சென்ற வருடம் இதே ஜனவரி மாதத்தில் அனைத்து வார மாத இதழ்களும் 'கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கேன்சரால் பாதிப்பு' போன்ற வாசகங்களுடன் பெட்டிக்கடைகளில் தொங்கிக் கொண்டிருந்தன. 'பாவம்ப்பா சின்ன பையன்', 'யுவராஜ் சிங் அவ்வளவுதான்... ஆட்டம் முடிஞ்சது' என ஊரெங்கும் பரிதாபப் பேச்சுக்கள்.

ஆனால் இன்றோ 'யுவராஜ்' என்ற பெயருக்கேற்ப தன்னம்பிக்கையின் இளவரசனாக இந்திய அணியில் இடம்பிடித்து பந்துகளைப் பறக்கவிடுகிறார். கேன்சர் நோயிலிருந்து யுவராஜ் சிங் மீண்டு வந்ததற்கு மருத்துவ வளர்ச்சியும் தொழில்நுட்பமும் மட்டுமே காரணமா?!

இங்கே யுவராஜ் சிங்கின் மறுபிரவேசம் பற்றி சத்குரு பேசுகிறார்.


Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:


யுவராஜ் சிங்கிற்கு கேன்சர் மட்டும் வந்திருக்காவிட்டால் இன்று நாம் போற்றும் கதாநாயகனாக அவர் உருவாகியிருக்க முடியுமா என்ன? அவர் மீண்டும் உயிர் பெற்று வந்திருக்கும் விதத்தால் மக்கள் அவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
நீங்கள் தொடர்ந்து கிரிக்கெட் ஆட்டங்களை கவனித்து வந்திருந்தால் யுவராஜ் சிங் என்றைக்குமே மனோதிடத்தில் முதலாவதாகத்தான் இருந்து வந்திருக்கிறார் என்பதை கவனித்திருப்பீர்கள் அவர் மிகச் சிறந்த ஆட்டத்திறம் கொண்டவராக வேண்டுமானால் இல்லாமலிருக்கலாம். கண்டிப்பாக அவர் ஆட்ட நுணுக்கத்தில் தேர்ந்தவரில்லை. ஆனால் சமீப காலத்தில் நாம் பார்த்தவரை, இவரைப் போல் ஒரு அதிரடி ஆட்டக்காரர் யாரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இவர் வாழ்க்கையையும் அதே போல்தான் கையாளுகிறார் என்பது அவரைப் பார்த்தாலே தெளிவாகத் தெரிகிறது.

மருத்துவ தொழில்நுட்பம் நிச்சயமாக தேவை, மருத்துவத்தின் உதவியில்லாமல் இவர் நிலையைப் பொறுத்த வரை எதுவுமே செய்திருக்க முடியாது. ஆனால் மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள் எல்லாரும் இவரைப் போல் நோயிலிருந்து மீண்டு வருவதில்லை. நோயிலிருந்து நீங்கள் எவ்வாறு மீண்டு வருகிறீர்கள் என்பது நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதைப் பொறுத்தது, உங்கள் மனோதிடத்தைப் பொறுத்தது. மேலும் உங்கள் உடலியக்கமும் இதனை நிர்ணயிக்கும். எந்த நிலைமையிலும் தளாராத மன உறுதி, இது போன்ற சூழ்நிலைகளில் உறுதுணையாய் இருக்கும். ஒரு தீர்மானத்தோடும், விடா முயற்சியோடும் இதை ஒருவரால் செய்ய முடியும் என்றால், அவர் எதிலிருந்தும் சுலபாக மீண்டு வர முடியும்.

உங்களுக்கு நல்லது நேர்ந்தாலும் சரி, கெட்டது நேர்ந்தாலும் சரி, உலகத்தார் அதை எப்படி பார்த்தாலும் சரி, அந்த சூழ்நிலையை உங்களுக்கு சாதகமாக உங்களால் மாற்றியமைத்துக் கொள்ள முடியும். யுவராஜ் சிங்கிற்கு கேன்சர் மட்டும் வந்திருக்காவிட்டால் இன்று நாம் போற்றும் கதாநாயகனாக அவர் உருவாகியிருக்க முடியுமா என்ன? அவர் மீண்டும் உயிர் பெற்று வந்திருக்கும் விதத்தால் மக்கள் அவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த சம்பவம் அவரை துடிப்புடன் நிலைநிறுத்தி இருக்கிறது. இது நடந்திராவிட்டால் அவர் மற்றுமொரு கிரிகெட் வீரராய், பத்தோடு பதினொன்றாய் போயிருப்பார். மெல்ல மக்கள் அவரை மறந்து போயிருப்பார்கள். தற்சமயம் அவர் களத்திற்கு திரும்பி வந்திருக்கும் அழகு நம் தேசத்தில் பெருத்த மதிப்பைப் பெறப் போகிறது.