சிஸ்கோ கம்பெனியில் ப்ராஜெக்ட் மானேஜராக இருக்கும் ஜோயிதாவின் இரண்டு நேர் எதிர்மறையான அனுபவங்கள் - ஒன்று ஈஷா யோகாவுக்கு முன்னால் நடந்த தாடை அறுவை சிகிச்சையும் மற்றொன்று ஈஷா யோகாவுக்குப் பின்னால் நடந்த மற்றொரு தாடை எலும்பு அறுவை சிகிச்சையும். தனது அறுவை சிகிச்சை பற்றிய அவரின் கதை அவருடைய சொந்த வார்த்தைகளில் இங்கே...

ஜோயிதா:

டாக்டர்கள் கத்தரிக்கோல், துளை போடும் யந்திரம், கத்தி போன்ற ஆயுதங்களை எடுத்து வந்தபோது எனக்கு வயிற்றை கலக்க ஆரம்பித்தது. இவைகளை என் முகத்தில் உபயோகப்படுத்தப் போகிறார்கள் என்று நம்புவது கடினமாக இருந்தது. 11 தையலும் ஒரு சிதைக்கப்பட்ட நரம்பும் கொண்ட ஒரு சிக்கலான ‘மக்சிலோஃபேசியல்’ (maxillofacial) என்ற தாடை எலும்பு சரி செய்யும் சிகிச்சை செய்யத்தான் இத்தனை ஆயத்தங்களும் ஆயுதங்களும்.

joyeeta

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இந்த நாடகம் எனக்கு ஒன்றும் புதிது அல்ல. ஏற்கனவே எனது ஒரு பக்க தாடையில் இந்த அறுவை சிகிச்சை நடந்துள்ளது. சில மாத ஓய்வுக்குப்பின் இப்பொழுது மற்றொரு பக்கத்தை சரி செய்ய வந்துள்ளேன். போன தடவை மிகுந்த மன வேதனை, வீங்கிய முகம், தசைகளில் வலி, பரவும் தொற்று, இதெல்லாம் தாண்டி இரண்டு வார நீராகார பத்திய சாப்பாடு என்று நிறைய அவதிப்பட்டேன். ஒன்றரை மாத சிம்ம சொப்பனமான வாழ்க்கை. இந்த தடவை மூன்று மடங்கு அதிக சிக்கலாக இருக்கும் என்று எனது அறுவை சிகிச்சை மருத்துவர் எனக்கு விளக்கிச்சொல்லி இருந்தார். ஒரு அரக்கன் எனது முகத்தின் நரம்புகளில் தூங்கிக்கொண்டு இருப்பதாகவும் அதனால் எனது வலது பக்கத்தில் உணர்ச்சியை நிரந்தரமாக இழக்க வேண்டி இருக்கும் என்றும் அவர் சொல்லியிருந்தார்.

சத்குருவின் குரலில் ஒலித்த "பிரம்மானந்த ஸ்வரூபா"விலும், "ஓம் நமசிவாயா"விலும் சுற்றி இருந்த எல்லா சத்தங்களும் அமிழ்ந்துதான் போயின.

நான் அறுவை சிகிச்சையை மஹாசிவராத்திரிக்கு அடுத்த நாள் நடக்குமாறு மாற்றிக்கொண்டேன், ஏனென்றால் எக்காரணத்துக்காகவும் மஹாசிவராத்திரியை தவிர்க்க விரும்பவில்லை. அறுவை சிகிச்சை நாளும் வந்தது, கூடவே ரணமான நினைவலைகளுடன் என் இருதயம் வேகமாக துடித்துக்கொண்டு இருந்தது. 'என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்’ என்ற சாத்தியங்களில் நான் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தேன். சிகிச்சை அறையில் 6 பூதாகாரமான விளக்குகள் தொங்கியவிதம் என்னை வியர்க்க வைத்தது.

சிகிச்சை நிபுணரும், உதவியாளர்களும் என்னுள் ஊசிகளை செலுத்த ஆரம்பித்தவுடன், எனக்கு மூச்சை கவனிக்க வேண்டும் என்ற ஞாபகம் வந்தது. நான் விலகி விலகி வெகுதூரம் போனேன், என் உடலை விட்டு நழுவினார் போல இருந்தது. நான் உடலா, மனமா அல்லது வேறு ஏதாவதா என்று பார்க்க இதோ என் முன் ஒரு வாய்ப்பு. கடந்த காலத்திலேயே வாழ்வது மாயை என்று நாம் கற்கவில்லையா? பின் ஏன் எனக்கு அறுவை சிகிச்சையை பற்றி பயம்? இந்த நொடி மட்டுமே உண்மை என்றால், ஏன் கடந்த கால வேதனையான அனுபவங்கள் இப்பொழுது வந்து வாட்டுகிறது?

நான் கண்ணை மூடிக்கொண்டு ஆழமாக சுவாசித்தேன். திடீரென சுகமான தென்றல் என்னை தீண்டியது. என் பயம் என்னை விட்டு விலகியது, நடுக்கமும் உடனே நின்ற மாதிரி இருந்தது. ஒன்று புரிந்தது - என்னை நானே பரீட்சித்துப் பார்க்க இது ஒரு நல்ல வாய்ப்பு என்பதுதான் அது. மயக்க மருந்து, துளை போடும் கருவி, கத்தரிக்கோல் - எதுவும் இப்போது பிரச்சினையாக இல்லை.

நான் செய்த யோகாசனா, க்ரியா பயிற்சிகள் தான் என்னை கரை சேர்த்தது.

உண்மையில் அன்று காலை க்ரியா பயிற்சியை ஒரு முறை அதிகமாக செய்தேன். நிச்சயம் அது உதவியாக இருந்தது. துளை போடும் கருவியின் சத்தம் அதிகமாக அதிகமாக, இயர்-ஃபோன் வழியே பாய்ந்த சத்குருவின் குரலில் நான் அமிழ்ந்து போனேன். ‘ஐ-போட்’ உபயோகிக்க நான் முன் உத்தரவு வாங்கி இருந்தேன். துளை ஆழமாக ஆழமாக, வலியும் மிக அதிகமானது, சத்குருவின் குரலில் ஒலித்த "பிரம்மானந்த ஸ்வரூபா"விலும், "ஓம் நமசிவாயா"விலும் சுற்றி இருந்த எல்லா சத்தங்களும் அமிழ்ந்துதான் போயின. உடலிலிருந்து முழுமையாக நகர்ந்து நிற்க என்னால் முடியும் என்பதை உணர்ந்தேன்.

அமைதியுடனும் சீரான சுவாசத்துடனும் இருந்ததால் பின்னர் மருத்துவர்கள் என்னை பாராட்டினார்கள். அமைதியாக இருக்கும்போது, உடல், சிகிச்சைக்கு நன்கு ஒத்துழைக்கும் என்று சொன்னார்கள். சிகிச்சை, முன்னை விட மூன்றில் ஒரு பங்கு நேரத்துக்குள், நன்றாக நடந்து முடிந்தது.

சிகிச்சைக்குப்பின் மீண்டு எழுந்தது மிக ஆச்சரியகரமானது. நினைத்ததற்கு மாறாக காயம் மிக சிறிதாக இருந்ததைப்பார்த்து மருத்துவர்களால் நம்ப முடியவில்லை. காயம் ஆறும் வேகத்தைப் பார்த்த அவர்கள் இது இதுவரை நடந்திராத ஒரு விஷயம் என்று சொன்னார்கள். அவர்கள் இப்படி இவ்வளவு சீக்கிரம் காயம் ஆறுவதைப் பார்த்து, என் சாப்பாடு, பழக்க வழக்கங்களைப் பற்றி ஆவலாக விசாரித்தார்கள். இவ்வளவு சீக்கிரம் குணமாவதற்கு காரணம் என்ன என்று அறிய விரும்பினார்கள். வலி இருந்தும் எப்படி நான் சாந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன், எப்படி இவ்வளவு தைரியமாக இருக்கிறேன் என்று தெரிந்து கொள்ள விழைந்தார்கள்.

ஐந்து நாட்களுக்குள் குணமாகி நான் வெளியே வந்தேன். முதலில் நடந்த சிகிச்சையை விட, அதே மாதிரியான அறுவை சிகிச்சைதான் என்றாலும், இந்த முறை என் அனுபவம் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. அந்த வேற்றுமை என்ன? ஈஷா, சத்குரு, அருள்...

எது சாத்தியம், எது சாத்தியம் அல்ல என்று எனக்கு காட்டிய சத்குருவுக்கு என் மனமார்ந்த நன்றி. எது நடந்ததோ அது எப்படி நடந்தது, எப்படி என் காயங்கள் அவ்வளவு சீக்கிரம் ஆறின என்பதெல்லாம் எனக்குப் புரியவில்லை. எப்படி நான் வலியை, அமைதியாகப் பொறுத்துக்கொண்டேன்? அதையும் தாண்டி, வீங்கிய முகத்துடன் ஒரு ‘பார்ட்டி’க்கு வேறு சென்றேன். நான் செய்த யோகாசனா, க்ரியா பயிற்சிகள் தான் என்னை கரை சேர்த்தது. இவ்விதமான அனுபவபூர்வமான விஷயங்கள் தான் என் நம்பிக்கையை இன்னும் ஆழமாக்குகிறது.

என் அமைதிக்கும், காயங்கள் வேகமாக ஆறியதற்கும் எதோ பயிற்சி செய்கிறேனா என்று மருத்துவர்கள் கேட்டார்கள். நான் ஈஷா யோகா பயிற்சியைப் பற்றி சொன்னவுடன், அவர் ஆச்சரியமடைந்தார். ஆதலால், இந்த உடலைத்தாண்டி ஏதோ ஒன்று உள்ளது என்பதற்கு ஒரு ஆதாரமாக நான் இங்கே இருக்கிறேன். ஒரே மாதிரியான சிகிச்சை இரு முறை செய்தாலும் - ஈஷா யோகாவின் உதவியால் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விளைவுகள் அமையும் என்பதற்கு நான் ஒரு அத்தாட்சி.