சுடச் சுட… சூடான ரெசிபி

சுடச் சுட... சூடான ரெசிபி

ஈஷா ருசி

கோடைக்காலத்தில் குளிர்ச்சியான பதார்த்தங்களை சுவைத்த உணவுப் பிரியர்களுக்கு, மழைக் கொட்டிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் சூடாகவும், சீக்கிரமாகவும் தயாரித்து உண்ண இதோ இரண்டு ரெஸிபிகள்…

பிரட் போண்டா

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 2
முட்டைக்கோஸ், பீன்ஸ், கேரட் – 1 கப் (நறுக்கியது)
பச்சை பட்டாணி – 1 கப்
தக்காளி – 2
பிரட் – 1 பாக்கெட்
பால் – 1/4 லிட்டர்
கடுகு, உளுந்தம்பருப்பு – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
மிளகு தூள் – சிறிதளவு
கரமசாலா – தேவையான அளவு
மஞ்சள் பொடி – சிறிதளவு

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, பீன்ஸ், கேரட், முட்டைக்கோஸ், பச்சை பட்டாணி போட்டு எண்ணெயில் நன்கு வதக்க வேண்டும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கி, மஞ்சள் பொடி, கரமசாலா, மிளகுத்தூள், தேவையான உப்பு சேர்த்து வதக்கி, பின் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து இறுதியாக கொத்தமல்லி சேர்த்து இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பாலில் பிரட்டை நனைத்து, அதில் செய்து வைத்த உருளைக்கிழங்கு மசாலாவை உள்ளே வைத்து நீளமாகவோ, உருண்டையாகவோ உங்கள் வசதிப்படி செய்து எண்ணெயில் போட்டு எடுக்க வேண்டும். மிக ருசியாக இருக்கும், சாஸ் தொட்டும் சாப்பிடலாம்!

ப்ரூட் அல்வா

சுடச் சுட... சூடான ரெசிபி, Suda suda soodana recipe
தேவையான பொருட்கள்:

ஆப்பிள் – 2
திராட்சை பழம் – அரை கிலோ
சர்க்கரை – 2 கப்
உப்பு – 1 சிட்டிகை
கார்ன் பிளவர் மாவு – 6 டீஸ்பூன்
முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, உலர் திராட்சை – தேவையான அளவு

செய்முறை:

ஆப்பிளையும், திராட்சையையும் நன்றாக மிக்ஸியில் தனித்தனியாக அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு ஜுஸையும் ஒன்றாக கலக்கவும். அரை கப் ஜுஸில் 6 டீஸ்பூன் கார்ன் ப்ளவர் மாவை சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு கனமான வாணலியில் ஜுஸ் மற்றும் சர்க்கரை போட்டு கிளற வேண்டும். ஐந்து நிமிடத்திற்கு பிறகு கரைத்து வைத்த கார்ன்பிளவர் ஜுஸ் மற்றும் ஒரு சிட்டிகை உப்பை போட்டு அடியில் பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். உலர்ந்த திராட்சை, முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இவற்றை நெய்யில் லேசாக வறுத்துக் கொள்ளவும். அல்வா பதம் வந்ததும், வறுத்து வைத்த முந்திரி, உலர் திராட்சை, பாதாம் பருப்பையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கி, ஆறவைத்து பரிமாறலாம். இதை இரண்டு அல்லது மூன்று மணிநேரம் பிரிட்ஜில் வைத்து இதனுடன் ஐஸ்கீரீம் சேர்த்து சாப்பிடலாம். வித்தியாசமான சுவையில் ப்ரூட் அல்வா, சுவைத்து பாருங்கள்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert