கதை கேட்பது என்றால் அலாதி சுகம்தான். பாட்டி சொன்ன கதை, வகுப்பில் டீச்சர் சொன்ன கதை, நண்பன் சொன்ன கதை என கதைகளும் கதை சொல்பவர்களைப் பொறுத்து மாறுபடும். அந்த வகையில் சத்குரு சொல்லும் இரண்டு கதைகள் நம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

தபாலில் தப்பித்த படைவீரன்

ஒருமுறை, எதிரிப் படைகளிடம் சிக்கிக் கொண்ட ஒரு படைவீரரை, போர்க் கைதிகளுக்கான சிறையில் அடைத்து வைத்திருந்தனர். அவருக்கு போரில் பலமான காயங்கள் பட்டிருந்ததால், நோய்த்தொற்று ஏற்பட்டு, அவருடைய ஒரு காலை வெட்டி எடுக்க வேண்டிய நிலை வந்துவிட்டது. அதனால் சிறைக் காவலாளியிடம், ‘இந்த வாரம் என்னுடைய ஒரு காலை வெட்டி எடுக்கப் போகிறார்கள். என்னுடைய கால் என் சொந்த மண்ணில் புதைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்' என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். அவர் மேல் அனுதாபப்பட்ட சிறைக் காவலாளியும் இதற்கு ஒப்புக் கொண்டு, கால் வெட்டப்பட்டவுடன், அதை படைவீரரின் தாய்நாட்டுக்கு தபாலில் அனுப்பி வைத்தார்.

இன்னும் சில நாட்கள் கழித்து, படைவீரரின் இன்னொரு காலிலும் நோய்த் தொற்று ஏற்பட்டு, அந்தக் காலையும் வெட்டிவிட்டார்கள். அந்தக் காலையும் இதேபோல தபாலில் சிறைக் காவலாளி அனுப்பி வைத்தார். இதேபோல படைவீரர் உடலின் ஒவ்வொரு பாகமும் நோய்த்தொற்றினால் வெட்டப்பட்டதும், அவற்றை இவர் தபாலில் அனுப்பி வந்ததும் நடந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்து சந்தேகப்பட்ட சிறை அதிகாரி சிறைக் காவலாளியிடம் ‘என்ன நடக்கிறது’ என்று கேட்டார். அதற்கு காவலாளி, ‘இந்தப் படைவீரரின் வேண்டுகோளுக்கு இணங்க, நான் இவரது வெட்டப்பட்ட உடல் பாகங்களை அவரது சொந்த நாட்டுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறேன்’ என்று சொன்னார். இதைக் கேட்ட அதிகாரி கோபத்தின் உச்சிக்கே சென்று, ‘முட்டாளே! இவன் துண்டு, துண்டாகத் தப்பித்துக் கொண்டிருப்பது உனக்குத் தெரியவில்லையா?’ என்று கத்தினார். நாம் எதையுமே சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கிறோம்!!

இனிமேல் குறும்பு செய்வாயா?

தபாலில் தப்பித்த படைவீரன் , Thabalil thapitha padaiveeran

ஒருநாள் தன்னை 'ரேடியோ சூப்பர் ஸ்டார்' என்று எண்ணிக் கொண்டிருந்த ஒரு ரேடியோ அறிவிப்பாளர், நகரப் பேருந்தில் தன்னுடைய அலுவலகத்துக்குப் பயணித்துக் கொண்டிருந்தார். அவரது பின் சீட்டில் அமர்ந்திருந்த ஒரு தாய் தன் பையனிடம், ‘நீ ரேடியோ சூப்பர் ஸ்டார் ரேமாண்ட்டின் நிகழ்ச்சியைக் கேட்க வேண்டுமா?’ என்று கேட்டுக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த ரேமண்ட், தன்னுடைய நிகழ்ச்சியை குழந்தைகளையும் கேட்க வைக்க விரும்பும் பெற்றோரும் இருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டார். அவரது முகம் பெருமையில் சிவந்து, பூரிப்பில் நெஞ்சம் விம்மியது. ஆனால் உடனே அந்த சிறுவன் வேண்டவே வேண்டாம் என்று அழுது அடம் பிடிக்கத் துவங்கினான். அதற்கு அந்த தாய், ‘அப்படியானால் குறும்பு செய்யாமல் அமைதியாக இரு!’ என்றார்.

The National Guard @ flickr