சென்னையில் நடந்த அற்புதர் புத்தக வெளியீட்டு விழா பற்றி ஒரு பார்வை...

“என்னப்பா உங்க சாமியாருக்கு எந்த ஊரு?” என்று சத்குருவைப் பற்றி விவரித்த ஒரு நண்பரிடம் இந்தக் கேள்வியைக் கேட்ட அந்த ஆரம்பத் தருணத்திலிருந்து, “நீ வந்து கைதந்து நடைபோடச் சொல்லாமல் இனி எங்கு நான் செல்வது” என சத்குருவை கவிபாடிய நெகிழ்ச்சியான தருணம் வரை சத்குருவுடனான தனது அனுபவங்களை அற்புதர் புத்தகத்தில் விவரிக்கிறார் மரபின் மைந்தன் முத்தையா அவர்கள். ஒரு குருவுடன் பயணிப்பது எவ்வளவு அற்புதமானது என்பதையும், அதே வேளையில் எவ்வளவு சிரமமானது என்பதையும் சத்குருவுடன் காரில் பயணித்த தனது அனுபவத்தை அழகான நடையில் அவர் வெளிப்படுத்தும்போது புரிந்துகொள்ள முடிகிறது.

அற்புதர் நூலினை பல்லாயிரக்கணக்கானோரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் நூல் அறிமுக விழா, தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் சென்னையில் நிகழ்ந்த அற்புதர் நூல் வெளியீட்டு விழா ஊடகங்களாலும் பொதுமக்களாலும் வெகுவாகக் கவனிக்கப்பட்டதற்கு ஒரு சிறப்பான காரணமும் உண்டு! அரசியல் களத்தில் எதிரெதிர் பக்கங்களில் இருந்தாலும், அற்புதர் புத்தகத்தை அறிமுகம் செய்துவைக்க பாரதீய ஜனதா கட்சி தலைவர் திரு.இல.கணேசன் அவர்களும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் திரு ப.சிதம்பரம் அவர்களும் ஒரே மேடையில் ஒன்றாகக் கூடியிருந்ததுதான் அதற்குக் காரணம்.

நிகழ்ச்சியில் மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் பேசுகையில்...

“குறுகிய அரசியல் கண்ணோட்டத்தைக் கடந்து மேல் எழும்புகிறவர்கள் (Rising beyond narrow politics) என்று இவர்களைப் பற்றி ஒரு அருமையான கட்டுரை பிரபல நாளிதழ் ஒன்றில் வந்திருக்கிறது. இதில் என்ன சிறப்பு என்றால் பொதுவாக இருவேறு இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்களை ஒரே மேடைக்கு அழைக்கிறபோது இருதரப்பினரையும் நாம் சம்மதிக்க வைக்க வேண்டியிருக்கும். ஆனால், இவர்கள் இங்கே இலக்கியம்தான் பேசுவார்கள். நீங்கள் இதைப் பற்றி ஒன்றும் யோசிக்காதீர்கள்!” என்று சுவைபடக் கூறினார்.

முன்னதாக தலைமை உரையாற்றிய குஜராத்தின் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி திரு.கோபால கிருஷ்ணன் அவர்கள், அற்புதர் புத்தகத்தில் தான் படித்த சில பகுதிகளை கூட்டத்தில் பகிர்ந்துகொண்டார். அனைவரையும் சமமாக பாவிக்கும் சத்குருவின் பண்பு குறித்து அவர் பேசுகையில்...

“ஒருமுறை முத்தையா அவர்கள் சத்குருவுடன் சேலத்துக்கு காரில் சென்றபோது அங்கே ஒரு வீட்டிலே சாப்பாடு ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்த வீட்டிற்கு சென்றவுடன் சத்குரு அங்கே இருந்த மேஜைகளையும், நாற்காலிகளையும் வெளியிலே போடச் செய்துவிட்டு, பிறகு அனைவரோடும் தரையிலே அமர்ந்து ஒன்றாக சாப்பிட்டாராம். ‘நான் மட்டும் மேஜையில் அமர்ந்து சாப்பிட்டால், எதோ நான் உயர்ந்தவன் என்று அவர்களெல்லாம் கருதி பயபக்தியோடு இருப்பார்கள்,’ என்று அவர் சொல்லியிருக்கிறார்.” இவ்வாறு, சத்குருவின் மனிதாபிமான மாண்பினைப் பேசிய கோபால கிருஷ்ணன் அவர்கள்,

"இல்லாத வல்லமையும் உள்ளதாய் எண்ணிடும் இதயத்தை என்ன செய்வேன்,
சொல்லாத புகழ்மொழி சொன்னதாய் நம்பிடும் சிந்தையை என்ன செய்வேன்.
கல்லாத நெஞ்சினை கல்வி என்னும் மலையென்னும் கர்வத்தை என்ன செய்வேன்
பொல்லாத வாயையும், என் நில்லாத லீலை உன் பிள்ளை நான் என்ன செய்வேன்”

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

என்ற முத்தையா அவர்களின் கவிதை வரிகளைக் குறிப்பிட்டு, தனது கர்வத்தை கரைத்த சத்குருவைப் பற்றி முத்தையா அவர்கள் இயற்றிய கவிதையின் இலக்கிய செழுமையினை வெகுவாகப் பாராட்டினார்.

தொடர்ந்து பேசிய திரு.இல கணேசன் அவர்கள், அற்புதர் புத்தகத்தை பலர் படித்துவிட்ட நிலையிலும், தொடர்ந்து அறிமுக விழாக்கள் நடைபெற்று வருவதற்கான காரணத்தை விளக்கிப் பேசியது அருமையான ஒரு பதிவாக அமைந்தது.

“அரசியல் எங்களை ஒற்றுமைப்படுத்தாமல் போகலாம். ஆனால், இலக்கியமும், ஆன்மீகமும் ஒற்றுமைப்படுத்தும் என்பது இப்போது புரிகிறது. அதனால்தானோ என்னவோ தொடக்கத்திலேயே நிகழ்ச்சி தொகுப்பாளர் செல்வி.யாழினி அவர்கள் பேசும்போது, ‘தமிழால் இணைவோம்!’ என்ற கருத்தை சொல்லிவிட்டு சென்றார்.

சைவசித்தாந்த தமிழ் அகராதியில் ‘அற்புதர்’ என்ற வார்த்தைக்கு என்ன பொருள் கொடுத்திருக்கிறார்கள் என்று தேடிப்பார்த்தேன். அந்த அகராதி அற்புதன் என்கின்ற வார்த்தைக்கு ஒரே ஒரு அர்த்தத்தை மட்டுமே சொல்லியிருக்கிறது. ‘கடவுள்’. அற்புதன் என்று எழுதியிருப்பதை மரியாதை நிமித்தமாக ‘அற்புதர்’ என்று நம்முடைய முத்தையா மாற்றி இருக்கிறார். சைவசித்தாந்த நூற்பதிவு கழகத்தினுடைய அகராதியின்படி சரியாகவே நீங்கள் பெயரிட்டு இருக்கிறீர்கள்.

திருநெல்வேலி அல்வா என்பது விஷேசமானது, மற்ற அல்வா போல அது இருப்பதில்லை. ஆனால், அது எப்படி இருக்கும் என்று கேட்டால், சுவைத்து பாருங்கள் என்றுதான் சொல்லமுடியும். அதைப் போலவே இந்த அற்புதரைப் பற்றி எல்லாம் வார்த்தைகளால் சொல்ல இயலாது. ஆனால், இந்த எழுதமுடியாத விஷயத்தை எழுதியிருக்கிறார் என்பதுதான் முத்தையாவின் சிறப்பு.

பொதுவாக நிதியமைச்சர் வெளியிடுகின்ற பட்ஜெட், தாக்கல் செய்யப்படுவதற்கு முன் வெளியில் யாருக்கும் தெரியாமல் இருக்கும். ஆனால், எல்லோரும் படித்துவிட்ட இந்தப் புத்தகத்தை இப்பொழுது அறிமுகவிழாவாக நடத்துவதற்கு காரணம், இந்தப் புத்தகத்தை நீங்கள் படியுங்கள் என்று சொல்வதற்காக அல்ல. இது படிப்பதற்காக அல்ல. நான் பெற்ற அனுபவத்தை நீங்களும் பெறுங்கள் என்பதற்காக. வெள்ளியங்கிரிக்கு வாருங்கள், அந்த மகானை தரிசியுங்கள் என்று உங்களுக்கு உணர்த்துவதற்காகத்தான். அதுதான் இந்தக் கூட்டத்தின் நோக்கம் என்று நான் கருதுகிறேன்.

பொதுவாக மகான் என்பவர் காவி அணிந்திருக்க வேண்டும், தாடி வைத்திருக்க வேண்டும் அல்லது முடியை மொத்தமாக மழித்திருக்க வேண்டும், மௌனமாக இருக்க வேண்டும், அதிகமாக பேசக்கூடாது, எதையுமே அதிகமாக பார்க்கக்கூடாது, யாரையும் தொட்டுவிடக்கூடாது, அதிகம் சிரிக்கவும் கூடாது, யாரையும் அணுகிவிடக்கூடாது, யாராவது வணங்கினால் கை உயர்த்தி ஆசி செய்யவேண்டும், ஆங்கிலம் எல்லாம் அவருக்கு தெரியக்கூடாது, கார் ஓட்டக்கூடாது, பல்லக்கிலே செல்பவராக இருக்க வேண்டும். இப்படி நாமாக நமக்குள் சில கற்பனைகளை வைத்திருக்கிறோம். நீங்கள் நம்முடைய அற்புதரை பார்த்தீர்களேயானால் உங்கள் கற்பனைகள் அனைத்தும் பொய்த்துப்போகும். ஆனால், அவர் ஒரு மகான்.” என்று கூறிய திரு.இல.கணேசன் அவர்கள், நாம் இதுபோல தவறாக கற்பனை செய்துகொள்வதால் சில நேரங்களில் கடவுளே நம் எதிரில் வந்தாலும் தவறவிட்டு விடுவோம் என்பதை ஒரு கதையின் மூலம் விளக்கினார்.

சாமுண்டி மலையில் சத்குருவிற்கு நிகழ்ந்த அனுபவம் குறித்து அற்புதர் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதைக் கூறிய இல.கணேசன் அவர்கள், “அந்த மலையில் ஏறியது வேறு ஆள், இறங்கியது வேறு ஆள். நம்மைப்போல் பிறந்தார் என்று சொல்லும்போது, அவர் ஏறிய ஆளாக இருப்பவர். ஆனால், இப்போது கீழே இறங்கி வந்தபிறகு இருப்பவர், அற்புதர். அதன் அர்த்தம் என்ன என்பது எனக்குப் புரிகிறது,” என்று கூறி ஈஷா மையத்திற்கு வருவதற்கும் சத்குருவை சந்திப்பதற்கும் தான்கொண்டுள்ள பேராவலை வெளிப்படுத்தி அமர்ந்தார்.

இறுதியாகப் பேசிய திரு.ப.சிதம்பரம் அவர்கள் சத்குருவை தான் முதலில் சந்தித்த நிகழ்வையும் முத்தையா அவர்கள் முதன்முதலில் சத்குருவை சந்தித்த தருணத்தையும் ஒப்பிட்டு கூறியது சுவைபட அமைந்தது.

“நான் சத்குருவை ஒருமுறைதான் சந்தித்திருக்கிறேன். அதுவும் ஒரு எதிர்பாராத சூழ்நிலையில். வெளிநாட்டில் உலக பொருளாதார மாநாட்டிற்கு என்னை அழைத்திருந்தார்கள். அவரையும் அழைத்திருந்தார்கள். எனக்கு அவரை யாரென்று தெரியாது. அவருக்கும் என்னை நேரில் சந்தித்திதில்லை. அந்த நிகழ்ச்சியில் ஒரு அறைக்குள் நான் போய்க்கொண்டிருந்தபோது ஒரு சாமியார் அங்கு இருந்தார். இந்தியாவிலிருந்து அவர் வந்திருக்கிறார் என்பது எனக்குத் தெரிகிறது. அதற்குமேல் ஒன்றும் தெரியவில்லை. அவருடன் ஓரிருவர் இருந்தார்கள். அவர்கள்தான் அவரை என்னிடம், ‘இவர்தான் திரு. சத்குரு ஜகி வாசுதேவ்’ என்று அறிமுகம் செய்தார்கள். அந்த ஒருமுறைதான் அவரை நான் சந்தித்திருக்கிறேன். எனவே, திரு முத்தையா அவர்கள் பெற்ற அனுபவத்தையெல்லாம் நான் பெற்றேன் என்று சொல்ல முடியாது.

முத்தையா அவர்கள் முதன்முதலில் சத்குருவை பார்ப்பதற்கு முன் தனது உதவியாளரிடம் ‘எந்த ஊருய்யா உன் சாமியாருக்கு?’ என்று கேட்டதாக அவரே சொல்கிறார். அது நடந்து பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இந்த நூல் வெளிவந்திருக்கிறது. சுமார் 20, 25 ஆண்டுகள் அவரோடு பழகியவர், உரையாடியவர், பேசியவர், விவாதித்தவர், அவர் உரைகளையெல்லாம் கேட்டவர் திரு.முத்தையா அவர்கள். அவற்றையெல்லாம் மனதிலே அசைபோட்டு அசைபோட்டு, எந்த நிகழ்ச்சியை எழுத வேண்டும் என்று தேர்ந்தெடுத்து, அதை தனக்கு வரமாக கிடைத்த எழுத்து திறத்தால் இந்த நூலினை எழுதியிருக்கிறார். முத்தையாவின் எழுத்தில் வலிமை இருக்கும். இலக்கிய நயம் இருக்கும். எதையும் ஏனோ தானோ என்று சொல்பவர் கிடையாது. அந்த நடையிலே இந்த நூலை எழுதியிருக்கிறார்.

அவர் இந்த நூலை எழுதியதன் நோக்கம், தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதுதான். இதை பகிர்ந்துகொள்வதன் மூலமாக சத்குருவைப் பற்றிய செய்தி இன்னும் பல்லாயிரம் பேருக்கு பரவவேண்டும் என்ற பேராசை,” என்று கூறிய திரு.சிதம்பரம் அவர்கள் முத்தையாவின் எழுத்துத் திறனை குறிப்பிடுவதற்காக அற்புதர் புத்தகத்திலிருந்து சில வரிகளை எடுத்துக் கூறினார்.

“அற்புதருக்கு நாய்குட்டிகளை பிடிக்கும். அல்ல, அல்ல! அற்புதருக்கு நாய் குட்டிகளையும் பிடிக்கும். நாய் குட்டிகளை பிடிக்கும் என்று தொடங்கியவர், அற்புதருக்கு நாய் குட்டிகளையும் பிடிக்கும் என்று குறிப்பிடுகிறார். அதைவிட ஒரு அழுத்தமான செய்தி, அவர் அற்புதராய் இருப்பதனால் நாய் குட்டிகளுக்கும் அவரை பிடிக்கும் என்பதுதான். ஆக, 4 வரிகளில் 3 செய்திகள். விலங்குகளை நேசிக்க வேண்டும். விலங்குகளையும் நேசிக்க வேண்டும். விலங்குகளும் உங்களை நேசிக்க வேண்டும். இந்த 3 செய்திகளை 4 வரிகளிலே சொல்லியிருக்கிறார். இதுதான் எழுத்தினுடைய வலிமைக்கு உதாரணம்.”

தனது உரையில் முத்தையா அவர்களின் குரு பக்தியைப் பற்றி பேசிய சிதம்பரம் அவர்கள் தனக்குக் கிடைத்த சில ஆசிரியர்களைப் பற்றியும் நினைவுகூர்ந்தார்.

“முத்தையா அவர்களுக்கு மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகிய நான்கு நிலைகளில் குருதான் அவருக்கு முக்கியமாக படுகிறார் என்பது இந்தப் புத்தகத்தின் மூலமாக தெரியவருகிறது.

பெரும்பான்மையானவர்களுக்கு பள்ளிக்கூடத்தில், கல்லூரியில் ஆசிரியர்தான் குரு. என்னை பொருத்தவரையில், என்னுடைய வாழ்க்கையில், மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய சில ஆசிரியர்களை என்னால் குறிப்பிட்டுச் சொல்லமுடியும். அவர்கள் என்ன சொல்லிக் கொடுத்தனர் என்பது எல்லாம் என் நினைவில் இல்லை. ஆனால், அவர்களுடைய தாக்கம் இருக்கிறது என்பது எனக்கு நன்றாகப் புரிகிறது.

ஒரு பள்ளி-கல்லூரி ஆசிரியர் 4, 5 ஆண்டுகளில் ஒரு இளைஞன் மத்தியிலே ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியுமென்றால், சுமார் 25 ஆண்டுகள் பழகிய ஒரு உயர்ந்த மனிதர், நம்மைவிட உயர்ந்த நிலையிலே இருக்கும் ஒருவர், முத்தையா அவர்களிடத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் எத்தகையது என்பதை இந்த நூல் காட்டுகிறது” என்று கூறி பாராட்டி, தனது உரையை நிறைவு செய்தார்.

அற்புதரால் நமக்குள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்கள் மட்டும் விசித்திரமானவை அல்ல. அற்புதர் புத்தகமும் விசித்திரமானதுதான். இப்புத்தகம் படித்து, ரசிப்பதற்கு மட்டுமல்ல, ஆழமான அனுபவங்களை சுவைக்கவும்தான். எல்லாம் அற்புதர் செய்யும் மாயம் தானோ?