Question: சத்குரு, தன்னை உணர்தல் என்பதும், ஞானமடைதல் என்பதும், இரண்டும் ஒன்றுதானா? இல்லையென்றால், அவற்றுள் என்ன வேறுபாடு உள்ளது?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஓ, இது ஒரு தொழில்நுட்ப வகையிலான கேள்வியாக இருக்கிறதே! நீங்கள் தேவையற்ற அநேக விஷயங்களைப் படிப்பதுதான் இங்கே பிரச்சனையாக உள்ளது. தன்னை உணர்தல், கடவுளை உணர்தல், உள்நிலை உணர்தல் இப்படி அகராதியிலுள்ள வார்த்தைகளையெல்லாம் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்? இந்த வார்த்தைகள் உங்களுக்கு எந்த உணர்தலையோ அல்லது அதற்கான சாத்தியங்களையோ கொண்டு வரப்போவதில்லை.

‘நான்’ என்பது என்ன என்று உணர்ந்தால்தான் நாம் நல்லவிதமாக வாழ்க்கையை நடத்த முடியும். இல்லையெனில் தற்செயலாகத்தானே வாழ்க்கையை நடத்திக்கொள்ள முடியும்.

அப்படியானால், தன்னை உணர்தல் என்றால் என்ன? மிகவும் எளிமையாகக் கூற வேண்டுமென்றால், இப்போது உங்களால் உணரமுடியாத, நீங்கள் அறிந்திராத எதைப் பற்றிப் பேசினாலும், அது உங்களை சில நம்பிக்கைகளுக்கு மட்டும்தான் இட்டுச்செல்லும். அதீதமான கற்பனைகளுக்கு உங்களை இழுத்துச் செல்லும். நீங்கள் பார்த்திராத கடவுளைக் குறித்து நீங்கள் நம்பத் துவங்கும்போதே, உண்மையிலிருந்து விலகிவிடுகிறீர்கள் என்பதை தயவுசெய்து பாருங்கள். உங்களுடைய அனுபவத்தில் இல்லாத எந்த ஒரு நிதர்சனத்தை நீங்கள் நம்பத் துவங்கினாலும், உங்களுடைய நிஜத்திலிருந்து நீங்கள் விலகிவிடுகிறீர்கள்.

இந்த உலகில், கடவுள் உங்களை செயல்பட வைப்பதற்கான ஒரு கருவியாக இல்லாமல், உங்களை முடமாக்கும் கருவியாக ஆகிவிட்டார். உங்களுடைய அனுபவத்தில் இன்னமும் நிகழாத எத்தனையோ விஷயங்களை நீங்கள் நம்புவதால், துரதிருஷ்டவசமாக இப்படியாகிவிட்டது. பெரும்பாலான மக்கள், தங்கள் உண்மையான செயல்திறனைக் கூட இழந்து காணப்படுகிறார்கள். சமூகங்களும், தேசங்களும் இந்த நம்பிக்கைகளின் காரணமாகவே முடங்கிப்போய் காணப்படுகின்றன. ஆகவே, ஞானமடைதல் அல்லது தன்னை உணர்தல் என்ற வார்த்தைப் பிரயோகங்களினால் உங்களையே முடமாக்கிக் கொள்ளாதீர்கள்.

உங்களுக்குப் புரியும்படி கூறுவதென்றால், நீங்கள் ஒரு வாகனத்தை வைத்திருக்கிறீர்கள். அந்த வாகனத்தை எந்த அளவுக்கு நுட்பமாக அறிந்திருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு சிறப்பாக இயக்குவீர்கள், இல்லையா? உங்கள் வாழ்க்கையில் உங்கள் உபயோகத்திற்கு உட்பட்டவற்றைப் பற்றி அதிகம் அறிந்து கொள்ளும்போது, அதனுடன் சிறப்பாக ஈடுபட முடிகிறது. அப்படித்தானே? உங்களுடைய கணவரோ, மனைவியோ, குழந்தையோ யார் ஒருவருடன் ஈடுபட வேண்டுமென்றாலும், அவர்களைப் பற்றி அதிகமாக அறிந்துகொள்வது, அவர்களுடனான மேலான உறவுக்கும், ஈடுபாட்டுக்கும் வழிவகுக்கிறது. இல்லையா? ஆகவே இதனை நீங்கள் புரிந்து கொள்ளும்போது, அதே நுட்பத்தை இதற்கும் (உள்தன்மைக்கும்) பொருத்திப் பார்க்கலாம் அல்லவா? உங்களின் தன்மை பற்றி நீங்கள் உணர்ந்து கொள்ளவில்லை என்றால், அதனை எப்படி நீங்கள் கையாள முடியும்? தற்செயலாகத்தான் கையாள முடியும். இல்லையா?

‘நான்’ என்பது என்ன என்று உணர்ந்தால்தான் நாம் நல்லவிதமாக வாழ்க்கையை நடத்த முடியும். இல்லையெனில் தற்செயலாகத்தானே வாழ்க்கையை நடத்திக்கொள்ள முடியும். தன்னை உணர்தல் என்றால், இமயமலையின் குகைகளுக்கு சென்றுவிட வேண்டும் என்று பொருளல்ல. நீங்கள் வாழ்க்கையை முழுமையான அளவில் அனுபவிக்க வேண்டுமென்றாலும், குடும்பம் நடத்திக்கொள்ள வேண்டுமென்றாலும், தொழில் செய்ய வேண்டுமென்றாலும், நல்லவிதமாக நீங்கள் வாழ வேண்டுமென்றாலும், இந்த உயிர் பற்றி நீங்கள் புரிந்து கொண்டால்தானே அவையெல்லாம் நடக்கும்? இதைப் பற்றிய அறிவே இல்லாமல் வாழ முயற்சி செய்தால் நன்றாக வாழ்வது என்பது தற்செயல்தானே?

உங்களைச் சுற்றியிருப்பவர்கள் மற்றும் சூழ்நிலைகள் உங்களுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல இருந்தால் அப்போது நீங்கள் நல்லவிதமாக வாழ்வீர்கள். இயல்பாகவே நீங்கள் நன்றாக வாழ முடியாது. வாழ்க்கை இப்போது அப்படித்தானே ஆகிவிட்டது? இந்த நிலை ஏனென்றால், இந்த உயிர் பற்றி அறிவே இல்லாமல் வாழ்வதற்கு நாம் முயன்று கொண்டிருக்கிறோம். தன்னை உணர்தல் என்றால், வேறு ஏதோ புரியாத விஷயம் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். அதற்கு பலவிதமான பரிமாணங்கள் இருக்கின்றன. ஆனால் இப்போது நாம் இருக்கும் பரிமாணத்தில் இந்த உயிரின் தன்மையைப் பற்றி முழுமையாக உணராமல், நல்லவிதமாக வாழ்வதற்கு மட்டுமே முயற்சி செய்தால், இந்த வாழ்க்கை மிகவும் தற்செயலானதாகத்தான் இருக்கும். ஒரு தற்செயலான வாழ்க்கை நடக்கின்றபோது, பாதுகாப்பற்ற தன்மையும், பயமும் ஏற்படுவது இயற்கைதான்.

‘தன்னை உணர்தல்’ என்றெல்லாம் பெயர் கொடுக்க வேண்டாம். இந்த உயிர் பற்றி நம் அனுபவத்தில் சிறிது புரிந்துகொள்ள வேண்டும், அவ்வளவுதான். வேறு எவரோ கூறிய எந்தக் கதையும் தேவையில்லை. உயிர் பற்றி அனுபவப்பூர்வமாக புரிந்து கொள்வதைத்தான் தன்னை உணர்தல் என்று கூறமுடியும். உள்நோக்கி ஒரு அடி எடுத்து வைத்துவிட்டால், அதற்குப்பிறகு இது தானாக நிகழும். இந்த உயிர் பற்றி புரிந்துகொள்ள வேண்டுமென்றால், புத்தகம் படித்தாலும் கீழும், மேலும், சுற்றுமுற்றும் எங்கே பார்த்தாலும் எதுவும் நேராது. நமக்குள்ளே பார்க்க வேண்டும். நீங்கள் உங்களை உணர்ந்துகொள்ள விரும்பினால் கீழும், மேலும் பார்ப்பது தீர்வாகாது. உங்களுக்குள்ளே பார்ப்பதைத் தவிர வேறு வழியே இல்லை.

அதனால்தான் யோகா என்கின்ற இந்தக் கருவியை உருவாக்கினோம். எதற்காக என்றால் இதை நீங்கள் தினமும் பயிற்சி செய்து வந்தால், இந்த உயிர் பற்றி, அனுபவப்பூர்வமாகப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். எனவே இதனை அனுபவப்பூர்வமாக உணருவதற்கான ஒரு கருவியாக யோகா செயல்படுகிறது.