Question: சத்குரு, இந்த சராசரி வாழ்க்கையை விட்டுவிட்டு ‘என் உண்மையான தன்மையை’ அறிய விரும்புகிறேன். ஆனால் என் குடும்பத்தைப் பற்றி நினைக்கும் கணத்திலேயே இந்த எண்ணத்தில் பின்னடைவு ஏற்படுகிறது. இதை எப்படி அணுகுவது?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

(சிரிக்கிறார்) அப்படியானால் உங்கள் குடும்பத்தினர் இப்போது ‘போலியான உங்களுடன்’ தான் வசிக்கிறார்களா! இதென்ன கொடுமை? நீங்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். தன்னை உணர்தல் என்றாலே இமயமலையில் அமர்ந்து கொள்வது போன்ற பொய்யான எண்ணங்கள் மக்கள் மனதில் உள்ளது.

நீங்கள் உங்கள் தன்மை பற்றி முழுமையாக அறியாவிட்டால், உங்கள் வாழ்வைக்கூட இயல்பாக சுகமாக வாழ முடியாது. அப்படி இருக்கும்பட்சத்தில் ஆனந்தமாக இருப்பது பற்றிய கேள்விக்கே இடமில்லை.

உங்கள் அனுபவத்தில் இல்லாத எதையும் நான் பேச விரும்பவில்லை. அப்படி நாம் பேசும் கணமே நீங்கள் உண்மையிலிருந்து விலகிவிடுவீர்கள். உங்கள் அனுபவத்தில் இல்லாதவற்றை நம்பத் தொடங்கினால், நீங்கள் இப்போது இருக்கும் உண்மை நிலையிலிருந்து விலகிவிடுவீர்கள். துரதிர்ஷ்டவசமாக, ஆன்மீகத்தின் பேரிலும், மதத்தின் பேரிலும் இதுதான் நிகழ்ந்துவிட்டது. கடவுள் என்பவர் அநேக மக்களின் வாழ்வில் ஆற்றல் அளிக்கும் தன்மையாக இல்லாமல் ஆற்றலைக் குறைக்கும் தன்மையாக இருக்கிறார். “தங்கள் உணவு, பிழைப்பு, ஆரோக்கியம், வியாபாரம் போன்றவற்றை தங்களுக்காக கடவுள் பார்த்துக் கொள்வார்” என்று நம்புகிறார்கள். இப்படி நம்பி தங்கள் ஆற்றலை குறைத்துக் கொள்கிறார்கள். தம் அனுபவத்தில் இல்லாததை நம்பி நம்பி இந்த தேசமே ஆற்றல் இழந்துவிட்டது.

எனவே தன்னை உணர்தல் என்பதற்கு குடும்பத்தை விடவேண்டும் என்றெல்லாம் நினைக்காதீர்கள். நடைமுறைக்கு ஏற்ற வகையில் அதைப் பாருங்கள். நீங்கள் ஒரு மோட்டார் சைக்கிள் அல்லது கார் ஓட்ட வேண்டும் என்றால், அதை நீங்கள் எந்த அளவிற்கு தெரிந்து வைத்திருக்கிறீர்களோ, அந்த அளவிற்கு அதன் மேல் உங்களுக்கு ஆளுமையும், சுதந்திரமும் இருக்கும். கார், அலைபேசி, கம்ப்யூட்டர், போன்ற எதுவாக இருந்தாலும், அந்த இயந்திரத்தை எவ்வளவு அறிந்திருக்கிறீர்களோ, அந்த அளவிற்கு அதை உபயோகிக்கும் திறமை உங்களுடன் இருக்கும். அதுபோலவே உங்கள் குடும்பத்தினர், உங்கள் நண்பர், உங்களுக்கு கீழ் வேலை செய்பவர், உங்களுடன் வேலை செய்பவர், இப்படி யாராக இருந்தாலும், அவர்களை நன்றாக தெரிந்து கொண்டால் அந்த அளவிற்கு அவர்களுடன் சிறப்பாக செயல்படுவீர்கள்.

இதை நீங்கள் உங்களுக்கும் பொருத்திப் பார்க்க முடியும். நீங்கள் இதை (தன்னை சுட்டிக் காட்டுகிறார்), உங்கள் உயிர்த்தன்மையைப் பற்றி எவ்வளவு அதிகம் அறிகிறீர்களோ, அந்த அளவிற்கு உங்கள் வாழ்வுடன் நெருங்கி இருக்க முடியும். உங்களை நீங்கள் சிறப்பாகவும் கையாள முடியும். தன்னை உணர்தல் என்பது, இப்போது உங்களை நீங்கள் அறிந்து கொண்டுள்ளதை விட இன்னும் அதிகமாக, ஆழமாக, முழுமையாக அறிந்து கொள்வது. நீங்கள் உங்கள் எண்ண ஓட்டத்தைப் பற்றி அறிந்திருக்கலாம். உங்கள் உணர்வுகள் பற்றி அறிந்திருக்கலாம். உளவியல் ரீதியாக உங்களை நீங்களே ஆய்வு செய்திருக்கலாம். ஆனால் உங்கள் உயிர்த்தன்மை பற்றி எதுவுமே அறியவில்லை, அல்லவா? இந்த உயிர் எப்படி நிகழ்கிறது? எங்கிருந்து வந்தது? எங்கே செல்கிறது? இதன் தன்மை என்ன? எதுவுமே உங்களுக்குத் தெரியவில்லை. பிறகு இதை எப்படிக் கையாள்வீர்கள்? இதை நீங்கள் கையாள்வது என்பது ஒரு தற்செயலான செயலாகத்தான் இருக்க முடியும். அதேபோல் உங்களைச் சுற்றி உள்ள மனிதர்களை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையென்றால், அவர்களையும் தற்செயலாகத்தான் கையாள்வீர்கள்.

நீங்கள் இப்படி தற்செயலாக வாழும்போது, ஒரு பேராபத்து போன்றவராக இருக்கிறீர்கள். உங்கள் வாழ்வில் பதற்றம், பயம் போன்றவற்றை நீங்கள் தவிர்க்கவே முடியாது. இப்போது உங்கள் வாழ்வு இப்படித்தான் நிகழ்கிறது. எனவே தன்னை அறிதல் என்பது ஏதோ விந்தையான விஷயம், இமாலய குகைக்குள் அல்லது வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் யாரோ ஒரு யோகி நிகழ்த்திக் கொள்வது என்று நினைத்துவிடாதீர்கள். அப்படி அல்ல. உங்கள் வாழ்க்கையை நீங்கள் எளிதாக, சுலபமாக வாழ வேண்டும் என்றால், நீங்கள் இதைப்பற்றி (தன்னை சுட்டிக்காட்டுகிறார்) அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் தன்மை பற்றி முழுமையாக அறியாவிட்டால், உங்கள் வாழ்வைக்கூட இயல்பாக சுகமாக வாழ முடியாது. அப்படி இருக்கும்பட்சத்தில் ஆனந்தமாக இருப்பது பற்றிய கேள்விக்கே இடமில்லை.

மக்கள் இதை மிகவும் புத்திசாலித்தனமான கேள்வி என்று நினைக்கிறார்கள். ஆனால் இதுதான் மிகவும் முட்டாள்தனமான கேள்வி. இந்த உயிர் என்பதன் தன்மையை முழுமையாக உணராமல் போனதால்தான், இதைச் செய்வதா, அதைச் செய்வதா போன்ற கேள்விகள் வந்துவிட்டன. மனிதனாக இருப்பதன் மகத்துவத்தை உணராததால் தான், உங்கள் மனதில் இது போன்ற கிறுக்குத்தனமான கேள்விகள் வந்துவிட்டன. மனிதராக பிறப்பதன் மகத்துவத்தை அறிந்துவிட்டால், இந்தக் கேள்விகள் காணாமல் போய்விடும். தன்னை உணர்தல் என்பது மனிதருக்கு கொடுக்கப்படும் வாய்ப்பு அல்ல. அது ஒரு கட்டாயம். நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் அதை நிகழ்த்திக் கொள்ள முடியும்.