கர்நாடகத்தின் புரட்சியாளர் ! பகுதி 1

தனது 80வது வயதில் சத்குருவை தன் உடல் திடத்தால் மலைக்க வைத்த மல்லாடிஹள்ளி ஸ்வாமிகளின் வாழ்க்கை பல திருப்பங்களும் சுவாரஸ்யங்களும் நிறைந்தது. பலவீனமான குழந்தையாகப் பிறந்து யோகப் பயிற்சிகள் மூலம் பலம்பெற்று, பின்னாளில் யோக ஆசிரியராக மாறி, தன் மன திடத்தால் 103 வயதுவரை வாழ்ந்த மல்லாடிஹள்ளி ஸ்வாமிகளின் வாழ்க்கை வரலாற்றை இங்கே ஒவ்வொரு திங்கட்கிழமையும் தொடராக பதிய உள்ளோம். படித்து மகிழுங்கள்!

சத்குரு பள்ளிச் சிறுவனாக இருந்தபோது விடுமுறைக்கு தனது தாத்தா வீட்டுக்குச் சென்றிருந்தார். தாத்தா வீட்டிலிருந்த ஆழமும் அகலமுமான ஒரு கிணற்றுக்கு படிக்கட்டுகள் கிடையாது. ஆனாலும் சத்குருவும் அவரது உறுவுக்காரச் சிறுவர்களும் அந்தக் கிணற்றின் மேல் இருந்து குதித்து நீந்தி விளையாடிவிட்டு பிறகு கிணற்றுச் சுவரில் ஆங்காங்கே கை வைத்து, நகம் கிழிய, நகக்கண்களில் ரத்தம் எட்டிப்பார்க்க, கஷ்டப்பட்டு மேலே ஏறி வருவார்கள். சத்குருதான் எப்போதும் அனைவருக்கும் முன்னதாக மேலே ஏறி வருவார்.

ஒருநாள் அப்படி சிறுவர்கள் கிணற்றில் விளையாடிக்கொண்டு இருந்தபோது, 80 வயதான ஒரு முதியவர் கிணற்றின் மேலே இருந்து குதித்து நீந்திக் குளித்துவிட்டு, சிறுவர்களைவிட வேகமாகக் கிணற்றில் இருந்து ஏறி வந்தார். இது சத்குருவை மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. எப்படி இந்த முதியவர் இந்த வயதிலும் என்னையும்விட வேகமாக ஏறுகிறார்?! அவரிடமே கேட்போம் என்று எண்ணி, அந்த முதியவரிடம் சென்று தன் வியப்பை வெளிப்படுத்தினார். அதற்கு அவர் சத்குருவிடம், ‘வா, அந்த ரகசியத்தை உனக்கும் கற்றுக்கொடுக்கிறேன்’ என்று அழைத்துச் சென்று, சத்குருவுக்கு யோகாசனப் பயிற்சிகளைக் கற்றுக்கொடுத்தார்.

அன்று கற்றுக்கொண்ட யோகாசனத்தை சத்குரு பல ஆண்டுகளாக ஒரு நாள்கூட விடாமல் தொடர்ந்து செய்து வந்தார், பல நாட்களாக மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தாலும் சரி, அவ்வப்போது வனங்களில் தங்கியிருந்தபோதும் சரி, யோகா இல்லாமல் அவரது பொழுது விடியாது... முடியாது.

தமிழகத்தில் மல்லாடிஹள்ளி ஸ்வாமிகளை அதிகம் பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கர்நாடகாவில் அவர் மிகப் பிரபலம். அவர் ஆசிரமம் அமைத்து மக்களுக்கு யோகப் பயிற்சிகள் கற்றுத்தந்தார், ஒருவர் முதுமையிலும் எவ்வாறு இளமையுடன் இருக்க முடியும் என்பதற்கு உதாரணமாகவும் இருந்துவந்தார். 30 க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், அனாதைக் குழந்தைகளுக்கான காப்பகம், இலவச ஆயுர்வேத மருத்துவமனை எனப் பல செயல்கள் மூலம் தன்னை மக்கள் தொண்டுக்காக அர்ப்பணித்து வந்த அவரை கர்நாடக மாநிலத்தில் அனைவரும் அறிவார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கர்நாடகாவின் மத்தியப் பகுதியில் மல்லாடிஹள்ளி என்னும் கிராமத்தில்தான் அவருடைய ஆசிரமமும் அவர் உருவாக்கிய நிறுவனங்களும் இருந்தன. கிராமத்தின் பெயரை வைத்தே மக்கள் அவரை மல்லாடிஹள்ளி ஸ்வாமிகள் என அழைத்தனர். ஆனால், அவர் தன்னை எப்போதும் ராகவேந்திர ராவ் என்றே அழைத்துக்கொண்டார்.

தன் தாய் தீவிரமாக நோய்வாய்பட்டிருந்ததால் மிகவும் நோஞ்சான் குழந்தையாக பிறந்த அவர் குழந்தைப் பருவத்தில் எப்போதும் நினைவற்ற நிலையிலேயே இருந்தார். அவரை அவரது பெற்றோர் மிகவும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது.

ஒரு முறை ராகவேந்திர மடத்தில் இருந்து வந்த ஸ்வாமி ஒருவர் அவரை ஆசிர்வதித்துக் குணப்படுத்தினார். எனவே, அந்தத் துறவியின் நினைவாக இவருக்கு ராகவேந்திரா என்ற பெயரையே பெற்றோர்கள் இட்டனர்.

நோஞ்சான் குழந்தையாக இருந்த அவர், உடல்நிலை தேறி பின்னாளில் யோகா, உடற்பயிற்சிகள், ஆயுர்வேதம் எனப் பலவும் கற்றுக்கொண்டு மக்களுக்குப் பலவகைகளில் தொண்டாற்றி மிகவும் பிரபலமாக விளங்கினார்.

யோகா, உடற்பயிற்சிகள், வீட்டு வைத்தியம் மற்றும் ஆயுர்வேதம் போன்ற துறைகளில் பல நூல்கள் இயற்றியிருக்கிறார். சமூகச் சீர்திருத்தங்களையும் நாட்டுப்பற்றையும் வலியுறுத்தி பல கவிதை நூல்கள், நாவல்கள், நாடகங்கள் போன்றவற்றையும் இயற்றியிருக்கிறார். இந்த நூல்களில் எல்லாம் அவர் தன்னை ‘திருகா’ என்றே குறிப்பிட்டுக் கொள்கிறார். திருகா என்றால் பிச்சையெடுத்து வாழ்பவர் என்று பொருள்.

இந்திய விடுதலைக்காக ஆபத்து நிறைந்த பல செயல்களில் ஈடுபட்டிருக்கிறார். எனினும் நாட்டு விடுதலைக்குப் பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார். இருப்பினும், அரசியல்வாதிகள் எப்போதும் அவரது ஆசியைத் தேடி அவரது ஆசிரமத்துக்கு வந்தவண்ணம் இருப்பார்கள். ஏறக்குறைய சுதந்திரத்துக்குப் பிறகு பதவியேற்ற அனைத்து முதல்வர்களும் அவரது ஆசிரமத்துக்கு வருகை புரிந்திருக்கின்றனர்.

அதேபோல், எழுத்தாளர்கள், கவிஞர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என்று எப்போதும் பிரபலங்கள் அவரது ஆசிரமத்தை முற்றுகையிட்டுக் கொண்டே இருப்பார்கள். ஏழு முறை கர்நாடக மாநில அரசு அவரை ‘பத்மஸ்ரீ’ விருதுக்குச் சிபாரிசு செய்தது. ஒவ்வொரு முறையும், தனக்கு விருதைவிட பணம்தான் தேவைப்படுகிறது என்றும் தன் பணிகள் அவர்களுக்குத் திருப்தியைத் தந்தது என்றால் பணம் கொடுக்குமாறும் ஸ்வாமிகள் கேட்டுக்கொண்டார்.

இப்படி, தனது சிறுவயதில் மரணத்துடன் தொடர்ந்து போராடிய மல்லாடிஹள்ளி ஸ்வாமிகள், பிற்காலத்தில் ஆயிரக்கணக்கான மனிதர்களின் வாழ்க்கையைக் காப்பாற்றினார். தனது வாழ்க்கையில் பெற்றோரின் அரவணைப்பை அதிகமாக உணராதவர், பிற்காலத்தில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு பெற்றோராக இருந்து அரவணைத்தார்.

தான் 120 ஆண்டுகள் வாழப் போவதாக எப்போதும் அவர் சிரித்துக்கொண்டே சொல்வதுண்டு. 1993ம் வருடத்தில், தனது 103ம் வயதில் அவர் தன் உடலை உகுத்தார்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த மல்லாடிஹள்ளி ஸ்வாமிகளின் வரலாறு மிகவும் சுவையானது. கடவுள் தேடுதலில் தீவிரமாக ஈடுபட்ட அவரின் வாழ்க்கை பிறகு எவ்வாறெல்லாம் திசை மாறியது, குரு பக்திக்கு இலக்கணமாக அவர் எவ்வாறு திகழ்ந்தார், பொதுத் தொண்டு வாழ்க்கையில் எவ்வாறு போராட்டங்களை சந்தித்தார் என அவரைப் பற்றி அனைத்தும் அனைவரும் அறிய வேண்டிய விஷயங்கள்.

அடுத்த வாரம்...

மல்லாடிஹள்ளி ஸ்வாமிகள் பிறந்த தருணத்தில் அவருக்கும் அவரது குடும்பத்திற்கு காலம் தந்த பல சோதனைகளையும், ராகவேந்திர மடத்தைச் சேர்ந்த ஸ்வாமிகளின் அருள் வாக்கினால் உடல் தேறிய நிகழ்வையும், பின்னர் அவர் பெற்ற ஆன்மீக தீட்சையையும் எடுத்துரைக்கிறது அடுத்த வாரப்பகுதி.


கர்நாடகத்தின் புரட்சியாளர்! தொடரின் பிற பதிவுகள்