சுயநலவாதிகளுக்கு மத்தியில் நான் மட்டும் யோகா செய்தால்…

சுயநலவாதிகளுக்கு மத்தியில் நான் மட்டும் யோகா செய்தால்..., suyanalavathigalukku mathiyil nan mattum yoga seithal...

யோகா குறித்த பல தவறான புரிதல் இருப்பதைப் பார்க்கிறோம். அப்படியான ஒரு புரிதலுடன் ஒருவர் கேட்கும் கேள்விக்கு, நகைச்சுவைக் கதையுடன் சத்குரு தரும் தெளிவான விளக்கம்!

கேள்வி
உலகில் பெரும்பாலும் சுயநலவாதிகளாக இருக்கின்றனர். நான் மட்டும் யோகா கற்றுக் கொண்டு நல்லவளாக வேண்டுமா?

சத்குரு:

நீங்கள் ஒரு தீர்மானத்தைச் செய்து கொண்டு அதை நியாயப்படுத்தத் தவிக்கிறீர்கள். அதில் யோகாவை வேறு இழுக்கிறீர்கள். மற்றவர்கள் சுயநலமாக இருப்பதென்றால் இருக்கட்டும். சுயநலமாக இருப்பது உங்களுக்கு எப்படி இருக்கிறது என்று பாருங்கள். உங்கள் நலன் என்கிற ஒரு விஷயத்தை மட்டும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பதே மிகவும் அபத்தமானது.

ஒருவர் தன் குடும்பத்தோடு ரயிலில் ஏறினார். பெட்டியை தன்னுடைய தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டார். அருகில் அமர்ந்திருந்தவர்களுக்கு, அவர் தலையில் பெட்டியை வைத்திருப்பதைப் பார்த்தால் தங்களுக்குக் கழுத்து வலிப்பது போல் இருந்தது. “ஏன் சிரமப்படுகிறீர்கள். கீழே வைத்து விடலாமே. மிகவும் விலை மதிப்புயர்ந்த பொருள் ஏதாவது இருந்தால் கீழே வைத்து அதன் மீது கூட உட்கார்ந்து கொள்ளுங்களேன்” என்றார்கள். “இருக்கட்டும்! பரவாயில்லை! பரவாயில்லை” என்று பதில் சொன்னார் அந்தப் பயணி. அவர் அப்படி அமர்ந்திருப்பதற்குக் காரணம் கேட்டபோது அவர் சொன்னார், “இந்த ரயில் மீது என் பாரத்தை ஏன் போட வேண்டும். அதனால்தான் சுமக்கிறேன்” என்று. உங்கள் நலனைத் தலையில் தூக்கிச் சுமப்பது உண்மையில் சிரமமானது. உலகில் பெரும்பாலும் சுயநலவாதிகளாக இருக்கிறார்கள் என்கிறீர்கள். அவர்களை ஏன் பார்க்கிறீர்கள்? எத்தனையோ பேர் பிறர் நலனில் அக்கறை உள்ளவர்களாகவும், மற்றவர்களுக்காக தங்கள் நலனை விட்டுக் கொடுப்பவர்களாகவும் இருக்கிறார்களே, அவர்களைப் பாருங்கள்.

யோகா என்பது உங்கள் உள்தன்மை சம்பந்தப்பட்டது. வெளியுலகில் என்ன சூழ்நிலையோ அதற்கேற்ப நீங்கள் வாழ்ந்து கொள்ளலாம். சுயநலம் என்கிற சுமையைத் தலையிலிருந்து இறக்கிவிட்டால் நீங்கள் சுதந்திரமாக வாழ முடியும். உலக வாழ்க்கைக்கு என்று சில தகுதிகள் வேண்டும். அதை நீங்கள் செய்துகொள்ள யோகா உங்களுக்குத் தடையல்ல.

சூழ்நிலைக்குத் தகுந்ததையும், தேவையானதையும் செய்யாமல் இருப்பதல்ல ஆன்மீகம். அப்படி வாழ்வதற்கு முட்டாள்தனம் என்று பெயர். யோகா கற்றுக் கொள்வதால் உங்கள் உள்தன்மையில் கவனம் செலுத்துகிறீர்கள். இதைப் புரிந்து கொள்ளுங்கள்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert