ஈஷா யோகா மையத்தில் நடைபெறவிருக்கும் கலையின் கைவண்ணம் என்ற கைவினைக் கண்காட்சியில் இடம்பெறவிருக்கும் சங்கனேரி அச்சுக்கலையைப் பற்றியும், தும்பா கலைவண்ணம் பற்றியும் இங்கே சில தகவல்கள்.

வே றுபாடுகளையும் இயல்பான திறமைகளையும் கொண்ட இந்திய கலைஞர்களைக் கொண்டாடும் விதமாக இயற்கையான, கைகளால் செய்யப்பட்ட, கிராமிய மற்றும் தற்கால கைவினைப்பொருட்கள் இந்த கைவினைக் கண்காட்சியில் இடம்பெறவிருக்கின்றன.

சங்கனேரி அச்சுக்கலை

அச்சிடப்பட்ட வர்ணமயமான கண்களை கொள்ளைகொள்ளும் துணிவகைகள், நம் நாட்டின் கலைத்திறனை உலகெங்கும் பறைசாற்றுகின்றன. பலவித அச்சுக்களை பயன்படுத்தி அச்சிடுவது மிகவும் எளிமையான முறை. இந்த அச்சுக்கள் மரத்தால் செய்யப்பட்டவை. இந்த அச்சுக்களில் அழகான வடிவங்கள் செதுக்கப்பட்டிருக்கும். வட இந்தியாவிலிருந்து தென்னிந்தியாவிற்கு பயணம் செய்யும்போது, இம்மாதிரி பலவகையான அச்சிடப்பட்ட சங்கனேரி, பக்ரு, லெபாக்சி, அஜரக் மற்றும் கலம்காரி துணிவகைகளை காணமுடியும். இயற்கையாக தயாரிக்கப்பட்ட வர்ணங்களில் அச்சிடப்படுவதால் இந்த துணிவகைகள் நல்ல நறுமணத்துடன் இருக்கும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இவற்றுள் சங்கனேரி துணிவகைகள் மிகவும் பிரபலமானவை. இந்த துணிகளில் பெரும்பாலும் மலர்களும் செடிவகைகளுமே அச்சிடப்பட்டிருக்கும். சங்கனேரி துணிகள் தயாரிப்பவர்களை உள்ளூரில் சிப்பாஸ் என்று அழைப்பார்கள். தேவையான அச்சுக்களை சிசாம், குர்ஜான், மா, தேக்கு மற்றும் அர்து மரங்களிலிருந்து தயாரிக்கிறார்கள். தாமிரம் மற்றும் பித்தளை கம்பிகளை வளைத்து தேவையான நுட்பமான வடிவங்களை செய்து பயன்படுத்துகிறார்கள். பின்னர் இந்த அச்சுக்களை காய்கறிகளால் தயாரிக்கப்பட்ட வர்ணங்களின் மூலம் துணிகளில் கவனமாக அச்சிடுகிறார்கள்.

இத்துணிகளின் தரம், அச்சுக்களை தயாரிப்பது அதனை பயன்படுத்துவது மற்றும் வர்ணங்களை உபயோகிக்கும் முறை, ஒவ்வொரு அச்சுக்கும் இடையேயான தேவையான, சரியான இடைவெளி ஆகியவற்றை கருத்தில் கொண்டு அதன் தயாரிப்பாளர்களின் கைகளிலேயே இருக்கிறது.

இந்த சங்கனேரி அச்சுக்கலையில் கடந்த 35 வருடங்களாக ஈடுபட்டு வரும் ராஜஸ்தான் மாநிலத்தின் திரு.நவால் கிஷோர் பட்டேல் அவர்களின் வெளிப்பாடுகள் இந்த கைவினைக் கண்காட்சியில் இடம்பெறவிருக்கின்றன. மேலும் இந்தக் கலையைக் கற்க விரும்புவோருக்கும் ஒரு வாய்ப்பு ஏற்படுத்தப்படவுள்ளது. பிப் 20, 21, 22 மற்றும் 24, 25, 26 ஆகிய தேதிகளில் மாலை 3 - 5 மணி வரை இந்தக் கலை கற்றுத்தரப்படும்.


தும்பா கலைவண்ணம்

இயற்கை எப்போதுமே அழகானதுதான், இருந்தாலும் மனிதானாலும் எதையும் அழகாக செய்யமுடியும் என்பதற்கு இந்த "தும்பா" என்று அழைக்கப்படும் கைவினைப்பொருட்களே உதாரணமாக இருக்கிறது. இது சுரைக்காயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது இந்தியாவின் சட்டிஸ்கர் மாநிலத்தில் வாழும் பழங்குடியினரின் கைவினைப்பொருளாகும். ஆரம்பத்தில் மக்கள் இதனைத் தண்ணீர் பருகுவதற்கும், சல்ஃபி என்ற உள்ளூர் மதுவை ஊற்றிவைப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர். காலம் செல்லச்செல்ல மக்கள் இந்த குவளைகளை அலங்கரிக்கத் துவங்கினர். இதனால் இந்த தும்பா கைவினைப்பொருள் பிரபலமடைந்தது. ஹிந்தி மொழியில் இந்த சுரைக்காய் 'லௌகி' என அழைக்கப்படுகிறது.

உள்ளிருக்கும் பகுதிகளை நீக்கியபின் இந்த சுரைக்காய் முதலில் சூரிய ஒளியில் ஆறு மாதங்களுக்கு காயவைக்கப்படுகிறது. இதனால் அவை பழுப்பு நிறமாக மாறும். தேவையான அளவு காயவைக்கப்பட்டவுடன், அவை ஈரமான மண்ணில் கழுவப்படுகின்றன. பின் மீண்டும் சூரிய ஒளியில் காயவைக்கப்பட்டு தண்ணீடில் மூழ்க வைக்கும் செயல் முறைக்குப் பின், இந்த காயின் பின்பகுதி சுடப்பட்ட கத்தியால் வெட்டியெடுக்கப்படுகிறது, மேலும் உட்புறம் சுத்தப்படுத்தப்படுகிறது. காயின் மேற்புறம் பென்சிலின் மூலம் தேவையான வடிவங்களை வரைந்து சுடப்பட்ட கத்தியால் செதுக்கப்படுகிறது. பின்னர், தீயில் சுடப்படுதல், மெழுகு எண்ணெய் கொண்டு பாலீஷ் செய்தல் போன்ற பல்வேறு செயல்முறைக்கு உட்படுத்தப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் தும்பா கைவினைப்பொருள்களில் உணவுப் பாத்திரங்கள், மூடிகள், விளக்கு நிழற்குடைகள், வீட்டு அழகுப்பொருட்கள் ஆகியவையும் அடங்கும்.

கைவினைப்பொருட்கள் கண்காட்சி

2014, பிப்ரவரி 19 முதல் 27ம் தேதி வரை, காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை.

ஈஷா யோகா மையம், வெள்ளியங்கிரி மலைச்சாரல்

மேலும் தொடர்புக்கு: 94437 09905

http://mahashivarathri.org/hands-of-grace/