மனித மனங்களின் கற்பனைக்கும் எட்டாத சாத்தியங்களையும் குணாதிசயங்களையும் உள்ளடக்கிய பல்வேறு வடிவங்களை கொண்டவர் சிவன். அதில் சில புதிரானவை. மற்றவை நேசத்துக்குரிய சுந்தர ரூபமானவை. எளிமையான போலேநாத்தில் இருந்து நடுக்கத்தை கொடுக்கும் காலபைரவர் வரை, சுந்தரரான சோமசுந்தரர் முதல் கோரபயங்கர அகோரர் வரை சிவன் எல்லா வடிவங்களையும் பூண்டவர். எனினும், எதிலும் தன்னை இணைத்துக் கொள்ளாதவர்.

ஆன்மீக தேடலில் இருப்பவருக்கு - யோகேஷ்வரர், பூதேஷ்வரர், காலேஷ்வரர், சர்வேஷ்வரர், ஷம்போ எனும் சிவனின் 5 வடிவங்கள் சிறப்புடையவையாகும். இந்தப் பதிவில் சத்குரு இந்த ஐந்து வடிவங்களின் மகத்துவத்தையும் அதன் அறிவியலையும் விளக்குகிறார்...

சத்குரு:

“யோக யோக யோகேஷ்வராய
பூத பூத பூதேஷ்வராய
கால கால காலேஷ்வராய
ஷிவ ஷிவ சர்வேஷ்வராய
ஷம்போ ஷம்போ மஹாதேவாய”

யோகேஷ்வரர்

உடல் சார்ந்த அமைப்பின் கட்டுப்பாடுகளை உணர்ந்து, அதனை கடந்து செல்வது பற்றிய தேவையை நீங்கள் உணரும்போது, யோகப் பாதையில் இருக்கிறீர்கள். ஒரு சிறிய வட்டத்துக்குள் சிறைப்பட்டதை உணரும் வேளையில் ஒரு மிகப் பெரிய வட்டத்திற்குள் ஒரு சூழ்நிலையில் சிறைப்பட நேரிடும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இந்தப் பிரபஞ்சத்தையே குறுக்கும் நெடுக்குமாக நடந்தே கடந்தாலும் அதுவும் உங்களை சில காலம் கழித்து சிறைப்படுத்தும். எத்தனை தூரம் பயணிக்க இயல்கிறது என்னும் உங்கள் திறன் பற்றிய விஷயம் அது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இந்த தேடுதலை உங்களுக்குள் நீங்கள் உணர்வதே யோகா. உடல் சார்ந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் உடைத்து எறிவதே யோகா. உங்களின் முயற்சி இந்த உடல் சார்ந்த வாழ்க்கையில் நேர்த்தி பெறுவது மட்டும் அல்ல; அதன் எல்லைகளை கடந்து உடல் அல்லாத ஒரு பரிமாணத்தை தொடுவது. எல்லைக்குட்பட்டதையும் எல்லைக்கு அப்பாற்பட்டதையும் அதன் நடுவில் உள்ள எல்லையை அழித்து ஒன்றிணைக்கவே நீங்கள் விரும்புகிறீர்கள். எல்லையற்ற தன்மையை உணரும் ரூபமே யோகேஷ்வரர்.

பூதேஷ்வரர்

நாம் காணும் கேட்கும் நுகரும் சுவைக்கும் தொடும் அனைத்தும், இந்த உடம்பு, இந்த கிரகம், இந்த பிரபஞ்சம் என அனைத்தும் பஞ்சபூதங்களின் விளையாட்டுதான். வெறும் ஐந்து பொருட்களை கொண்டு என்ன ஒரு மகத்துவமான, குறும்புத்தனமான படைத்தல் இங்கு நிகழ்ந்து இருக்கிறது! ஆதியோகி வழங்கிய முதல் யோகமுறை பூதசுத்தி. ஐம்பூதங்களை தூய்மை செய்யும் ஒருமுறை இது. இதில் ஆளுமை பெறுவது பூதசித்தி. ஐம்பூதங்களை ஆளுமை கொள்ளுதல் என்று இதற்கு அர்த்தம்.

தெரிந்தோ தெரியாமலோ ஒவ்வொரு மனிதனும் பல நிலைகளில் ஐம்பூதங்களின் மீது ஆளுமை ஏற்படுத்திக் கொள்கிறான். ஒருவரது உடல், மன இயல்பு, அவர்கள் செய்யும் காரியங்களில் பெறும் வெற்றிகள் என அனைத்தையும் இது நிர்ணயிக்கிறது. அதனால், ஐம்பூதங்களின் மீது முழுமையாய் ஆளுமை பெற்று, உடல் சார்ந்த வாழ்க்கையில் தன் விதியை தானே நிர்ணயித்துக் கொள்பவர், பூதேஷ்வரர்.

காலேஷ்வரர்

நீங்கள் யோகத்தில் ஒருமையையும் பஞ்சபூதங்களின் ஆளுமையையும் பெற்றிருக்கலாம்; ஆனால், காலத்தை ஆள்வது என்பது முழுதாக மாறுபட்ட ஒரு நிலை. ஒவ்வொரு கணமும் காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது. “அவர் காலம் முடிந்துவிட்டது,” என்று ஒரு வழக்கினை கேட்டிருப்போம். எந்த ஒரு பொருளையும் போல மனித வாழ்வும் காலாவதியாகும் தேதியுடன் வருகிறது.

நீங்கள் பல்வேறு இடங்களுக்கு சென்றிருப்பதாய் எண்ணலாம். ஆனால், உங்கள் உடம்பு சுடுகாட்டை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது. ஒரு கணமும் அதிலிருந்து விலகுவதில்லை. நீங்கள் அதன் வேகத்தை கொஞ்சம் குறைக்கலாம், ஆனால் அதன் போக்கை மாற்ற முடியாது.

காலமே படைப்பின் மிக மகத்துவம் வாய்ந்த நிலை. காலம் இல்லையெனில் ஆதியும் அந்தமும் கிடையாது. தொடக்கமோ முடிவோ இல்லையெனில் அங்கு இயற்பொருள் சார்ந்த படைப்பு நிகழ்ந்திருக்காது. உடல் அல்லாத தன்மையில் இருப்பவருக்கு காலம் என்பது கிடையாது. உடல் சார்ந்த அமைப்பை கடந்து, காலத்தை வென்றவரே காலேஷ்வரர்.

சிவ சர்வேஷ்வரர்

சிவா என்றால், “எது இல்லையோ அது; கரைந்துவிட்ட ஒன்று.” எது இல்லையோ அதுவே அனைத்துக்கும் மூலமானது. அதுவே எல்லைகள் இல்லாத சர்வேஷ்வரர்.

ஷம்போ

ஷம்போ என்பது வெறும் சாவி; ஒரு கால்வாய். உங்கள் குரல் மட்டும் அல்ல, உங்கள் உடம்பின் ஒவ்வொரு அணுவும் இந்த மந்திரத்தை உச்சரிக்குமேயானால், அதுவே உங்கள் பாதை ஆகிவிடும். எல்லா நிலையிலும் தேர்ந்து முழுமையான நிலையை அடைய வெகுகாலம் பிடிக்கும். இந்த கால்வாயில் பயணிக்க எண்ணினால், இப்படிப்பட்ட நிலைகளையெல்லாம் நீங்கள் கடந்துவிடலாம் - ஆளுமை கொண்டல்ல, மாறாக நழுவிச் சென்று.

நேராக செல்ல வேண்டுமெனில், அது கடினமான பாதை. ஊர்ந்து செல்ல சித்தமாய் இருந்தால் பல எளிய வழிகள் உண்டு. ஊர்ந்து செல்லும் இயல்புடையவர்கள் எதையும் ஆளுமை கொள்ள வேண்டிய தேவையில்லை. எவ்வளவு காலம் வாழ வேண்டுமோ அவ்வளவு காலம் வாழலாம். முடிவில் சாகும்போது முழுமையை, முக்தியை அடையலாம். ஒரு சிறிய விஷயமே ஆனாலும் அதில் தேர்ச்சியுறுவதில் ஒரு விவரிக்க முடியாத அழகு உள்ளது. ஒரு குழந்தை கூட கால்பந்தை எட்டி உதைக்கும். ஆனால், அதில் தேர்ச்சி பெற்றால், அதில் ஒரு கலைநயம் கூடிவிடும்; அதில் தேர்ச்சி பெற்றவரை உலகம் வியந்து பார்க்கும் அளவு செய்யும். தேர்ச்சிபெற நீங்கள் விரும்பினால் பல காரியங்களை செய்ய வேண்டும். ஆனால், ஊர்ந்துசெல்ல சித்தமாய் இருந்தால் “ஷம்போ” போதும்.

குறிப்பு:

பிப்ரவரி 24, மஹாசிவராத்திரி அன்று 112 அடி உயர ஆதியோகி திருமுகத்தை சத்குரு அவர்கள் ஈஷா யோக மையத்தில் பிரதிஷ்டை செய்கிறார். வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் இந்த அனுபவத்தில் எங்களுடன் இணையுங்கள்!

தன்னார்வலர்கள் மூலம் பேருந்து வசதி: 83000 83111

ஈஷாவில் இவ்வருட மஹாசிவராத்திரி பற்றி மேலும் தெரிந்துகொள்ள: AnandaAlai.com/MSR