சிவனை நெருங்கும் அறிவியல்…!

சிவனை நெருங்கும் அறிவியல்…!

பித்தா…! பிறைசூடி…! பெருமானே…! அருளாளா…! எனப் பாடுகிறோம்; ஆதியும் அந்தமும் இல்லாதவன் என்கிறோம்; ஆக்கவும் அழிக்கவும் வல்லவர் என்று போற்றுகிறோம். இன்னும் ஆயிரம் ஆயிரம் வர்ணனைகள். ஆனால் நம் அனுபவத்தில் சிவனை எப்படி உணர்வது. சத்குருவின் இந்த உரை சிவனிடம் நம்மை அழைத்துச் செல்கிறது.

கைலாஷ் யாத்ரா – பகுதி 5

டாக்டர்.ராதா மாதவி:

பயணத்தின்போது தங்கிய பல இடங்களில் சத்குருவின் சத்சங்கம் நடந்ததாலும், அவை கைலாஷ் மானஸரோவர் பற்றியே இருந்ததாலும், எங்கள் இதயம் முழுக்க இறையருள் நிரம்பிய அந்த இடங்களைக் காண ஏங்கிக்கொண்டு இருந்தது.

சத்சங்கங்களில் எங்கள் கேள்விகள் புதுப்புதுப் பரிமாணங்களில் பதில்களைப் பெற்றன… கைலாஷ் மலைப் புராணங்களில் சிவனைத் தொடர்புபடுத்தி இருந்ததால், கேள்வி சிவனைப் பற்றித் திரும்பியது…

“இந்தியாவில் மட்டும்தான் சிவனை வழிபடுகிறார்களா?” என ஒரு பங்கேற்பாளர் கேட்டார்.

இந்தியாவில் எங்கே சென்றாலும் மலைச் சிகரங்கள்தான் ஆன்மீக முக்கியத்துவம் பெறுகின்றன. ஏனென்றால், பெரும் மலையின் மேலே செல்லச் செல்ல உங்களைச் சிறிதாய் உணர்கிறீர்கள்.
கைலாஷைப் பார்ப்பதற்கு முன்னர் இந்தக் கேள்வி கேட்கப்பட்டதால், சத்குரு சொல்லப் போவதை ஆர்வமாய் கேட்கத் தயாரானோம். சத்குரு சிரித்துக் கொண்டே பேசத் தொடங்கினார். “இந்தியர்கள் மட்டும்தான் சிவனை வழிபடுகிறார்கள். ஆனால் அதில் பலர் சிவனின் வேலையை தம் கைகளில் எடுத்துக்கொண்டார்கள்.

யோகக் கலாச்சாரத்தில் சிவனை ‘முதலாவது யோகி’, அதாவது ‘ஆதியோகி’ என்றும் ‘ஆதிகுரு’ என்றும் சொல்கிறோம். ஆனால் ‘சிவா’ என்றால் ‘எது இல்லாததோ அது’ என்று பொருள். எதுவுமாக இல்லாதது எப்படி அழிப்பவராக இருக்க முடியும் என்று தோன்றலாம்.

சிவனை நெருங்கும் அறிவியல்…!-1

ஏதாவது ஒன்றாக இருப்பதுதானே எதையாவது செய்ய முடியும்? ஆனால் எதுவுமாக இல்லாதது எப்படி அழிப்பவராக இருக்க முடியும்? ஆனால் நவீன விஞ்ஞானமும் இன்று இதற்கு விளக்கம் அளித்திருக்கிறது. பிரபஞ்சத்தின் மையம் ஒரு வெற்றிடம் என்றும் அது சுற்றிலும் உள்ளவற்றை உள்ளிழுத்து அழிப்பதாகவும் வரையறுக்கின்றனர். இருப்பவை, இல்லாதவற்றுள் இழுக்கப்பட்டு அழிந்துபோகிறது. ஏதோ ஒன்றாக இருப்பது ஒன்றுமில்லாததாக ஆகிறது.

இந்த ஒன்றுமில்லாத்தன்மையை ‘சிவம்‘ என்கிறோம். படைப்பு நிகழ்ந்து மீண்டும் இல்லாமல் போவது இதில்தான். சிவனை அழிப்பவர் என்கிறோம். அதே நேரத்தில் அவர்தான் மகாதேவனாகவும், கடவுளர்க்கும் படைப்பவருக்கும்கூட தலைவனாகவும் இருக்கிறார். இது ஒரு விஞ்ஞானம்.

படைத்தல், அழித்தல் செயல்முறைக்கும், படைப்பு எப்படி நிகழ்ந்தது என்பதற்கும் இதுதான் உச்சபட்ச விளக்கம். இன்று விஞ்ஞானம் அந்தக் கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்னும் அதைத் தொடவில்லை. ஆனால் நெருக்கமாய் வந்திருக்கிறது. ஆனால் நம் அனுபவத்தில் ஏற்கனவே இதை நாம் அறிந்திருக்கிறோம்.

எனவே படைப்பு எங்கே தொடங்கியது, எப்படி நடந்தது, எப்போது நடந்தது? இதைக் கண்டுகொள்ள விஞ்ஞானிகள் பலவற்றையும் புரட்டிப் படிக்கிறார்கள். ஆனால் நீங்கள் என்ன தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், உங்களுக்குள் ஆழமாகச் செல்லச் செல்ல, இந்த உயிர்சக்தி பல தகவல்களைச் சுமந்து வந்திருப்பதைப் பார்ப்பீர்கள். ஒரு செல் உயிரியாக இருந்து பரிணாம வளர்ச்சியில் பலவற்றைச் சுமந்து வந்திருக்கிறது. அது மட்டுமல்ல, அதற்கும் முன்னர் மூலக்கூறுகளாகவும் அதையும் தாண்டி ஒன்றுமில்லா அண்டவெளிக்கும் அப்பால் இது செல்கிறது.

அந்த வெற்றிடத்திலிருந்துதான் எல்லாம் தோன்றின. உயிர் எப்படியெல்லாம் பரிணமித்ததோ அதன் எல்லாத் தகவல்களும் இப்போது இந்த உயிரில் அப்படியே சேகரிக்கப்பட்டுள்ளன. எனவே இதை உணர பிரபஞ்சம் முழுக்க ஆராய்ச்சி தேவையில்லை. உங்களுக்குள்ளேயே பிரபஞ்சம் இருக்கிறது. இந்த ஒன்றை உணர்ந்தால், இதுதான் எல்லாம்!

எனவே சிவன் என நாம் குறிப்பிடுவது உச்சபட்ச வெற்றிடத்தைத்தான். அந்த ஒன்றுமில்லாத் தன்மைதான் எல்லாப் படைப்புகளுக்கும் மூலமாகவும் அழித்தலுக்கு அடிப்படையாகவும் உள்ளது. விஞ்ஞானம் அதைப் புரிந்துகொண்டுள்ளது. உங்கள் அனுபவத்தில் இல்லாததை உங்களால் புரிந்துகொள்ள முடியாது என்பதால் ‘சிவனை’ வேறுவிதமாக உருவகப்படுத்தினர்.

படைப்புக்கும் அழித்தலுக்கும் அடிப்படை சிவன். அதே நேரம் உச்சபட்சப் புரிதலும்கூட. அதனால்தான் மூன்றாவது கண் அவருக்கு உள்ளதாகவும் சித்தரிக்கப்படுகிறது. மூன்றாவது கண் என்றால் நெற்றியில் ஒரு கண் இருக்கிறது என்று அர்த்தமில்லை. இரண்டு கண்களால் வாழ்வின் இருமை நிலைகளை மட்டுமே பார்க்க முடியும், பொருள்தன்மையில் உள்ளவற்றை மட்டுமே பார்க்க முடியும்.

எல்லாம் கடந்து உள்ளதை இந்த இரு கண்களால் பார்க்க முடியாது. இருமை நிலை தாண்டி உள்ளதை ஒருவர் பார்க்கத் தொடங்குவதை, பொருள்தன்மை தாண்டி பார்க்கத் தொடங்குவதை மூன்றாவது கண் திறந்ததாகக் கூறுகிறோம். உச்சகட்டப் புரிதலுக்கான கண் திறந்துவிட்டது என்று பொருள்.

ஆன்ம சாதனைகளாக நாம் செய்யும் யோகப் பயிற்சிகள் அனைத்தும் ஒருவரது புரிதலை உச்சபட்ச நிலைக்கு உயர்த்தத்தான், ஏனென்றால், புரிதல் இல்லாமல் நீங்கள் எதையும் அறிந்து கொள்ள முடியாது. கற்பனை வேண்டுமானால் செய்வீர்கள். கைலாஷுக்கு சென்று கற்பனை செய்யாதீர்கள். மேகத்தின் மீது சிவன் இருந்தார் என்று அங்கே சென்று வந்தவர்கள் கூறியுள்ள முட்டாள்தனமான கதைகளை ஆயிரக்கணக்கில் கேட்டிருக்கிறேன். நீங்களும் அப்படிக் கூற வேண்டாம்.

கற்பனையில் எதுவும் நிகழாது. புரிதலால் பலவும் நிகழும். சில ஆத்ம சாதனைகளைத் தருகிறோம். அதைத் தொடருங்கள். நடப்பது நடக்கும்!” இன்னொரு கேள்வி மீண்டும் பயணத்தின் நோக்கம் பற்றியதாக இருந்தது….

“ஈஷாவுக்கு இந்தப் பயணம் பயனளிக்குமா?”

“இந்தப் பயணம் ஈஷாவின் லட்சியமல்ல, இது ஒரு ஆன்மீகப் பொழுதுபோக்கு என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் முக்கியத்துவமானது. கடல் மட்டத்தில் கிடைக்காதது, 19,000 அடி உயரத்தில் ஏறத்தாழ சொர்க்கத்துக்கு மிக நெருக்கமான உயரத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் எங்கே சென்றாலும் மலைச் சிகரங்கள்தான் ஆன்மீக முக்கியத்துவம் பெறுகின்றன. ஏனென்றால், பெரும் மலையின் மேலே செல்லச் செல்ல உங்களைச் சிறிதாய் உணர்கிறீர்கள். அப்படி உணர்வது ஒரு வழிமுறை.

நினைத்துப் பாருங்கள், இந்த வாகனங்கள் இல்லாமல் இந்தியாவிலிருந்து வழி முழுவதுமே நடந்துதான் கைலாஷுக்கு வர வேண்டும் என்றால், ‘நீங்கள்’ என்பது மிகவும் தணிந்து போயிருக்கும். கைலாஷ் சென்று சேரும்போது மிக மிக நுட்பமாய் சுற்றிலுமுள்ள இயற்கையோடு இசைவாய் இருப்பீர்கள், உங்கள் ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் அடங்கியிருக்கும். பெறுகிற தன்மை மேலோங்கி, அங்கே இருப்பதை முழுதாய் பெற்றுக்கொள்வீர்கள். எனவே உங்களுக்கு இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததுதான்!”

சத்குரு சொன்னதை அனுபவப்பூர்வமாய் உணர்ந்தோம். எங்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் கைலாஷும் மானஸரோவரும் இடையறாமல் ஆக்கிரமித்திருந்தன. மானஸரோவருக்கு மிக நெருக்கமாய் இருந்தோம். மெதுவாய் மனம் நிச்சலனமாகத் தொடங்கியது…

பயணம் தொடரும்…
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert