றிடம் விட்டுவை சிறிது மணலை!" என்ற ஒரு கவிதை வேடிக்கையாக வேதனையை ஆழமாய்ச் சொல்கிறது.

20 வருடங்களுக்கு முன்பு, யாரோ என்னிடம் கூறினார்கள்... இன்னும் சில வருடங்களில் நாம் தண்ணீரை விலைகொடுத்து வாங்க வேண்டியிருக்குமென்று! நான் அவர்களை கேலி செய்தேன். அப்போதெல்லாம் பாட்டிலில் தண்ணீரை நிரப்பிக் கொண்டு செல்வதென்பது சுற்றுலா போன்ற நீண்டதூர பிரயாணத்தின்போது மட்டுமே! ஆனால், இப்போது பக்கத்து ஊருக்குச் சென்றால் கூட அங்கே பாட்டில் நீரை விலைக்கு வாங்கி அருந்த வேண்டியுள்ளது. கிணற்றில் நீர் இரைத்து மண்பானையில் சேகரித்து வைத்து, தாகம் தீர அருந்திய தண்ணீர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இப்போது, நிலத்தடி நீர் குடிக்கும் நிலையில் இல்லை. முதலில் நிலத்தடியில் நீர் இருப்பதே அரிதானதாகிவிட்டது.

இந்நிலைகளுக்கெல்லாம் காரணம் மரங்கள் அழிக்கப்பட்டதும் மக்கள் தொகை பெருகியதும்தான் என்று தெளிவாகவே புரிகிறது. ஆனாலும் மக்கள் இன்னும் விழிப்புணர்வு கொண்டதாய் தெரியவில்லை. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஆளுக்கொரு மரம் நட்டு வளர்த்தாலே பெரும் மாற்றம் வந்துவிடும். சத்குரு சொல்வதுபோல் நாம் சாப்பிட்டு விட்டு கைகழுவும் தண்ணீர் அந்த மரக்கன்றுகளுக்கு போதுமானதாக இருக்கும். நாம் அதற்கான முயற்சிகளை செய்வது நம் கைகளில்தான் உள்ளது.

இயற்கை இன்னும் பேசும்!

இத்தொடரின் பிற பதிவுகள்: இயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்