நமது கலாச்சாரத்தில், நாம் கடைப்பிடித்து வரும் ஒவ்வொரு ஆன்மீக செயல்களுக்கும் காரணம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், ஏன் எதற்கு என்று கேள்வி கேட்டு, முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் செய்யப்பட்டு வரும் இவை, இன்று வெறும் சடங்குகளாக மாறியுள்ளன. இங்கே ஒருவரின் கேள்விப் பட்டியல் கவிதையாக...

'சாமீ...! காப்பாத்து...'
எனச் சொல்லியபடி,
கைகூப்பக் கற்றுத்தந்த அப்பத்தா,
சாமியை மட்டும் காட்டாமல் விட்டுவிட்டாள்.

திருநீற்றின் வரலாறு கேட்டபோதுதான்
அறிந்துகொண்டேன், அதைக் கேட்டுவிட்டு
யாரும் பூசுவதில்லையென்று.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அக்கினிச் சட்டியேந்தி
ஆடி வந்த ஆத்தாவிடம்
'சுடவில்லையா' என்றபோது,
கன்னத்தில் போட்டுக் கொண்டு
பார்வையால் சுட்டுச் சென்றாள்.

சமஸ்கிருதத்தை வதம் செய்து,
புரியாத மொழியாக்கி,
முணுமுணுக்கும் பூசாரியிடம்,
மாமா பெயருடன் என் பெயரையும் சேர்த்துச் சொல்லும்
அக்காளிடம் கேட்டாலோ
சிரித்து மழுப்பி விடுகிறாள்...

பதில் இல்லா மனிதர்கள் சிலர்
'நாத்திகன்' எனக் கூறிச் செல்வர்.
புரிகிறது அவர்கள் தத்துவம்...
'சாமியைக் கும்பிடுபவன் ஆத்திகன்.
அறிய நினைப்பவன் நாத்திகன்.'

பதில் இல்லா மனிதர்களிடமிருந்து
சாமீ...! காப்பாத்து...

கவிதை: ராஜா கண்ணன்

scowl brocolli @ flickr