அவ்வப்போது நிகழும் 'மூட் ஸ்விங்ஸ்' எனப்படும் மாறிக்கொண்டே இருக்கும் மனநிலைகள்... இது என் பிரச்சினையல்ல. இன்னும் சொல்லப்போனால் இது பிரச்சினையே அல்ல. மனிதன் என்றால் எல்லாம் இருக்கும்தான். எல்லாம் சூழ்நிலை சம்பந்தப்பட்டது, மற்றவர்கள் சம்பந்தப்பட்டது என்று சொல்பவர்கள் நம்மில் எத்தனை பேர்? இதோ அவ்வெண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Question: ஈஷா யோகா மையத்திற்கு நான் வந்தது முதல், ஒருநாள் அன்பாக இருக்கிறேன், இன்னொருநாள் வருத்தமாக இருக்கிறேன், ஒருநாள் நட்புடன் இருக்கிறேன், இன்னொருநாள் குரைக்கும் நாய் ஆகிறேன். இந்த மனோபாவங்கள் முன்பும் ஏற்பட்டது. ஆனால் எந்தக் காரணமுமில்லாமல் இந்த உணர்ச்சிகள் ஏற்படுகின்றன என்று இங்கேதான் உணர்ந்து கொண்டேன்.

சத்குரு:

உங்களுக்குத் தெரியுமா, இது பருவமழைக் காலம். எந்த நேரத்திலும் மேகம் கூடும், எந்த நேரத்திலும் மழைபொழியும், மேலும் சூரியவெளிச்சமும் இருக்கும். இத்தனை நாட்களாக உங்களின் உணர்ச்சிகள், உங்களின் எண்ணங்கள், உங்களுடைய பிரச்சினைகள் எல்லாமே யாரோ ஒருவருடன் சம்பந்தப்பட்டவை என்றுதான் நீங்கள் நினைத்திருந்தீர்கள். அது யாருடனும் சம்பந்தப் பட்டதில்லை என்று நீங்கள் உணரத் துவங்கியிருப்பது நல்லதுதான். அது உங்களுடைய பைத்தியக்காரத்தனம் தான். இதை உணர்ந்துகொள்ள, நிறைய மக்கள் தன் முழு ஆயுட்காலத்தையும் எடுத்துக் கொள்கின்றனர். அவர்களுக்கு 70 வயது ஆகியிருந்தாலும், அவர்களுடைய உணர்ச்சிகளும், எண்ணங்களும் மற்றவர்களுடன் சம்பந்தப்பட்டவை என்றுதான் நினைக்கின்றார்கள். அவர்களுக்குள்தான் அவர்களது அனுபவத்தின் இருப்பிடம் உள்ளது என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. உங்கள் அனுபவத்தின் இருப்பிடம் உங்களுக்குள்ளேதான், இல்லையா?

உலகில் ஒரேயொரு பிரச்சினைதான் உள்ளது, அது நீங்கள்தான்

இந்தப் பைத்தியக்காரத்தனம் என்பது உங்களுடையது என்றும், அதற்கும் வேறு எவருக்கும் எந்த சம்மந்தமுமில்லை என்பதையும் நீங்கள் உணரத்துவங்கிவிட்டால், பிறகு அதற்கான தீர்வைக் காண்பீர்கள் என நான் எண்ணுகிறேன். அந்தத் தீர்வு என்னவென்றால் நாம் உங்களைக் கரைக்கவேண்டும் என்பதுதான்; உண்மையாக வேறு எந்தத் தீர்வும் இல்லை. உலகில் ஒரேயொரு பிரச்சினைதான் உள்ளது, அது நீங்கள்தான் என்று நான் பலமுறை கூறியுள்ளேன். இந்த ஒரு பிரச்சினையை நீங்கள் கரைத்துவிட்டால், உலகில் உண்மையிலேயே வேறு எந்தப் பிரச்சினையுமில்லை. எனவே, உங்களைக் கரைப்பதற்கு சல்ஃபியூரிக் அமிலம் போதாது. அதைவிட சக்திவாய்ந்தது தேவை.

சிறிதளவு உங்களுக்கு உணர்விருந்தால், மிகச் சிறிதளவேனும், உங்களின் கதவு திறந்தால், ஒரு மில்லிமீட்டர் அளவேனும் கூட, இது உங்களுக்குள் நுழைந்து உங்களைக் கரைத்துவிடும். நீங்கள் இறுக்கமாக மூடப்பட்டிருந்தால், பிறகு அது உங்களைத் தொந்தரவு படுத்தும். அது உங்களைப் பைத்தியக்காரத்தனங்களைச் செய்யவைக்கும். ஏனென்றால் அதுதான் சக்தியின் இயல்பு. நீங்கள் தற்போது இருக்குமிடத்தில் உங்களை இருக்கவிடாது. உங்களை வேகமாக முன்னோக்கிப் பாயவைத்து விடுகிறது.

இதுபோன்ற இடத்தை நாம் நிர்மாணித்திருப்பதன் நோக்கமே, உங்கள் வாழ்க்கையை வேகமாய் முன்னோக்கிச் செலுத்தவேண்டும் என்பதுதான். அநேக மக்கள் தங்களின் 70 வயதில் என்ன உணருவார்களோ, அதனை நீங்கள் 18 வயதில் உணரவேண்டுமென நான் விரும்புகிறேன். அந்த வயதை ஏற்கனவே நீங்கள் கடந்திருந்தால், குறைந்தபட்சம் இப்பொழுதாவது, உங்களுடைய அனுபவங்களின் இருப்பிடம் உங்களுக்கு உள்ளேதான், வேறு எங்குமில்லையென்பதை நீங்கள் உணர்ந்துகொள்ளுங்கள். அதற்கான தருணம் இதுவே. உங்கள் எண்ணங்கள், உணர்ச்சிகள், முட்டாள்தனங்கள் இவற்றுக்கு உங்களைத் தவிர வேறு எவரோடும் எந்த சம்பந்தமுமில்லை. இதனைப் புரிந்துகொண்டால் போதும், நீங்கள்தான் பிரச்சினை என்று உங்களுக்குத் தெரிந்துவிடும். குறைந்தபட்சம், பிரச்சினை என்னவென்று தெரிந்துவிட்டால், அதற்கான தீர்வு சுலபமாகி விடுகின்றது. பிரச்சினையே என்னவென்று தெரியாதபோது, அதற்கான தீர்வு கிடைக்காது, பிரச்சினையினால் நீங்கள் துன்பமடைவீர்கள். இப்பொழுதாவது நீங்கள் பிரச்சினை என்னவென்று அறிந்துகொண்டீர்களே, அதற்கான தீர்வு வெகுதூரத்தில் இல்லை.