Question: சக்திநிலையை உணர்வதற்கே கோவில்கள் என்று சொல்கிறீர்கள். ஆனால், காவல் தெய்வங்களான கருப்பசாமி, முண்டசாமி மற்றும் சில காளி கோவில்களில் கூட ஆடு, கோழி, பன்றி போன்ற உயிர்கள் பலியிடப்படுகிறதே, இது முறையில்லாத வழக்கமல்லவா? இராமகிருஷ்ண பரமஹம்சர் கூட உயிர் பலிக்கு உடன்பட்டார் என்று கேள்விப்பட்டுள்ளேன்...

சத்குரு:

கசாப்பு கடையில் மட்டும் ஏன்?

அனைவரும் மாமிசம் சாப்பிடுவதை விட்டு விட்டால், அப்போது நாம் மிருகங்களை வெட்டுவதை நிறுத்திவிட்டு, கோவிலிலும் தேங்காய் உடைத்துக் கொள்ளலாம்.

கசாப்பு கடைகளில் வெட்டுவதை நிறுத்தினால் அதன்பின் கோவிலில் வெட்டுவதையும் நிறுத்திக்கொள்ளலாம்.

அப்படியே ஒரு உயிரை நீங்கள் கோவிலில் பலியிட்டாலும் கடவுள் வந்து அதனை சாப்பிடவில்லையே, நீங்கள்தானே சாப்பிடுகிறீர்கள். கசாப்புக் கடைகளில் வெட்டுவதற்குப் பதிலாக கோவிலில் வெட்டி சாப்பிடுவதில் என்ன பிரச்சனை? கோவிலில் மிருகங்களைப் பலியிடக் கூடாது; பிராணிகளை இம்சை செய்கிறார்கள் என இப்போது பரவலாகப் புதுத் தத்துவங்களை பேசத் துவங்கிவிட்டார்கள். ஆனால் மாமிசம் சாப்பிடுபவர்கள் நிறுத்திவிட்டார்களா என்ன?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கடவுளுக்கு உயிரைக் கொடுத்துவிட்டு நாம் மாமிசத்தை சாப்பிடுகிறோம் என்ற ஒரு பக்தி உணர்வாவது இதில் இருக்கிறது. கசாப்புக் கடையில் வெட்டி சாப்பிடுவதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? இன்னொரு உயிரை துன்புறுத்தக்கூடாது என்ற உணர்வில் உலகத்தில் அனைவரும் மாமிசம் சாப்பிடுவதையே விட்டுவிட்டால், அப்போது விஷயமே வேறு. கசாப்பு கடைகளில் வெட்டுவதை நிறுத்தினால் அதன்பின் கோவிலில் வெட்டுவதையும் நிறுத்திக்கொள்ளலாம்.

வெளிநாட்டு மனநிலை

இதுபோன்ற மனநிலை வெளிநாட்டில் இருந்து நீங்கள் கற்றது. நம் நாட்டில் பின்பற்றி வரும் அத்தனைக் கலாச்சார அம்சங்களையும் தகர்த்தெறிந்துவிட்டு, வெளிநாட்டினரைப் போன்று நடந்துகொண்டால்தான் முன்னேற்றம் என நாம் நினைத்துக் கொள்கிறோம். 300 வருடம் நம்மை ஆண்டுவிட்டுச் சென்றவர்கள், நமது மூளையில் ஊசியைச் செலுத்துவதைப் போல, இந்த மனப்பான்மையை ஆழமாக விதைத்துச் சென்றுவிட்டார்கள். அதனால்தான் பார்ப்பதற்குக்கூட இங்கிலீஷ் ஆட்கள்போல் உடை உடுத்தி, தோற்றம் அளிக்கிறீர்கள்.

தமிழ்நாட்டில் பிறந்தாலும், மீசையை மழித்துக் கொள்கிறீர்கள், முடியை வெட்டிக் கொள்கிறீர்கள். கொஞ்ச காலத்திற்கு முன்பு திருநெல்வேலி, மதுரை போன்ற தென் தமிழகத்தில் பெரிய மீசை இல்லாத ஆட்களை எங்காவது பார்க்க முடியுமா? ஆனால் வெளிநாட்டவர்களின் தாக்கம் நம்மேல் அதிகமானதால், மீசையை மழித்து, தாடியை எடுத்து, அவர்களைப் போலவே உடை அணிந்து கொள்ள விருப்பம் வந்துவிட்டது.
நீண்ட முடியுடன், மீசையுடன் இருந்தால் நாகரீகமில்லை, ஷேவ் செய்து முடியை வெட்டிக் கொண்டால்தான் நாகரீகம் என்று அவர்கள் நமக்குச் சொல்லிக் கொடுத்தபடியே மாறிவிட்டீர்கள். இப்போது நம் தோலைக்கூட வெள்ளையாக மாற்றுவதற்கு வெளிநாட்டு கிரீம்களின் மூலம் முயற்சி செய்து வருகிறோம். நமது தோல் வெள்ளையாக இருந்தால்தான் நாகரீகம் என்று எண்ணுகிறோம். நமது மனநிலை மேற்கத்திய நாகரீகத்திற்கு அடிமையாகி இருப்பதே இதற்கு முழுமுதற் காரணம்.

காளி போன்று உருவாக்கப்பட்ட தெய்வங்கள், தினசரி அர்ப்பணங்கள் நிகழாவிட்டால், திருப்தி கொள்வதில்லை.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாவது அனைத்தும் உயர்ந்தது என்று நாம் எண்ணிக் கொள்கிறோம். வெளிநாட்டில் தயாராகும் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை வேண்டுமானால் நாம் இங்கே இறக்குமதி செய்துகொள்ளலாம். அவர்கள் அவற்றில் தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் நம் கைகளில் வேறுவிதமான தொழில்நுட்பம் உள்ளது.

உயிரைப் பற்றிய தொழில்நுட்பத்தில் நாம் மிகவும் கைத்தேர்ந்தவர்கள். உயிர் பற்றி நாம் புரிந்துகொண்டதைப்போல அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. கோவிலில் ஆடு வெட்டக்கூடாது என்று கூறுவதும் மேற்கத்திய மனநிலையின் தாக்கமே. இதன் பின்னுள்ள ஆழமான விஞ்ஞானம் மறக்கப்பட்டு இன்று வெறும் நம்பிக்கையாக நாம் இதனை குறைத்துவிட்டதே இந்த மேம்போக்கான அணுகுமுறைக்கு காரணம்.

இராகிருஷ்ணருக்கு வருவோம்...

இராமகிருஷ்ணர் உயிர்பலியை தடை செய்தாரா இல்லையா என்று தெரியாது. ஆனால் காளிக்கு அது பிடித்திருந்தது. காளிக்கு பிடித்திருந்தால் அவர் அதைத் தடை செய்வாரா என்ன?

காளி போன்று உருவாக்கப்பட்ட தெய்வங்கள், தினசரி அர்ப்பணங்கள் நிகழாவிட்டால், திருப்தி கொள்வதில்லை. இதன் பின்னணியில் ஒரு முழு விஞ்ஞானமே இருக்கிறது. இதனை உங்களுக்கு விளக்கிக் கூற வார்த்தைகள் கூட போதாது..

நம்மை மீறிய ஒரு மகத்தான சக்தியை உருவாக்குவதே அளப்பரிய விஞ்ஞானம். அதனை நீங்கள் காளி என்று அழைக்கிறீர்கள். இதைப்போன்று பல சக்தி ரூபங்கள் உள்ளன. பலியிடுதல் என்ற முறை உருவானதே இதுபோன்ற ரூபங்களுக்காகத்தான். ஆடு, கோழி பலியிடுவது மட்டுமல்ல தேங்காய் உடைப்பதும் பலிதான். எதையாவது ஒன்றை உடைக்கும்போதோ அல்லது வெட்டும்போதோ வெளிப்படும் சக்தியை பயன்படுத்திக் கொள்ளும் விஞ்ஞானத்தையும் திறனையும் இங்கே அறிந்திருந்தனர்.

நீங்கள் சற்றே சூட்சுமமானவராய் இருந்தால் இதனை உணர முடியும். ஒரு ருத்ராட்ச மாலையை ஒரு தேங்காயின் மேல் பிடியுங்கள். அது கடிகார முள்போல் வலப்புறமாக சுழல்வதைப் பார்க்க முடியும். அதே தேங்காயை உடைக்கும்போது பாருங்கள், அந்த ருத்ராட்சத்தின் ஓட்டம் முற்றிலும் வேறுவிதத்தில் இருப்பதை நீங்கள் கவனிக்க முடியும். அதனால் கோவிலில் தேங்காய் உடைப்பது, அதிலுள்ள சக்தியை வெளிப்படுத்தி அதனை பயன்படுத்தத்தான்.

அதைப் போலவே கோழி, ஆடு போன்றவைகளை உடைப்பதும் (வெட்டுவதைக் குறித்து சொல்கிறார்) இதற்காகத்தான். நான் பலிகளை ஆதரித்துப் பேசவில்லை. ஆனால் அதன் பின்னால் புதைந்துள்ள விஞ்ஞானத்தை உங்களுக்கு விளக்குகிறேன். இதுபோன்ற பலிகளை செய்யும்போது முழு உயிர்ப்புடன் உள்ள உயிர்களை மட்டுமே பயன்படுத்துவார்கள். யாரும் வயதான ஆட்டையோ அல்லது கோழியையோ பலியிடப் பயன்படுத்துவதில்லை. முழு உயிர்ப்புடன், வாலிபத்தில் இருக்கும் உயிர்களை மட்டுமே பயன்படுத்தினார்கள். ஆனால் இன்றோ “நீ இதை பலி கொடுத்தால் உனக்கு இந்தப் பலன் கிடைக்கும்,” என்று இந்த அர்ப்பணங்களை அற்பமான செயலாக்கி விட்டார்கள். பலியிடும் செயலை அறிந்து செய்தவர்கள், பலன்களுக்காக பலியிடவில்லை. ஒரு இடத்தில் உருவாக்கப்பட்டுள்ள சக்தி ரூபத்திற்கு ரீ-சார்ஜ் செய்யத் தேவையிருப்பதால், இந்த பலியிடுதல் என்னும் சடங்கைச் செய்தார்கள்.

சத்குருவின் கைத்தட்டல்...

எந்தவொரு சடங்கும் இல்லாமல் ஒரு இடத்தை சக்தியூட்டக் கூடிய ஒரு மனிதர் இருந்தால், நாம் உயிர்பலி செய்யத் தேவையில்லை. நான் நடத்தும் உயர்நிலை வகுப்புகளிலும், நாம் பிரதிஷ்டை செய்யும் இடங்களுக்கும் வந்து பாருங்கள். வெறும் ஒரு கைத்தட்டல் மூலமே பலபேர் உயர்ந்த சக்திநிலைக்கு செல்வதைக் கண்கூடாகக் காண முடியும். நாம் செய்யும் பிரதிஷ்டைகளில், தீட்சைகளில் உயிர்பலி இல்லை; ஆனால் என்னுடைய கைத்தட்டலும் ஒரு பலியே. என் உயிர் சக்தியிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவிலான சக்தி, வெளி தள்ளப்படுகிறது. இதுபோன்ற திறனுள்ள மனிதர்கள் இருந்தால் காளி போன்ற தெய்வங்களை உயிர்பலி இல்லாமலேயே பராமரிக்கலாம்.

ஒரு ஞானோதயமடைந்த மனிதர் வந்து கோவிலை பராமரிப்பார், பாதுகாப்பார் என்று நாம் எதிர்ப்பார்ப்பது சரியல்ல. யாராய் இருந்தாலும் அந்தக் கோவிலை பராமரிக்கலாம் என்ற புரிதலினால் இதுபோன்ற முறைகளை உருவாக்கி வைத்துச் சென்றார்கள். மாதத்திற்கு ஒருமுறையோ, வாரத்திற்கு ஒருமுறையோ அல்லது தினசரி ஒருமுறையோ அந்தக் கோவில் உருவாக்கப்பட்ட விதத்தைப் பொருத்து பலியிடுதலை ஒரு சடங்குடன் இணைத்து உருவாக்கி வைத்தார்கள்.

ஜெய்பூர் காளி கோவிலில், தினசரி காலை ஒரு பலி நடக்கிறது. தினசரி காலை விடிவதே அங்கு ஒரு பலியோடுதான் நிகழ்கிறது. அது இல்லாமல் அவள் இறந்துவிடுவாள்.