ஈஷா யோகா மையம் துவங்கிய காலத்தில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில், அடர்ந்த காட்டின் ஊடே வாழுவதால் குடியிருப்பு பகுதிக்குள் வரும் பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் விடுவதற்காக சத்குரு அவர்கள் சிலருக்கு அளித்த பயிற்சி மெல்ல மெல்ல சுற்று வட்டாரத்தை சேர்ந்தோருக்கும் துணை நின்றது.

ஜனத்தொகை பெருகிவிட்டதால் பாம்புகள் வசிக்கும் இடத்தில் வீடுகள் கட்ட ஆரம்பித்துவிட்டோம். இதனால் பாம்புகள் வீட்டுக்குள் வந்துவிடுகின்றன. குறிப்பாக கோவை சுற்றுவட்டாரத்தில் பெரும்பாலான பாம்புகள் வீடுகளில்தான் வசிக்கின்றன. இந்தப் பிரச்சனையை சமாளிக்க சத்குரு அவர்களின் ஆசியுடன் தொடங்கப்பட்டதுதான் இந்த 'ஈஷா சர்பண்ட்' இயக்கம்.

இந்த இயக்கத்தின் சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம் பாம்புகளை மனிதரிடமிருந்து காப்பாற்றுவதே! ஆம்... இயற்கையில் பாம்புகள் மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டவை. அவை மனிதரைக் கண்டால் ஓடி ஒளிந்துக் கொள்ளும். இதையும் மீறி ஒரு சில பாம்புகள் நாம் வாழும் பகுதிக்கு வந்துவிட்டால், அவற்றை அடித்துக் கொல்லும் முயற்சியின் போதுதான் பெரும்பாலானோர் பாம்பிடம் கடி வாங்குகின்றனர்.

சரி இந்த பாம்புகளை எப்படி கையாள்வது? இதற்கான பிரத்யேக பயிற்சிதான் ஈஷா சர்பண்ட் இயக்கத்தில் சேரும் தன்னார்வத் தொண்டர்களுக்கு கற்று தரப்படுகிறது. முதலில் விஷமுள்ள பாம்புகள் எவை, விஷமில்லாத பாம்புகள் எவை என்று அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். பாம்பினை தலைப்பகுதி பிடித்து தூக்காமல் வால்பிடித்துதான் தூக்க வேண்டும். பாம்பு கோபமாக இருக்கிறதா இல்லையா என அறிந்த பின்பே அதனை பிடிக்க வேண்டும் போன்ற முக்கியமான அடிப்படை விஷயங்களை அவர்கள் பயில்கிறார்கள்.

பாம்பென்றால் மூன்று விஷயங்கள்தான் பொதுவாக மக்களுக்கு மனதில் வரும். பயம்... பயம்.. .பயம்... எனவே பாம்பு கடித்தாலே இறந்துபோய் விடுவோம் என்ற பயத்தை போக்குவதற்கு பாம்புகளைப் பற்றிய படங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்துகின்றனர்.

பாம்பைப் பார்த்தவுடன் பொதுமக்கள் ஈஷா சர்பண்ட் இயக்கத்திற்கு போன் செய்தால் போதும். உடனே அந்த இடத்திற்கு ஈஷா சர்பண்ட் தன்னார்வத் தொண்டர் வந்து பாம்பை பிடித்துவிடுகிறார். இதுவரை இவர்கள் பிடித்த பாம்புகளின் எண்ணிக்கை 400ஐ தாண்டியுள்ளது. இதில் 100 விஷப்பாம்புகளும், 13அடி ராஜநாகமும் அடக்கம். தற்போது கோவையில் மட்டுமே செயல்பட்டுவரும் இந்த இயக்கம் விரைவில் மற்ற ஊர்களிலும் தொடங்கப்பட உள்ளது.

இனி பாம்பு என்றால் 'ஐயையோ...பாஆஆஆம்பு!' கிடையாது. 'அட பாம்பா...!' அவ்வளவுதான். அப்படித்தானே?

ஈஷா சர்பண்ட் தொடர்புக்கு: 94898 94898 (தற்சமயம் கோவையில் மட்டும்)