இக்காலத்தில் வெகு சீக்கிரம் பணம் சம்பாதித்தும் பலருக்கும் வாழ்வில் அலுப்பு தட்டுகிறதே! 'என்னடா இது... வாழ்க்கை இவ்வளவுதானா?' என்று சலித்துக்கொள்ளத் தோன்றுகிறது. அப்படியொருவர் சத்குருவிடம் கேள்வி கேட்க... சுவாரஸ்யமாய் அமைகிறது சத்குருவின் பதில்!

Question: சிலர் வாழ்வில் வெகு சீக்கிரமே சம்பாதிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இருபது இருபத்தியோறு வயதிலேயே, பெரிய நிறுவனங்களில் நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள். ஆனால் சில காலத்திலேயே, அவர்கள் வாழ்வில் ஏதோ ஒன்று குறைவதுபோல்... ஒருவித வெறுமையை உணர்கிறார்கள்.

சத்குரு:

சாமான்யமாக பலருக்கும் அறுபது வயதில் நடந்த விஷயங்கள், இப்பொழுது இருபத்திநான்கு வயதிலேயே இவர்களுக்கு நடக்கிறது. இதற்கு அவர்கள் சந்தோஷப்பட வேண்டும். வாழ்க்கை பற்றி சீக்கிரமே புரிய ஆர்ம்பிக்கிறதே! இல்லையென்றால் அவர்கள் தம் முழு வாழ்க்கையையும் வீணாக்கி, அதன்பின் தான் புரிந்துகொண்டிருப்பார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

முன்னால் இருந்த தலைமுறை ஏன் இதை உணரவில்லை என்றால், பதினெட்டு வயதாவதற்குள்ளேயே அவர்களுக்கு திருமணம் செய்து விடுவார்கள். இருபத்தினான்கு வயதாவதற்குள் அவர்களுக்கு நான்கு குழந்தைகள் ஆகிவிடும். அதன்பின், பிள்ளைகளை படிக்க வைப்பது, அவர்களுக்கு கல்யாணம் செய்வது என்று வாழ்க்கையே ஒரு போராட்டமாக நிகழும். இதைமுடித்து நிமிர்வதற்குள், பேரக்குழந்தைகள் வந்துவிடுவார்கள். 'என்ன நடந்தது' என்று புரியும் முன்பே உங்களை மண்ணில் புதைக்கும் நேரம் வந்துவிடும்... உங்கள் வாழ்க்கை முடிந்திருக்கும்!

இன்றோ, உங்களுக்கு 25 வயதாகிறது... கல்யாண நெருக்கடி இன்றி தனித்துள்ளீர்கள். உங்களிடம் பணம் இருக்கிறது, உலகத்தை ஓரளவிற்கு பார்த்தும் ஆயிற்று.. இதில் ஒரு அர்த்தமும் இல்லை என்பதை உணர்ந்தும் விட்டீர்கள்..! இந்தப் புரிதல் வெகு சீக்கிரமே இன்று மக்களுக்கு நடந்துகொண்டிருப்பது நல்லதுதான்

Question: அப்படியென்றால் இந்த நேரத்தில் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? எந்தப் பாதையை அவர்கள் ஏற்க வேண்டும்?

சத்குரு:

இதில் இரண்டு வழிகளெல்லாம் இல்லை. இருப்பதெல்லாம் வாழ்க்கை மட்டும்தான். இந்த வாழ்க்கை மிக மேலோட்டமாக இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால், அது... நீங்கள் வாழ்வை மிக மேலோட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதால்தான். வாழ்வில் இன்னும் சற்று ஆழமாக நீங்கள் பிரவேசிக்க வேண்டும். 'இதற்கு வேறேதேனும் வழி இருக்கிறதா?' 'இல்லை... எனக்கு சாகவேண்டும்', 'இருப்பதா போவதா'? என்று எண்ணினால்... நினைவில் கொள்ளுங்கள்... மரணம் கூட வாழ்வின் ஒரு பகுதி தான். இங்கு வாழ்வதைத் தவிர நீங்கள் வேறொன்றுமே செய்யமுடியாது. ஒன்று, வாழ்வை மேலோட்டமாக வாழ்ந்துபோகலாம், இல்லை... அதையே மிக ஆழமாக உணர்ந்து பார்க்கலாம். சொல்லுங்கள்... வேறென்ன வழி இருக்கிறது?

Question: அப்படியென்றால் இன்னொரு கேள்வி... சரியான குருவை எப்படித் தேர்ந்தெடுப்பது? இங்கு பலருக்கும் யாரை நம்புவது என்றே தெரிவதில்லை.

சத்குரு:

யாரையும் நம்ப வேண்டாம். நீங்கள் ஈஷாவிற்கு வந்தால் உங்களுக்கு ஒரு எளிய பயிற்சியைத் தருகிறேன். அதை செய்யத் துவங்குங்கள். அதனால் உங்களுக்குள் எவ்வித மாற்றமும் நிகழவில்லை என்றால், அதை விட்டுவிட்டு நீங்கள் போகலாம். இல்லை... ஏதாவது மாற்றத்தை நீங்கள் உணர்ந்தால், அடுத்த படியை எடுக்கலாம். ஒருவேளை அதை செய்யத் துவங்கியதும், உங்களுக்குள் ஏதோ ஒன்று விழித்துக் கொண்டது என்றால், அதன்பின் நான் உங்களுக்கு எதுவும் சொல்லத் தேவையில்லை, நீங்களே என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வீர்கள். அதுவரை, முதலில் ஒரு படி எடுங்கள். அது வேலை செய்வதாய் உணர்ந்தால், அடுத்த படி எடுக்கலாம். இப்படி ஒவ்வொரு படியாய் ஏறலாம்.

Question: ஆனால் குறிக்கோள் என்ன என்பதை எப்படி அறிவது?

சத்குரு:

நீங்கள் ஒரு சில கட்டுப்பாடுகளுக்குள் வாழ்ந்து வருகிறீர்கள் என்று புரிகிறதா? உங்களின் ஒரே குறிக்கோள் அதிலிருந்து விடுபடுவதுதான். அவ்வழியில் உங்கள் திறமைக்கு ஏற்றவாறு நீங்கள் வாழ்வில் ஏதோ செய்யலாம். அது தரையைப் பெருக்குவதோ, இல்லை ஏதோ நிர்வாகம் செய்வதோ, இல்லை ஒரு தேசத்தையே ஆள்வதோ - அது எதுவாக இருந்தாலும், நாம் செல்லும் வழியில் அது வெறும் ஒரு பாகம் மட்டுமே. இந்தியாவில் வாழ்வதின் தனிச்சிறப்பே அதுதான். நீங்கள் ஒரு அரசனோ, இல்லை படிக்காத விவசாயியோ, இல்லை கற்றரிந்த பண்டிதரோ, எல்லோரும் ஒரே குறிக்கோளை நோக்கித்தான் போய்க் கொண்டிருக்கிறோம். அதுதான் - முக்தி. அரசனாக இருப்பதால் மட்டுமே நீங்கள் உயர்ந்தவராகிவிட மாட்டீர்கள். எல்லோரும் ஒரே இடத்தை நோக்கித்தான் போய்க் கொண்டிருக்கிறோம். அங்கு யார் சீக்கிரம் சென்றடைகிறோம் என்பதுதான் முக்கியம்.