சம்யமாவின் மடியில்

இந்த வாரம் நடந்த சம்யமா நிகழ்ச்சி, மிகவும் தனித்தன்மை வாய்ந்ததாக இருந்தது. இதில் கலந்து கொண்ட பெரும்பாலான மக்கள், தங்களின் கட்டுப்பாடுகளை உடைக்க தீவிர முயற்சி செய்ததைப் பார்ப்பதற்கு மிகவும் திருப்தியாகவும் சிறப்பாகவும் இருந்தது.

போதிய அளவு சாதனா இல்லையென்றால், சம்யமா ஒருவருக்கு உடலளவில் மிகவும் கடினமானதாக இருக்கும். ஒருமுகமான நோக்கத்துடனும், ஆர்வத்துடனும் ஆதியோகி ஆலயம் முழுக்க நிரம்பியிருந்த சாதகர்களில் பலர் உண்மையிலேயே மேன்மையான நிலையை அடைந்திருந்தனர்.

ஏற்கனவே சம்யமாவில் பங்கேற்றவர்கள் மீண்டும் மீண்டும் பலமுறை சம்யமாவில் பங்கேற்கும் நடைமுறை வழக்கத்தில் இருந்து வந்தது. ஆனால் இந்த முறை அப்படி யாரையும் மீண்டும் பங்கு பெற அனுமதிக்கவில்லை. பங்கேற்றவர்கள் அனைவரும் முதன்முறையாக பங்கேற்றனர். சம்யமா நிகழ்ச்சியில் தன்னார்வத் தொண்டர்களின் செயல் எல்லோரையும் தொடும்படி உன்னதமாக இருந்தது.

சம்யமாவின் நெகிழ்வான நிறைவையடுத்து, மாலையில் உணர்ச்சிமிக்க யக்ஷா நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது. பிரகாசமான இசை நிகழ்ச்சியும், நடன நிகழ்ச்சியும் இந்த வாரம் முழுக்க நடக்கவிருக்கிறது. யக்ஷாவுடன் ‘இன்னர் வே’ நிகழ்ச்சியும் நடக்கவுள்ளது.

ஒடிசி நடனக் கலைஞரான திருமதி. மாதவி முத்கலின் நேர்த்தியான நடனம் இன்று மாலை நடைபெற்றது. பல்வேறு கருப்பொருட்களை கொண்ட பாரம்பரிய நடனத்தை மிக அழகாகவும், நெகிழ்வாகவும் அவர் வெளிப்படுத்தினார். இந்த நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்தப்படும் எண்ணங்களும் உணர்ச்சிகளும் உண்மையிலேயே மனதைத் தொடும் விதமாக உள்ளது.

“ஹிந்துஸ்தான்” என்று நாம் குறிப்பிடும் இந்த கலாச்சாரத்தின் அழகே எண்ணங்களை அப்படியே உணர்ச்சிகளாக வெளிப்படுத்தி வருவதுதான். எண்ணங்களை உணர்ச்சிகளாக வெளிப்படுத்த இந்தக் கலாச்சாரம் எப்போதுமே தயங்கியதில்லை. பொதுவாக நவீன சமுதாயம், எண்ணங்களை பண்படுத்துவதற்கு மட்டும்தான் முனைகின்றது. ஆனால் அது ஒருவரை சுவாரஸ்யமில்லாமல் வறட்சியாக்கிவிடும்.

எண்ணத்தை பண்படுத்துவதைப்போல் உணர்வையும் பண்படுத்துவது மிக முக்கியம். யோகா என்பது, எண்ணத்தையும் உணர்வையும் மட்டும் பண்படுத்துவதோடு அல்லாமல், மனிதனை அந்த தெய்வீக நிலையை அடையச் செய்ய, இந்த உடலையும், சக்தியையும் ஒன்றிணைக்கும் ஒரு வழிமுறை. இந்த வாய்ப்பை வழங்கத்தான் ஈஷா கடுமையான முயற்சி செய்து வருகிறது. இந்த வாய்ப்பு எல்லோருக்கும் சாத்தியம் என்பதைத்தான் நான் உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன்.

நள்ளிரவு வந்துவிட்டது, இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியுள்ளது, ஆனால் மேன்ச்செஸ்டர் யுனைடெட் மற்றும் ரியல் மேட்ரிட் அணிகளுக்கிடையேயான கால்பந்து போட்டி இன்னும் சில நிமிடங்களில் தொடங்கவுள்ளது. அந்த போட்டியை கண்டுகளிக்க இருக்கிறேன். கால்பந்தின் இரு வேறு பாணிகளுக்கான மோதலாக இது இருக்கும்.

இதுதான் இப்போதைய இலக்கு.

அன்பும் அருளும்,

Sadhguruஇதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert