கேள்வி: சத்குரு, ஈஷா யோகாவில் கற்றுத்தரப்படும் ஷாம்பவி மஹாமுத்ரா தியானம் குறித்து சிறிது விளக்குவீர்களா? இந்த தியானம் செய்வதால் நமக்கு என்னென்ன பலன் கிடைக்கும்?

சத்குரு:

ஷாம்பவி மஹாமுத்ரா என்பது உயிரோடு இருக்கின்ற ஒரு தொழில்நுட்பம். இது வெறும் பயிற்சி அல்ல. இது உயிரோடு இருக்கின்ற ஒரு தன்மை. தினசரி பயிற்சி செய்து வந்தால் கற்பனை செய்ய இயலாத அளவிற்கு உள்ளேயிருந்து ஆனந்த நிலை பொங்கிப் பிரவாகிக்கும். அது மட்டுமல்ல. வாழ்க்கையை நாம் உருவாக்கிக் கொள்வதற்குத் தேவையான திறமை, புத்திசாலித்தனம், சக்தி என்று நமக்குத் தேவையான அனைத்தையும் பிரமாதமாக நாம் வளர்த்துக் கொள்ள முடியும்.

எல்லாவற்றிற்கும் முக்கியமாக, நம்முடைய வாழ்க்கையை இலகுவாக நடத்திக் கொள்கின்ற அளவுக்குத் தேவையான சூழ்நிலை உங்களுக்குள்ளே வரும். சிறிது கவனம் செலுத்தி பயிற்சி செய்பவர்களுக்கு உயிர்த்தன்மை பிரமாதமாக செயல்படும். உங்களுக்குள்ளே இருப்பதை உணர்ந்துவிட்டால், பிறகு நீங்கள் வாழ்க்கையில் இதுவரைக்கும் கற்பனை செய்தேயிராத ஒரு மனிதராக வாழ முடியும்.

இது செயல்படும் விஞ்ஞானம்...

இந்த உடல் என்பது ஐந்து அடுக்குகளாக இருப்பதாகக் கொள்ளலாம். இந்த அடுக்குகள் அல்லது உறைகளை 'கோஷம்' என்று கூறுவார்கள். அதாவது அன்னமய கோஷம், மனோமய கோஷம், பிராணமய கோஷம், விஞ்ஞான மயகோஷம், ஆனந்தமய கோஷம் என்று கூறுவார்கள்.

அன்னமயகோஷம் என்றால் உடல். அன்னம் என்றால் உணவு. உணவால் இந்த உடல் ஆகியிருப்பதால் உடலுக்கு அன்னமய கோஷம் என்று பெயர்.

அடுத்தது மனோமயகோஷம். மனம் என்றால் அது ஓரிடத்தில் இருப்பதல்ல. நமது உடலில் இருக்கின்ற ஒவ்வொரு அணுவிலும் ஒரு மனம் இருக்கிறது. உடல் முழுவதும் பரவியிருக்கின்ற அணுக்கள், தன்னிச்சைப்படியே செயல்படுகின்ற இயல்புடையவை. வெளியில் இருந்து கிருமியோ அல்லது வேறு ஏதோ வந்துவிட்டால், உங்களைக் கேட்காமலே தேவைக்கேற்ப அவை செயல்பட வல்லவை. எனவே அதற்கு ஒரு மனம் இருக்கிறது.மனம் என்பது ஏதோ ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருப்பது அல்ல. முழுமையாகப் பரவியுள்ளது. இதற்கு மனோமய கோஷம் என்று கூறுவோம். அன்னமய கோஷம், மனோமய கோஷம் இரண்டும் செயல்படுவதற்கு சக்தி தேவை. இதற்கு பிராணமய கோஷம் என்று கூறுவோம். இது சக்தி உடலாக இருக்கிறது.

இந்த உடல், மனம், சக்தி (பிராணா) மூன்றுமே பொருள் பரிமாணத்தின் தன்மை கொண்டவை. உடல் என்பது பொருள் தன்மையானதுதான். மனமும் பொருள் தன்மையானதே. உதாரணத்திற்கு குழல்விளக்கு பொருள்தன்மை சார்ந்தது. அதிலிருந்து வெளியேறும் வெளிச்சமும் பொருள்தன்மை கொண்டதே. அது பொருளாக இருப்பதால்தான், கையால் வெளிச்சத்தினைத் தடுக்க முடிகிறது. ஆனால் இந்த வெளிச்சம் உருவாக்குவதற்குத் தேவையான அந்த மின்சாரம் எனப்படும் சக்தி கூட பொருள்தன்மையானது என்றுதான் கூற முடியும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அதனால்தான், இந்த வயர் அறுந்து போனால் மின்சாரம் நின்று போகிறது. எனவே அதுவும் பொருள்தன்மை சார்ந்ததுதான். எனவே உடல், மனம் இரண்டும் பொருள்தன்மைதான். அதற்குப் பின்புலமாக இருக்கின்ற சக்தி மிகவும் சூட்சுமமானதுதான் என்றாலும் பொருள் தன்மைதான். அடுத்ததாக விஞ்ஞானமய கோஷம் என்று கூறுவோம். இது பொருள்தன்மையிலிருந்து பொருளற்ற தன்மைக்கு போவதற்கு ஒரு இடைநிலை படியாகும். அடுத்த நிலை ஒரு பொருளற்றதன்மை.

பொருளற்ற தன்மை என்றால் உருவமோ அல்லது அளவோ அற்றது. எனவே அது குறித்து நாம் விவரிக்க முடியாது. அதை நாம் அனுபவப்பூர்வமாக மட்டுமே பேச முடியும். உதாரணமாக, நீங்கள் சமைத்து வைத்திருக்கும் பாத்திரத்தை குழந்தைகள் தொட்டுவிட்டால், அவர்கள் அதைப் பாத்திரம் என்று கூறாமல் சூடு என்றுதான் கூறுவார்கள். இதுவும் அப்படித்தான். நம் அனுபவத்தில் மட்டும்தான் பேச முடியும். அதனுடைய தன்மை பற்றி பேசுகிற தகுதி நமக்குக் கிடையாது. அது பொருளற்ற தன்மை. அதை நாம் புரிந்து கொள்ளவும் முடியாது.

ஏனென்றால் அது அளவிற்கு சம்பந்தப்பட்டதோ உருவிற்கு சம்பந்தப்பட்டதோ அல்ல. அது எதனுடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. ஆனால் அதைத் தொட்டபோது நமக்கு அது ஆனந்தமாக இருக்கிறது. அதனை ஆனந்தமய கோஷம் என்று கூறுகிறோம்.

அப்படியானால் நமக்குள் ஆனந்தம் என்பது ஒரு பலூன் மாதிரி உட்கார்ந்திருக்கிறதா? அப்படி அல்ல. இது ஒரு பொருளற்ற தன்மை; பொருள் தாண்டி ஒரு தன்மை இருக்கிறது. அதுபற்றி நாம் எதையும் கூற முடியவில்லை. ஆனால் நமக்கு அவரோடு தொடர்பு ஏற்பட்டபோது, நம் அனுபவத்தில் நமக்கு ஆனந்தமாக இருக்கிறது. அது குறித்து நாம் அனுபவபூர்வமாக மட்டுமே பேச முடியும். ஆதலால் அதற்கு ஆனந்தமய கோஷம் என்று கூறுவோம்.

இந்த அன்னமய கோஷம், மனோமய கோஷம், பிராணமய கோஷம் இந்த மூன்றையும் நாம் ஒரு நேர்க்கோடான நிலைக்கு கொண்டு வந்துவிட்டால், உள்ளிருக்கும் ஆனந்தமய கோஷம் தானாகாவே வெளிப்படும். ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சியின்போது நாம் எந்த ஆனந்தத்தினையும் உருவாக்கவில்லை. உள்ளிருக்கும் பொருளற்ற தன்மையுடன் தொடர்பு கொண்டு வந்தால் நமக்கு பேரானந்தமாக இருக்கும்.

நாம் அனுபவப்பூர்வமாக மட்டுமே அதைப் பற்றிக் கூற முடியும். பொருள் தன்மையில் உள்ள மூன்று நிலைகளாகிய அன்னமயகோஷம், மனோமயகோஷம், பிராணமயகோஷம் இவற்றை நாம் சமநிலையில் நிறுத்தி நேர்கோடாக வைத்தால், நம் உடலில் எந்த நோயும் இருக்க முடியாது. மனதில் எந்தத் துன்பமும் வேர்விடுவதற்கு வாய்ப்பு இருக்காது. ஆனால் மூன்று நிலைகளையும் நாம் கவனிக்க வேண்டும்.

ஆனந்தம் வேண்டும், ஆனந்தம் வேண்டும் என்று ஜபம் செய்தால் ஆனந்தம் ஏற்படாது. இதைப்பற்றி மட்டுமல்ல. வாழ்வின் போக்கில் அனைத்துமே இப்படித்தான் இருக்கிறது. நமக்கு ஒரு மரத்திலிருந்து பழம் வேண்டுமென்றால், விதையைக் கையில் வைத்துக் கொண்டு ஜபம் செய்தால் பழம் வராது. பழம் வேண்டுமென்றால், பழத்தைப் பற்றி நினைக்கத் தேவையில்லை. விதையை மண்ணில் ஊன்றி தண்ணீர், உரம், சூரிய வெளிச்சம் இவற்றையெல்லாம் அதற்கு வழங்கி கவனித்துக் கொண்டால், ஒரு நாள் பழம் நம் கைகளில் விழும். வாயிலிட்டால் இனிப்பாகத்தான் இருக்கும். வாழ்க்கையும் இப்படித்தான் நிகழ்கிறது.

அதனால் நீங்கள் ‘ஆனந்தம் ஆனந்தம்’ என்று ஜபம் செய்யத் தேவையில்லை. நீங்கள் இந்த மூன்று தன்மைகளையும் ஒரே நேர்க்கோட்டில் நிலைநிறுத்தினால், அந்த நிலையில் ஆனந்தமாக இருப்பதைத் தவிர வேறு எப்படியும் இருக்க முடியாது.

அடுத்து வரும் ஷாம்பவி மஹாமுத்ரா - ஏழு நாள் ஈஷா யோகா வகுப்புகள் 

 

ஆசிரியர் குறிப்பு:

சத்குரு வழங்கும் ஈஷா யோகா வகுப்புகளில் சக்திவாய்ந்த ஷாம்பவி கிரியா கற்றுத் தரப்படுகிறது. ஷாம்பவி கிரியா மிக மிக எளிமையானது. ஆனால், இது ஒருவருக்கு கொடுக்கும் பலன்களும் அதைச் செய்வதன் மூலம் உடலில், மனதில் ஏற்படும் மாற்றங்களும் மகத்தானவை. ஆனந்தமானவை.

ஈஷா யோக மையத்தின் சூழல், தங்குமிட வசதி, சக்தியூட்டும் பயிற்சிகள் என ஆனந்தமாய் 2 நாட்கள். உள்நிலையில் பரிபூரண மாற்றத்தை உருவாக்கும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள தங்களை அன்புடன் அழைக்கிறோம்.

உங்கள் வாழ்க்கையை உங்கள் கைகளில் எடுக்க தயாரா?
சத்குருவுடன் ஈஷா யோகா கற்றுக்கொள்ள வாருங்கள்!

டிசம்பர் 17-18, 2016
ஈஷா யோக மையம், கோவை.


மேலும் இந்த வகுப்பு நேரடி ஒளிபரப்பு மூலம் உங்கள் ஊரிலும் நடைபெறுகிறது.

மேலும் விபரங்கள் அறிய மற்றும் நிகழ்ச்சிக்குப் பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

முன்பதிவு அவசியம்

தொடர்புக்கு:
தொலைபேசி: 83000 83111
இ-மெயில்: iycprograms@ishafoundation.org