நம்மவரு நம்மாழ்வார்... பகுதி 5

'காபி, டீ, இட்லி, வடை' இதெல்லாம் சூடாயிருந்தா நல்லாயிருக்கும். நம்ம பூமி சூடாயிருந்தா...? ஆமாம், நாம் வசிக்கும் பூமியின் வெப்பநிலை அதிகமாகிட்டு வருது, அதன் மோசமான விளைவுகளும் காத்துகிட்டு இருக்கு. பூமியைக் காப்பாற்ற ஒரே ஒரு வழிதான் இருப்பதாக நம்மாழ்வார் சொல்கிறார். அது என்ன? இங்கே விரிவாக விளக்குகிறார்...

நம்மாழ்வார்:

1992 ஆம் ஆண்டு ‘ரியோ டி ஜெனேரே’ என்னும் இடத்தில் நடைபெற்றது ‘பூமியைக் காப்போம்‘ மாநாடு!

உலகம் வெப்பக் கூடாரம் ஆவது குறித்து பதட்டங்கள் பரிமாறப்பட்டன. சுற்றுச்சூழலை அதிகம் கெடுத்த நாடுகள், வானில் புகை கக்குவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கப்பட்டது.

பணக்கார நாடுகள் புகையைக் கக்கினாலும் அதன் பாதிப்புகள் ஆசியா கண்டத்தையும், குறிப்பாக இந்தியாவையும்தான் பெரியஅளவு தாக்குமாம். இன்றைய போக்கு நீடிக்குமானால், இந்த நூற்றாண்டு முடியும்போது அண்டவெளியின் வெப்பம் 3 - 5 டிகிரி அதிகரிக்கும் என்கிறது ஐ.நா. அறிக்கை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இது இப்படி இருக்க, இந்தியாவின் நிலை என்ன?

எவ்வளவுதான் மாற்று ஏற்பாடுகள் செய்தாலும், 2031-32 ஆம் ஆண்டில் மின் உற்பத்தியில் 42% நிலக்கரியை எரிப்பதால் உற்பத்தியாகும். இன்றைய நிலவரப்படி, ஆண்டுக்கு 100 கோடி டன் நிலக்கரி எரிக்கப்படுகிறது. இது 410 கோடி முதல் 590 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கரியை உள்வாங்குவது மரங்கள்தானே! அதனை முன் உணர்ந்து, சத்குரு மரம் நடுவதில் மக்களை ஊக்குவித்துள்ளதை நாம் அறிவோம்.

மரங்கள் இல்லாத மண்ணில் கனமழை தாக்கும்போது, ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள 32 டன் மேல்மண்ணை எடுத்துச்செல்கிறது.

மிகக் கனத்த மழை பெய்தாலோ, 400 டன் மண் பெயர்த்து எடுத்துச்செல்லப்படுகிறது. வண்டல், கடல் போய்ச்சேருகிறது அல்லது நீர்த் தேக்கங்கள் மேடுபடுகின்றன. இதனால் நாளடைவில் ஆறு வறண்டுபோகும். மரக் குடை இருந்தால் அது மழை வேகத்தைக் குறைத்துமண் அரிப்பைச் சொற்பமாக்கிவிடுகிறது.

இலைகளில் சேகரிக்கப்படும் மழைநீரில் 25% சூரிய வெப்பத்தால் ஆவியாகிறது. 50% மரங்களின் வேர்வையாக வெளியேறி மேகத்தைக் குளிர்விக்கிறது. இவ்வாறு கருக்கொண்ட மேகம் குளிர்ச்சியான இடம் வந்தபோது, மழையாகப் பொழிகிறது.

கடலில் இருந்து ஆவியாகும் நீர், இரவில் குளிர்கிறது. மரத்தின் இலைகளில் படிகிறது. இவ்வாறு படிந்த நீரில் 15% சூரியனால் ஈர்க்கப்படுகிறது. 50% வேர்வையாக வெளியேறுகிறது. மீதமுள்ள நீர் நிலத்தடி நீராகச் சேமிக்கப்பட்டு அருவிக்கு நீர் தருகிறது. மழையைவிடவும் இலைகள் அருவிக்கு நிறையவே நீர்தருகிறது.

இப்போது நமக்குப் புரிகிறது. ஆபத்தைக் குறைத்துக்கொள்வதற்கு மரம்வளர்ப்பதை விடவும் மார்க்கம் வேறுஇல்லை!

தொடர்ந்து விதைப்போம்...

nature, nammalvar, agriculture

தள்ளாத வயது என வர்ணிக்கப்படும் வயதில், வாலிபராய் நம்மிடையே வலம் வரும் நம்மாழ்வார் அவர்கள், இயற்கை உணவு, இயற்கையோடு இயைந்த வாழ்வு, மனிதனால் இயற்கைக்கு உண்டாகும் சீரழிவை எடுத்துரைப்பது எனப் பல தளங்களில் தனது சேவையை ஆற்றிவருகிறார்.

Mikael Miettinen @ flickr