நம் கலாச்சாரத்தில் விளக்கேற்றினால் கன்னத்தில் போட்டுக்கொள்கிறோம். விளையாட்டுப் போட்டி என்றால் மைதானத்தைக் கையால் தொட்டு வணங்கிவிட்டு, பின்னர் மைதானத்தில் நுழைகிறோம். ஈஷாவில் கூட உணவு அருந்துவதற்கு முன்னர், ‘சஹனா வவது’ என்னும் சமஸ்கிருதப் பாடல் பாடி பிரார்த்தனை செய்துவிட்டு உணவருந்துகிறோம். அது ஏன் என்று ஒரு சாதகர் கேட்ட கேள்விக்கு சத்குரு அளித்த பதில்...

சத்குரு:

அது ஒரு பிரார்த்தனை அல்ல. இந்தியக் கலாச்சாரத்தில் பிரார்த்தனை என்பதே இருந்ததில்லை. பிரார்த்தனை என்பது நமது கலாச்சாரத்தில் சமீப காலங்களில்தான் உண்டானது. வெளியிலிருந்து வந்த மதங்களைப் பார்த்து நாம் பின்தங்கி இருக்கிறோமோ என்று எண்ணி, பிரார்த்தனையை நாமே உண்டாக்கிக்கொண்டோம். உண்மையில் கோவில்கூட பிரார்த்தனைக்கான இடமாக இருந்ததில்லை. சக்தியைத் தேக்கிவைக்கும் இடமாகத்தான் இருந்திருக்கிறது.

உங்கள் அனுபவத்தில் நீங்கள் சுவாசிக்கும் காற்று, நீங்கள் நடக்கும் நிலம், நீங்கள் உண்ணும் உணவு இவைதான் உண்மையான கடவுள்கள். இந்தக் கடவுள்கள்தாம் ஒவ்வொரு கணமும் உங்களை உயிருடன் வைத்திருக்கிறது.

உணவருந்துவதற்கு முன்னரோ அல்லது யோகப் பயிற்சிகள் செய்வதற்கு முன்னரோ, நாம் அப்படி உச்சரிப்பதன் மூலம் நம்மை நாமே ஒரு குறிப்பிட்ட தன்மைக்காகத் தயார்செய்துகொள்கிறோம். நம்முள் உள்ள சிறந்த தன்மையை வெளிக்கொணர அது உதவுகிறது. உதாரணமாக, சாப்பிடுவது என்பது வெறுமனே ஒரு சாதாரண செயல் அல்ல. அது நம்மை உயிருடன் இருக்கவைத்து நம் வாழ்க்கை நீடிக்கும்படி பார்த்துக்கொள்கிறது. சாப்பிடுவது என்பது எதையோ உங்கள் வயிற்றுக்குள் திணித்துக்கொள்வதல்ல. சமஸ்கிருத மொழியில் மட்டும்தான் ஒலியும் வடிவமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கிறது. நீங்கள் அதன் பொருள்கூட தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் அதை வெறுமனே உச்சரித்தாலே, ஒரு குறிப்பிடட சூழ்நிலையை நீங்கள் உங்களுக்குள் உருவாக்கிக் கொள்கிறீர்கள். இப்படிப் பாடுவதால் ஒரு புரிதலுடனும் ஒரு மதிப்புடனும் உணவை அணுகுவதற்கான ஒரு சூழ்நிலையை நமக்குள் உருவாக்கிக்கொள்கிறோம். கடவுளுக்காக நாம் அதைப் பாடுவதில்லை. கடவுளுக்கு நன்றி சொல்வதும் நமது நோக்கமல்ல.

உங்களுக்காக கடவுள் எதுவும் உணவு தயார் செய்து தருவதில்லை. உங்களுக்கு உணவு கிடைத்ததற்கு இங்குள்ள பல்வேறு மக்கள்தான் காரணம். நீங்கள் சொல்லிக்கொண்டு இருக்கும் கடவுளை நீங்கள் பார்த்ததே இல்லை. உங்களை வாழவைக்கும் கடவுள் உண்மையில் உணவுதான். எனவேதான் நாம் இதை அன்னபூரணி என்கிறோம். இப்படி நாம் சொல்லும்போது, ஏதோ ஒரு தேவதை எங்கோ உட்கார்ந்து கொண்டு நமக்காக உணவு தருகிறாள் என்பதல்ல. நாம் உணவையே தேவதையாக மதிக்கிறோம். அன்னம் பிரம்மம் அதாவது உணவுதான் கடவுள்.

உங்கள் அனுபவத்தில் நீங்கள் சுவாசிக்கும் காற்று, நீங்கள் நடக்கும் நிலம், நீங்கள் உண்ணும் உணவு இவைதான் உண்மையான கடவுள்கள். இந்தக் கடவுள்கள்தாம் ஒவ்வொரு கணமும் உங்களை உயிருடன் வைத்திருக்கிறது. இதை நீங்கள் புரிந்து கொள்ளும்போது ஆழமான அன்போடும் மிகவும் நன்றியுணர்வோடும் உணவருந்த ஆரம்பிப்பீர்கள்.உணவை வீண் செய்யவும் மாட்டீர்கள். எனவே நீங்கள் குறிப்பிட்ட செயல்களுக்கும் பிரார்த்தனைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. குறிப்பிட்ட ஒரு தன்மையை நமக்குள் கொண்டுவருவதற்காகத்தான் நாம் அது போன்று செய்கிறோம். நமது ஆன்மிக வளர்ச்சியேகூட அந்தத் தன்மையை அடிப்படையாகக் கொண்டே இருக்கிறது!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.