செப்டம்பர் மூன்று
ஈஷா கொண்டாட்டம்

செப்டம்பர் மூன்று ஈஷா கொண்டாட்டம்

3 Sep – 11.14pm

செப்டம்பர் மூன்று அதன் அர்த்தம்தான் ஏது?

சத்சங்கத்தில் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு, சத்குருவின் பதில்கள் நம் வேர் வரை ஆழப் பாய்வதாய் அமைந்திருந்தது. அதனால் தானோ என்னவோ அதுவரை கைதட்டிக் கொண்டிருந்தவர்கள் கூட வாய் பொத்தி மௌனத்தில் அசைவில்லாமல் போயினர். மௌனம் தன்னுடன் இலவச இணைப்பாய் ஒரு கேள்வியையும் கொடுத்தது…

ஜனனமும் மரணமும் கடந்திட்ட குருவே!
பிறப்பென்றும் இறப்பென்றும்
கதைகள் செய்தோம்!
பிறவாத உன் உயிர்ப்பை கவிதை
செய்தோம்!
இறவாத உன் புகழை நூல்கள்
செய்தோம்!
இதில் செப்டம்பர் மூன்று அதன்
அர்த்தம்தான் ஏது?

3 Sep – 10.39pm

க்ஷேத்ர சந்நியாசம்

இது மூன்று நிலைகளில் நடக்கிறது என்று தான் வழங்கும் சந்நியாச வாய்ப்புகளை பற்றி அறிவித்தார் சத்குரு.

எப்படி இருப்பது…

தியானலிங்கத்தின் 2100 yard ஆரத்திற்குள் (radius) இவர்கள் தொடர்ந்து இருக்க வேண்டும்
இவர்கள் தியானலிங்கத்தின் 21 mile ஆரத்திற்குள் (radius) தொடர்ந்து இருக்க வேண்டும்
இவர்கள் தியானலிங்கத்தின் 210 km ஆரத்திற்குள் (radius) தொடர்ந்து இருக்க வேண்டும்

இவர்கள் தியானலிங்கத்தின் அதிர்வுகளுக்குள் இருக்க வேண்டும்,” என்றார்.

3 Sep – 9.57pm

செப்டம்பர் மூன்று கொண்டாட்டங்களை தொடர்ந்து மற்றொரு மிகப்பெரிய நிகழ்ச்சி

“டிசம்பர் 21 மற்றும் 22ம் நாளில் ஆண்களுக்கான தீர்த்த குண்டத்தில் மூன்று பாதரச லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. நீங்கள் சிறுவராக இருந்ததால் தியானலிங்க பிரதிஷ்டையை தவற விட்டிருக்கலாம்.

உங்களுக்கு நேரம் இல்லாததால் லிங்கபைரவியை தவறவிட்டிருக்கலாம்.

இடம் இல்லாததால் ஆதியோகி ஆலய பிரதிஷ்டையை தவறவிட்டிருக்கலாம்.

இப்படி தவறவிட்டவர்களுக்கு எல்லாம் இந்த ஆண்கள் தீர்த்தக்குண்ட பிரதிஷ்டை மிகப் பெரிய வாய்ப்பு…” என்று இன்றைய சத்சங்கத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சி வழங்கியுள்ளார் சத்குரு

3 Sep – 9.50pm

சந்நியாசம் என்றால் என்ன?

ஆன்மீகம் என்றால் எதையாவது துறக்க வேண்டும், நீங்கள் உங்கள் தாயின் கருவறையை துறந்து இந்த உலகில் குழந்தையாய் வந்தீர்கள்!

நீங்கள் உங்கள் குழந்தை பருவத்தை துறந்து இளமைப் பருவத்தை அடைகிறீர்கள்.

நீங்கள் உங்கள் இளமைப் பருவத்தை துறந்து முதுமைப் பருவத்தை அடைகிறீர்கள்
சந்நியாசம் என்றால் தொடர்ந்து வளர்ந்து கொண்டே போவது.

ஆனால் சந்நியாசம் என்ற வார்த்தை இந்த சமூகத்தில் மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது.

3 Sep – 9.46pm

இனிக்கும் தமிழ்

சத்குரு திடீரென ஆங்கிலத்தில் பேசியதை நிறுத்தி தமிழில் பேச ஆரம்பித்தார்.

உடனே அரங்கத்தில் ஆராவாரம்… குழந்தைத் தமிழில் நகைச்சுவை வெடிக்க, அரங்கம் குதூகலமானது.

கேள்விகள் கேட்கலாம் என்று சத்குரு சொல்ல…

முதல் கேள்வி: ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் உங்கள் வாழ்வில் ஒரு சுழற்சி ஏற்படுகிறது என்று சொன்னீர்கள், இது என்னவிதமான மாற்றங்கள் என்று சொல்லுங்கள்?

சத்குரு: முதல் 12 ஆண்டில் நான் யோகா கற்றுக் கொண்டேன்.
எனது 25ம் வயதில் ஞானோதயம் அடைந்தேன்.
37வது வயதில் ஈஷா யோகா மையம்.
அதன் பிறகு உங்களுக்கு தெரியும்!

கேள்வி கேட்பவர் யாராய் இருந்தாலும், நச் பதில் சத்குருவின் பாணி.

இன்னும் சில சுவையான தகவல்களுடன் மீண்டும் பதிவோம்

3 Sep – 9.42pm

என் வாழ்வு மிகவும் நிறைவான வாழ்வு

என்னுடன் நீங்கள் இருக்கும் போதாவது உங்களின் சிறந்த தன்மைகளை வெளிப்படுத்துகிறீர்கள்.

மனிதன் மலர்வதை நான் அனுதினமும் பார்க்கிறேன்.

என்னை சுற்றி எப்போதும் நான் ஆனந்தக் கண்ணீரை பார்க்காத நாளே இல்லை. இதைவிட மிகப்பெரிய ஆனந்தம் ஒருவர் வாழ்வில் இருக்க முடியாது.

3 Sep – 9.13pm

அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட சத்குருவின் சத்சங்கம் துவங்கிவிட்டது…

சத்குரு மேடையில் பேசிக் கொண்டிருக்கிறார்…

“30 வருடங்கள் கழிந்துவிட்டது, எனக்கோ இது நேற்று முன் தினம் போல்தான் இருக்கிறது. ஏனென்றால் என் வாழ்க்கை அதிவேகமாக போய்க் கொண்டிருக்கிறது.

ஒன்று அறியாமையில் மூழ்க வேண்டும் அல்லது ஞானோதயம் அடைய வேண்டும். இல்லையென்றால் உலகில் வாழ்வதென்பது மிகவும் கடினம்” என்று தன் உரையை தொடங்கியுள்ள சத்குரு, “உங்களுக்கு நான் சந்நியாச தீட்சை வழங்க இருக்கிறேன்,” என்று புதிர் போட்டிருக்கிறார்…

என்ன சொன்னார்… விரைவில் சந்திப்போம்…

3 Sep – 8.11pm

இதென்ன காமெடி

தலைப்பு Isha Reel!

தன் பிறந்த நாளன்று மக்களை சிரிக்க வைக்கும் திட்டமா? சார்லி சாப்ளின் பேசும் படம் போல ஒரு வீடியோ தொகுப்பு…

தீவிரத்தின் உச்சத்தில் இருக்கும் இந்த ஞானி… சிறந்த நகைச்சுவையாளரும்கூட என்று மக்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது.

முதலில் மாட்டுவண்டியில் அமர்ந்து வலம் வரும் சத்குருவின் முகத்தில் அசட்டுச் சிரிப்பு. அரங்கம் சிரிப்பலையில் வெடித்தது. உடனே சத்குரு ஹெலிகாப்டர் ஓட்டும் காட்சி! சத்குருவின் குழந்தை சேட்டைகளும் அட்டகாசங்களும் தொடர்ந்து மக்கள் சிரிப்பை நிறுத்தவேயில்லை.

ஹோம் ஸ்கூல் மாணவர்களுடன் அவர் அரட்டை அடிக்கும் காட்சிகளும், சைக்கிளில் ‘வாழைப்பழம் வாழைப்பழம்’ என்று பழம் விற்பவர்போல் அவர் வலம் வந்த காட்சிகளும், உலகில் எந்த நகைச்சுவை நடிகரும் தோற்றே போவார்.

இந்த நகைச்சுவை வீடியோ முடிந்தவுடன் சிரிப்பலை இன்னும் முடிவதற்கு முன்பே ஆட்டம் போட வைக்கும் ஹோம் ஸ்கூல் மாணவர்களின் பாடலும், தாளம் போட வைக்கும் சமஸ்கிருதி மாணவர்களின் பாடலும், காண்பவர்க்கு விருந்தாய் அமைந்தது.

குழந்தைகளை தொடர்ந்து தனது முஷ்டியை முறித்துக் கொண்டு களமிறங்கி உள்ளது சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா. மக்களின் மனங்களை ஓயாமல் கொள்ளைக் கொள்ளும் இவர்களுக்கு இன்றும் ஏகோபித்த வரவேற்பு.

சத்குரு மேடை ஏறிய பின் மீண்டும் சந்திப்போம்…

3 Sep – 7.58pm

ஆதியோகி ஆலயத்தின் விஸ்தாரம், 5000 மக்கள் அமைதியாய் அமர்ந்திருந்த அழகு, இனிமையான மாலை வேளை என்ற இதமான சூழ்நிலையில் உஸ்தாத் அப்துல் ரஷித் கானின் இசை நிகழ்ச்சி இனிதே அரங்கேறி முடிந்தது.

கணீரென்ற குரலில் மேடை அதிர உடலுக்கு மட்டுமே வயது, தன் குரலுக்கு அல்ல என நிரூபித்தார் உஸ்தாத் அவர்கள்.

சத்குரு மேடைக்கு கீழே அமர்ந்து மிகவும் ஆனந்தமாக இந்த இசையை ரசித்தார். உஸ்தாத் அவர்கள் பாடி முடித்த கையோடு, “எப்படி ஒரு மனிதர் உடல் தாண்டி இருக்க முடியும் என்பதற்கு இவர் ஒரு அடையாளம்” என்று வியந்து பாராட்டினார்.

பல மேடைகளில் கரவொலி வாங்கியிருக்கும் இந்த நூறு வயது இளைஞரின் கிரீடத்தில் மற்றொரு முத்து.

3 Sep – 7.40pm

சென்சுரியன் ம்யூசிஷியன்

பிரபல எழுத்தாளர் அருந்ததி சுப்பிரமணியம் கூடியிருந்தோரை வரவேற்றுக் கொண்டிருக்க… சத்குரு இன்னும் சற்று நேரத்தில் நம் முன் இருப்பார் என்று சொல்லி அவர் வாய் மூடுவதற்குள் துளிர் விட்ட மலராய் உள்ளே நுழைந்தார் சத்குரு.

அனைவரும் காத்திருந்த உஸ்தாத் அப்துல் ரஷித் கானின் சிறப்பு இசை ஆராதனை 6 மணிக்கு தொடங்கி நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.

24 வயதில் 74 நோய்கள்… என்ற நவநாகரீக காலத்தில், துரத்திடும் வயது! மிரட்டிடும் நோய்கள்! அழைத்திடும் மரணம் என்று பெரும்பாலோருக்கு உடலே சுமையாய் போன நிலையில்…
தன் வயதால் சதமடித்த இந்த சங்கீத மேதை தன் கலையிலும் நூறு சதவீதம் தான்!

தன் சங்கீத பயணத்தை 5 வயதில் துவங்கிய இவர் இப்போது 104 வயதிலும் தன் இசைப் பயணத்தை தொடர்கிறார்.

அவர் தன்னைப் பற்றி கூறும்போது “கடந்த 20 ஆண்டுகளாக நான் பயிற்சி செய்வதில்லை. பயிற்சியும் செய்துவிட்டு மேடையிலும் பாடுவதில் என் உடல் ஒத்துழைக்கவில்லை. அதனால் நான் நேரடியாக மேடையில் பாடுகிறேன்,” என்று கூறுகிறார்.

100 வயதானாலும் மக்களை திருப்திபடுத்துவதில் குறையொன்றும் இல்லை இந்த இசை மேதைக்கு. கை தட்டல்களும், ஆங்காங்கே மெல்லிய நடனமுமாய் மக்கள் இந்த இசை வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள்.

3 Sep – 7.11pm

மாட்டு மனை 2

மற்றுமொரு ஹோம் ஸ்கூல் ஆசிரியரான உமா சுதர்ஷன் அக்கா நமக்காக இன்னும் சில தகவல்களை எஸ் எம் எஸ் செய்தார்…

மெக் டோனால்ட்ஸ், பர்கர் கிங் என்று போய் கொண்டிருக்கும் இன்றைய காலத்தில், மாட்டு மனை என்று பாரமபரிய பெயரிட்டு அழகான குடிசை மனைக்கு, தனக்கே உரிய கம்பீரத்துடன் வந்தார் சத்குரு.

அங்கே குழலூதும் கண்ணன் சிலையை ஒட்டி, பசுவும் கன்றும் ஆனந்தத்தில் ஆர்பரிக்க, ஈஷா ஹோம் ஸ்கூலில் உள்ள அனைவரும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாட, மேளமும் தாளமும் முழங்க, கரகோஷம் விண்ணை பிளக்க, புதிய உணவகத்தை, மாட்டு மனையை திறந்தார். மனை திறந்ததில் எங்கள் மனக் கதவும் திறந்தது.

அவர் சொல்வது போலவே மாட்டு மனை மட்டுமல்ல, இன்று மாலை சத்சங்கத்திற்காக காத்திருக்கும் எங்கள் மனக் கதவும் திறந்துதான் இருக்கிறது!!

3 Sep – 6.01pm

மாட்டு மனை கஃபே

ஈஷா ஹோம் ஸ்கூலில் புதிதாக துவங்கப்பட்டிருக்கும் உணவகம்…

மிகவும் புதுமையான பெயர்தான்! உணவும் புதுவிதமாகத்தான் இருக்குமோ!

சத்குரு திறந்து வைக்க சென்றுவிட்டார், பள்ளி நிகழ்ச்சி! எங்களுக்கு அனுமதி இருக்குமோ என்ற தயக்கத்துடன் நிகழ்ச்சியில் இருந்த ஆசிரியர் ஒருவருக்கு தகவல் அனுப்பினோம்.

அங்கிருந்த ஷிவா அண்ணா லைவ் ப்ளாகிற்காக சுடச்சுட எஸ் எம் எஸ் அனுப்பி நம்மை திகைக்கச் செய்துவிட்டார்.

“வந்தார், திறந்தார், சென்றார். புதிய உணவகத்துடன் பூட்டியிருந்த எங்கள் உள்ளங்களையும் தான்!”

“மாட்டு மனை” பள்ளியில்; ஆசிரியர்கள் மகிழ்ச்சியில்…

3 Sep – 5.48pm

சத்குரு ப்ளாஷ்பேக் 2

பாம்புத் தோழன்

மரத்தின் உச்சியும் அச்சத்தை ஏற்படுத்தவில்லை. ஆசிரியரின் கோபமும் இவரின் வேகத்தை குறைக்கவில்லை! இதெல்லாம்கூட பரவாயில்லை! ஆனால் நாகத்தின் தேகம்கூட நடுக்கம் ஏற்படுத்தாத இந்த சிறுவன் யார்?

ஒரு நாள் அருகில் உள்ள தொழிற்சாலையில் சென்று பாம்பு பிடித்து அதனை விட்டுவிட மனமில்லாமல் வீட்டிற்கு எடுத்து வந்து தன் படுக்கைக்கு அடியில் ஒளித்துவைத்த ஜகிக்கு இது நெருங்கிய தோழனானது.

ஜாடிக்குள் அமைதியாய் உறங்க வைத்துவிட்டு பள்ளி சென்று வந்த பிறகு மூடியைத் திறந்து தோழனை அமைதியாய் வாக்கிங் அழைத்து செல்வதும் வழக்கமாய் ஆனது.

வீட்டில் யாருக்கும் தெரியாமல் இந்த ரகசிய சிநேகம் பல நாட்கள் தொடர்ந்தது. திடீரென ஒரு நாள் அந்த பாம்பின் “உஸ்” என்ற சப்தம் அவரது அப்பாவின் கவனத்தை ஈர்த்தது. இந்த சத்தம் எங்கிருந்து வந்தது என்று ஆராய்ந்தவர்.

ஜாடிக்குள் இருந்த பாம்பைக் கண்டு அதிர்ந்து போனார். பித்து பிடித்தவர்கள் போல் சோபா (Sofa) மேலும் மேசையின் மேலும் மாறி மாறி குடும்பமே குதித்து கொண்டிருக்க அமைதியாய் பள்ளியிலிருந்து திரும்பி வந்தார் ஜகி வாசுதேவ்

வீட்டிலுள்ள அனைவரும் Sofa வின் மேல் நின்று கொண்டிருக்கும் காரணம் புரியாமல் தன் 12 அடி நீள கருநாக தோழனை எப்போதும் போல வாக்கிங் கூட்டிச் சென்றார்!!

3 Sep – 5.36pm

எங்கள் இதயங்களின் வாசனை

ராமாத்தம்மா, கறுப்பய்யா போன்றவர்கள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு பதம் என்னும் வாசகத்துக்கு முழுதாய் ஒத்துப் போகக் கூடியவர்கள்.

யோக மையத்தில் வேலை செய்யும் 2300திற்கும் மேற்பட்ட சேவாதார்களில் இவர்களும் அடக்கம்.

எங்களுடன் இணைந்து, எங்களுடன் செயல் புரிந்து, யோக மையத்தின் பாகமாய் விளங்கும் இந்த பல மாநிலத்து சகோதரர்களுக்கு எங்கள் இதயங்களின் வெளிப்பாடாய் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 3ம் தேதியை அர்ப்பணித்து வருகிறோம்.

வங்காளம், ஆந்திரா, ஒடிசா, தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இங்கு வந்து ஊழியம் புரியும் இவர்களுக்கு இன்று உடை வழங்கப்பட்டது.

அனைவருக்கும் ஈஷா மையத்திலுள்ள பிரம்மச்சாரிகள், ஆசிரமவாசிகள் உணவு பரிமாற, இவர்கள் மனமாற உண்டனர்.

ஏன் இவர்கள் சேவாதார்கள் என்று அழைக்கிறோம் எனப் பார்த்தோம், பெயர் வரக் காரணமாய் இருந்த கதையை சொல்லாமல் போவோமா என்ன?

ஆதியோகி ஆலயம் கட்டிடப் பணியை மேற்பார்வையிட்டு நடத்தியவர்களுள் ஒருவரான ஈஷா என்ஜினியரிங்கை சேர்ந்த ஸ்வாமி சுபானாவை கேட்டோம்…

“தொடர்ந்து மழையிலும் இரவு 1 மணிவரை வேலை நடந்து கொண்டிருந்தது. அப்போது சத்குரு வந்து நின்று இந்த கட்டிடத்தை நம்மால் கட்டமுடியாது. இவர்களால் தான் இதை செய்ய முடியும். நாம் இவர்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இவர்களை கூலிகள் என்று அழைக்கக் கூடாது இவர்கள் எல்லாம் “சேவாதார்கள்” என்று சொன்னார். அன்றிலிருந்து கூலித் தொழிலாளர்களை சேவாதாரர்கள் என்றே அழைக்கிறோம்,” என்று பெயர் காரணம் பெற்ற வரலாற்றை வரிவாகச் சொன்னார்.

இன்றைய தினம், சேவாதார்கள் அமர்ந்திருக்க பிரம்மச்சாரிகள் உணவு பரிமாற ஞானோதயம் அடைந்தவர் முன்னிலையில் அனைவரும் ஒன்றே! என்ற உண்மை எங்களுக்கு தெளிவாக புரிந்தது.

3 Sep – 5.26pm

களங்கமில்லா கறுப்பு

கறுப்பு என்று பெயர் இருந்தாலும் தீர்த்தக்குண்ட கழிப்பறைகள் வெளுப்பாய் இருக்க சிறப்பாய் செயலாற்றும் இவர் இன்னுமொரு சேவாதார்.

சத்குரு தர்ஷனுக்காக வருவார் என்று தெரிந்ததுமே தீர்த்தக்குண்ட வாசலில் ஓரமாக சத்குருவின் கடைக்கண் பார்வைக்காக காத்துக் கொண்டிருப்பார் கறுப்பு.

சத்குருவின் பிரம்மாண்டம் என்னவென்று உணர்ந்தவர்கள் அவரை வணங்காமல் இருக்க முடியாது.

சத்குருவின் உருவம் மட்டுமே தினமும் கண்டு, கறுப்பு அவரை உண்மையாய் வணங்கும் அந்த காட்சியை பார்ப்பவர்கள் ரசிக்காமல் இருக்க முடியாது.

சத்குருவும், கருப்பின் அந்த அன்பிற்கு பரிசாக தன் பார்வையால் அவரை தொட்டே செல்வார்.

3 Sep – 4.38pm

சத்குரு ப்ளாஷ்பேக் 1
வாகனத்தின் வேகத்திலிருந்து வாழ்க்கையின் எல்லை வரை

கணித பாடத்தின் சூத்திரங்களுக்குள் (Formula) தொலைந்து போவதைவிட மரத்தின் கடைசி உச்சியில் தொங்குவதே மேலானது என்ற ஜகியின் குறுகுறு கண்கள், துறுதுறு கால்கள் பெரியவர்களையும் சற்று கலங்கவே வைத்தது.

எதற்கும் பயம் கொள்ளாத இந்த சிறுவன் வகுப்பில் கவனம் கொள்வது இல்லை, ஆசிரியரின் கேள்விகளுக்கு பதிலும் கூறுவதில்லை.

ஒரு நாள் பொறுமையிழந்த ஆசிரியர் “நீ தெய்வமாக இருக்க வேண்டும்! அல்லது பேயாக இருக்க வேண்டும்” என்று சொல்லி… “நீ அநேகமாக பேயாகத்தான் இருப்பாய்” என்றார்.

அன்று மரங்களின் உச்சியில் துவங்கிய தியானம் இன்று மனித மனங்களின் ஆழத்தை தோண்டிய கதைகள்… இன்னும் சுவாரசியமான சம்பவங்களுடன்… இணைந்திருங்கள்!

3 Sep – 3.53pm

ராமாத்தம்மா…

ஆசிரமத்தில் பல சேவதார்கள் பல வருடங்களாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ராமாத்தம்மா…

தினமும் தியானலிங்க வாசலை கூட்டி கோலமிடுபவர்.

வேலை தேடி இங்கு வந்தவர்க்கு ஆலயத்தின் தூய்மையே வாழ்வானது…

தியானமே யோகமோ தெரியாது! ஆனால் வேஷமும் துவேஷமும் இல்லாமல் தியானலிங்க திருக்கோயிலின் பராமரிப்பில் தன் வாழ்நாள் முழுவதும் கழிக்க முடிவு செய்தார்.

பதவி உயர்வும் சம்பள உயர்வும் அளித்தாலும் ஒரே வேலையில் நிலைத்திருப்பவர்கள் அபூர்வமாகிவிட்ட காலத்தில் இவர் இந்த முடிவெடுக்க காரணம் என்ன?

ஒரு வார்த்தை! ஆம் ஒரே வார்த்தை மட்டுமே! “இந்த கோயிலை பார்த்துக்கம்மா” என்று சத்குரு சொன்ன ஒரு வார்த்தைதான்.

“என் உயிர் போற வரைக்கும் இங்கதான் இருப்பேன், சாமி சொல்லி இருக்காரு,” என்று சொல்லி நம்மை நெகிழ வைக்கும் இவர் கைவண்ணத்தில் லிங்கஜோதி விளக்கு பளிச்சிடுவது மட்டுமல்ல, இவரது தூய்மையான அன்பும் பக்தியும் நம் உள்ளங்களையும் ஒளிர வைக்கிறது.

3 Sep – 3.20pm

யார் இந்த சேவாதார்கள்?

வெள்ளியங்கிரி மலைச் சாரலின் அழகும் அதன் அடிவாரத்தில் இயற்கையோடு இயைந்த ஈஷா யோக மையமும் வாழ்வின் ஆன்மீகத் தேடலில் வருவோர்க்கு வழியாய் இருக்கும் தியானலிங்கம் மற்றும் லிங்கபைரவி கோயிலும் ஒருவர் ஒருமுறை வந்து சென்றாலும் அவர் வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாகவே இருக்கிறது.

சமீபத்தில் ஈஷா யோகா மையத்திற்கு பெங்களூருவிலிருந்து வந்திருந்த திருமதி ரேகா, “கோயில் முதல் கழிப்பறை வரை ஒவ்வொரு அமைப்பிலும் கதவிலும் ஜன்னலிலும் கூட ஈஷாவின் தனித்தன்மை வெளிப்படுவதைக் காண முடிகிறது. இதன் தூய்மையும் கோலமும் மலர் அலங்காரமும் ஒருவர் மனதிற்குள்ளே ஊடுருவி ஆழந்த அமைதியை ஏற்படுத்துகிறது,” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “இங்கு வாழும் ஆசிரமவாசிகளும், சேவாதார்களும், ஊழியர்களும் வேலை செய்யும் முறையை பார்த்தால் பிரிவினையே இல்லாமல், அப்படி ஒரு இணைப்பை உணர முடிகிறது” என்கிறார்.

சரி யார் இந்த சேவாதார்கள்?

இவர்கள் தியானம் என்றே என்னவென்று புரியாமல் சத்குரு என்றால் யாரென தெரியாமல் வெறும் கூலி வேலை தேடி வந்தவர்கள். தன் அர்ப்பணிப்பாலும் நம்மை நெகிழ வைக்கும் இவர்களையே நாம் ஈஷா யோகா மையத்தில் சேவாதார்கள் என்று அழைக்கிறோம்.

3 Sep – 1.52pm

இன்று அன்பு, ஆனந்தம், பேரானந்தம் போன்றவற்றை ஏதோ வார்த்தையாய் அல்லாமல் உயிராய் வழங்கிய தன் குருவின் பிறந்த நாள்! மக்கள் முகமெல்லாம் மலர்ச்சி!

உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான தியான அன்பர்கள் இன்றைய நாளை தன் வீட்டு விழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர்.

வேலை நாளாக இருந்த போதிலும் இன்று பலர் தன் வேலைக்கு விடுமுறை எடுத்து சத்குருவை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக ஆசிரமம் நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.

நேற்றிலிருந்தே மக்கள் வர ஆரம்பித்துவிட்டனர்.

மதியம் 1 மணி நிலவரப்படி 1200 தியான அன்பர்கள் இங்கு கூடியுள்ளனர்.

இவ்விழாவிற்கு சுமார் 3000 பேர் எதிர்பார்க்கப்படுகின்றனர்.

3 Sep – 1.10pm

1957ம் ஆண்டு செப்டம்பர் 3ம் நாள் வாசுதேவ், சுசீலா தம்பதியருக்கு ஒரு குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஜகதீஷ் (உலகத்துக்கே கடவுள்) என்று பெயரிடப்பட்டது.

புதிதாக பிறந்த குழந்தையின் ஜாதகம் ஒரு ஜோதிடரிடம் காண்பிக்கப்பட்டது. ஜோதிடத்தை கணித்தவர். “அற்புதமான வாழ்விற்கு ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தை” என்று எழுதினார்.

“ஆடுகளை மேய்திட அல்ல, மனிதர்களை பரவசப்படுத்தப் பிறந்தவன்” என்று ஆருடம் கூறிவிட்டுச் சென்றார்.

ஜகதீஷ் ஜகி ஆகி, ஜகி சத்குருவானது வரலாறு

இன்று செப்டம்பர் மூன்று கொண்டாட்டங்கள், ஈஷா யோகா மையம் முழுவதும் பரவசமாய்.

உங்களையும் பரவசப்படுத்த, கோவையிலிருந்து இன்றைய நிகழ்ச்சிகள் முழுவதும் உங்கள் இல்லங்களிலும்…

இந்த குதூகலக் கொண்டாட்டத்தில் எங்களுடன் இணைந்திருங்கள்!!
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert