அதிக மதிப்பெண் வாங்கும் மாணவர்களை மட்டுமே கொண்டாடும் பள்ளிகள் மத்தியில், 'ஈஷா வித்யா' மாணவர்களின் திறமையைக் கண்டறிந்து அதனை முழுமையாய் வெளிப்படுத்த துணைநிற்கிறது. அதன் பலனாய் ஈஷா வித்யா பள்ளி மாணவன் சர்வதேச வில்விதை போட்டியில் பங்கேற்க இத்தாலி செல்கிறான். இங்கே அந்நிகழ்வு குறித்து சில வரிகள்...

"படித்தால் மட்டுமே இங்கே மதிப்பு! விளையாட்டெல்லாம் இரண்டாம் பட்சம்தான். விளையாட்டில் சாதிப்பதாய் சொல்லிக்கொண்டு எதிர்காலத்தை வீணடிக்காதே!" தமிழ்நாட்டில் விளையாட்டில் ஆர்வமும் திறமையும் உள்ள ஒவ்வொரு மாணவனும் இந்த அறிவுரையை சுற்றத்தாரிடமிருந்து கேட்டிருப்பான். இதுபோன்ற மனநிலை இருக்கும் வரை இந்தியா எப்படி பதக்கப்பட்டியலில் முன்னேறும்?!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
கீழே கிடந்த அம்புகளை எதேச்சையாக எடுத்து அதனை இலக்கு நோக்கி எய்தபோது, அது அபாரமாக இலக்கை அடைந்தது.

ஒரு மாணவன் விளையாட்டிலோ அல்லது கல்வியிலோ வெற்றிபெறுவதற்கு திறமையும் ஆர்வமும் இருந்தால் மட்டும் போதாது. குடும்பத்தாரின் ஆதரவும், அவன் படிக்கும் பள்ளியிலிருந்து ஊக்கமும் உதவியும் அவசியம் தேவை! அந்த வகையில் ஈஷா வித்யா பள்ளிகள், மாணவர்களின் திறமையை கண்டறிந்து, அவர்கள் தங்களை முழுமையாய் வெளிப்படுத்துவதற்கு அனைத்து சூழ்நிலைகளையும் அமைத்து தருகின்றன.
சேலம் வனவாசியில் அமைந்துள்ள ஈஷா வித்யா பள்ளியைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவரான செல்வன்.ஜி.கார்த்திகேயன், மும்பையில் நடந்த மும்பை மேயர் கோப்பைக்கான தேசிய உள்ளரங்க வில்வித்தை சேம்பியன்ஷிப் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

கார்த்திகேயனின் குடும்ப சூழல்!

ஜுலை 12, 13 ஆகிய நாட்களில் மும்பையின் புறநகர் வில்வித்தை நலச்சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த தேசிய அளவிலான போட்டியில் பதக்கம் வென்றுள்ள கார்த்திகேயன் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். ஓட்டலில் சர்வர் வேலை பார்க்கும் கார்த்திகேயனின் தந்தை, வறுமை நிறைந்த சூழலிலும், தனது மகன் மீது கொண்டுள்ள அக்கறையும் பொறுப்புணர்வும்தான் கார்த்திகேயன் இவ்வளவு பெரிய வெற்றியை அடைவதற்கு தூண்டுகோலாய் அமைந்துள்ளது.

ஈஷா அறக்கட்டளை மூலம் இயங்கி வரும் ஈஷா வித்யா பள்ளியில், ஏழை மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை மூலம் படிக்கும் கார்த்திகேயன் இந்த வெற்றியின் மூலம், வரும் அக்டோபர் 30 முதல் நவம்பர் 1 வரை இத்தாலி நாட்டில் சர்வதேச கள வில்வித்தை அமைப்பின் சார்பாக நடத்தப்படவிருக்கும் “ஐரோப்பிய உள்ளரங்க வில்வித்தை சாம்பியன்ஷிப்” போட்டியில் இந்திய அணி சார்பாக கலந்துகொள்ளப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திறமையை கண்டறிந்தது எப்படி?!

செல்வன்.கார்த்திகேயன் வில்வித்தையில் தனக்குள்ள திறமையினை அடையாளம் கண்டுகொண்ட சம்பவம் சுவாரஸ்யமானது. ஒருமுறை, சேலம் மாவட்ட அரசு விளையாட்டு அரங்கத்திற்கு தனது நண்பனைக் காணச் சென்ற கார்த்திகேயன், அங்கிருந்த வில்லை தற்செயலாகப் பார்த்துக்கொண்டிருந்தார். கீழே கிடந்த அம்புகளை எதேச்சையாக எடுத்து அதனை இலக்கு நோக்கி எய்தபோது, அது அபாரமாக இலக்கை அடைந்தது. இதனைக் கண்ட மாவட்ட வில்வித்தை பயிற்சியாளர், கார்த்திகேயனிடத்தில் இயல்பாக இருந்த வில்வித்தை திறமையை வளர்க்கும் விதத்தில் அவருக்கு பயிற்சி அளித்தார்.

மேலும், எதிர்வரும் ஆகஸ்ட் 28 முதல் 31 வரை ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள ராஞ்சியில் நடைபெறவிருக்கும் 2014ஆம் ஆண்டிற்கான தேசிய வில்வித்தை சேம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிகளைக் குவிக்க செல்வன்.கார்த்திகேயனை வாழ்த்துவோம்! முடிந்தால் ராஞ்சிக்கு சென்று அவரை உற்சாகப்படுத்துவோம்.

ஈஷா வித்யா பள்ளிகளின் செயல்பாடுகள்

ஈஷா அறக்கட்டளையின் கல்வித்திட்டமான ஈஷா வித்யா, கிராமப்புறங்களில் கல்வியின் தரத்தை உயர்த்தி, பின்தங்கிய நிலையில் உள்ள கிராமக் குழந்தைகளும் தங்கள் முழுமையான திறனை உணர்வதை உறுதி செய்கிறது. தரம் வாய்ந்த கல்வியை பெறுவதன் மூலம் கிராமப்புறக் குழந்தைகளும் சமமான வாய்ப்புகள் பெற்று இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கச் செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாக இருக்கிறது.

ஆங்கிலம் பேசுவதும், கம்ப்யூட்டர் அறிவும் ஏழை மாணவர்களுக்கு எட்டாக் கனியாய் இருக்கும் நிலையில், அந்நிலையை மாற்றி வசதியற்ற மாணவர்களுக்கு குறைவான கட்டணத்தில் தரமான கல்வியை வழங்குகிறது ஈஷா வித்யா. இதுபோன்ற மெட்ரிக்குலேஷன் பள்ளிகளை ஒரு தாலுகாவிற்கு ஒன்றென துவங்கும் முனைப்பில் செயல்படுகிறது ஈஷா வித்யா!

கிராமப்புற ஏழை மாணவர்கள் ஒவ்வொருவரின் திறமையையும் வெளிக்கொணரும் வகையில் நவீன உத்திகளைக் கொண்ட ஈஷா வித்யாவின் பாடத்திட்டங்கள், எதிர்கால சவால்களை சமாளிக்கக்கூடிய திறனை, கிராமப்புறக் குழந்தைகளுக்கு அளிக்கிறது. தமிழ்நாட்டில் வட்டத்திற்கு ஒன்றாக மொத்தம் 206 பள்ளிகளை தொடங்குவது இத்திட்டத்தின் நோக்கமாக இருக்கிறது. எதிர்ப்பார்ப்பின்படி, அனைத்து பள்ளிகளும் இயங்கத் துவங்கும்போது, 5,00,000 மாணவர்களுக்கும் மேல் பயனடைவதாக இருக்கும்.