சாமர்த்தியமான பிள்ளை… தாயின் கல்வி பொறுத்து

samarthiyamana-pillai-thayin-kalvi-poruthu

பெண்கள்… அன்றும், இன்றும், என்றும்! – பகுதி 7

கேள்வி
சத்குரு, திருமணத்திற்குப் பிறகு பெண்களின் கல்வி தடை செய்யப்படுகின்றது. திருமணத்திற்காக நாங்கள் கல்வியை தியாகம் செய்தே ஆக வேண்டுமா? தடை செய்யும் சக்தியே ஒரு பெண்ணாக இருக்கும் பொழுது, இந்த சமுதாயத்தில் கல்வி ஆர்வம் கொண்ட பெண்ணின் நிலை என்ன?

சத்குரு:

என்ன பெண்கள் இப்படி கேள்வி கேட்கத் துவங்கி விட்டார்கள்? எதை வேண்டுமானாலும் தடுக்கலாம். ஆனால் கேள்வியைத் தடுக்க முடியாது(சிரிக்கிறார்)

மிகவும் முக்கியமான அந்த இளம் வயதில், குழந்தையின் மனநிலை உருவாக்கப்படும் அந்தக் கட்டத்தில், குழந்தைக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் ஒரே நட்பு தாய்தான்.
திருமணம் செய்துகொள்வது, அதைத் தொடர்ந்து குடும்பம் அமைப்பது, இவற்றை சற்றே ஆழமாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். திருமணம் செய்து கொள்வதும், குழந்தைகள் பெறுவதும் நீங்கள் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயமல்ல. இது ஒட்டுமொத்த சமூகம், தேசம், உலகம் சார்ந்த விஷயம். ஏனென்றால் நீங்கள் பெறும் குழந்தைதானே அடுத்த தலைமுறை? ஒரு படிப்பறிவற்ற, எழுதப் படிக்கத் தெரியாத தாய், குழந்தையை தான் அறிந்தவரைக்கும் தானே வளர்ப்பார்கள்? ஒரு சமூகமோ அல்லது தேசமோ முன்னோக்கிச் செல்ல வேண்டுமென்றால் பெண்கல்வி அவசியம். நம் நாட்டில் சிறிதும் கவனம் கொடுக்காத ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் பெண்கல்வியை முன்னெடுத்துச் செல்லாததுதான். ஒரு தாய் எந்த அளவுக்குத் திறமையாக இருக்கிறார்களோ அந்த அளவுக்கு குழந்தையின் ஆரம்ப கால வளர்ச்சி அமையும். மிகவும் முக்கியமான அந்த இளம் வயதில், குழந்தையின் மனநிலை உருவாக்கப்படும் அந்தக் கட்டத்தில், குழந்தைக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் ஒரே நட்பு தாய்தான். தாய்க்குத்தான் அந்த வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. தந்தையின் இடத்தில் இருப்பவர் தொழில் மற்றும் பணி காரணமாக வெளியே செல்ல வேண்டியுள்ளது. தந்தை படித்திருக்காவிட்டால் கூட தாய் நன்றாகப் படித்திருக்க வேண்டும். ஏனென்றால் இது இவர்களைப் பற்றியே அல்ல. அடுத்த தலைமுறையின் உருவாக்கம் சார்பான ஒரு விஷயம்.

ஒரு பெண் படிப்பதற்கென்று வெளியில், வீதியில் இறங்கிவிட்டால் என்ன நேருமோ என்ற அச்சம் காரணமாக இதுவரை அவளுக்கு கல்வி மறுக்கப்பட்டது. நம் நாடு சுதந்திர நாடாகி அறுபது வருடங்கள் கடந்து விட்டன. ஆனால் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு எப்படி உலகம் இருந்ததோ அப்படித்தான் நம் நாட்டின் பல இடங்களில் மக்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். இதற்கு காரணம் பெண்ணுக்கு கல்வியறிவு இல்லாததுதான். ஆரோக்கிய நிலையில் பார்த்தாலும், கல்வித்தரத்தில் பார்த்தாலும், திறமை நிலையில் பார்த்தாலும் நம் நாட்டின் பெரும்பான்மையான ஜனத்தொகையினர் பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறார்கள். பெண் கல்வி இல்லாமல் போனதுதான் இதற்கான முக்கிய காரணம்.

பெண்ணுக்கு கல்வி தராமல் அவள் குழந்தை பெறும் இயந்திரம் என்று நினைத்து விட்டதால்தான் இப்படி ஆகிவிட்டது. இன்றைய நாளில் இந்தியாவின் ஜனத்தொகை நூறு கோடிக்கும் அதிகமாக இருக்கிறது. இதில் எவ்வளவு பேரால் உலகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும் ஒரு தொழில் செய்தோ, வேலை பார்த்தோ வாழ முடியும் என்று நினைக்கிறீர்கள்? சுமாராக ஒரு பத்து சதவீகிதம் இருக்கலாம். மற்றவர்கள் அனைவரும் அவரவரின் ஊரை விட்டு வெளியே போனால் சமாளிக்கத் திறமையற்றவர்களாக இருக்கிறார்கள். தாய்க்கு கல்வியறிவு இல்லாத ஒரு சூழ்நிலையில் வளர்ந்தது இதற்கான முக்கிய காரணமாக உள்ளது. ஆகையால் திருமணத்திற்காக பெண்ணின் கல்வி தடை படக்கூடாது. அவளின் திறமைக்கேற்ற கல்வியைக் கட்டாயம் கொடுக்க வேண்டும். ஆணோ, பெண்ணோ யாரும் தடுக்கக்கூடாது. தடுப்பதற்கு எந்தப் பெண்ணும் வாய்ப்பளிக்கக் கூடாது. உலகத்தில் ஏதோ ஒரு நல்ல மாற்றம் நிகழ வேண்டுமென்றால் வேகம் இல்லாமல் நடக்காது. அத்தகைய வேகத்தைப் பெண்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

காலத்தின் தேவை இது. உலக நாடுகள் முன்னேறியவாறு இருக்கும் நிலையில் நாம் மட்டும் ஆயிரம் வருடப் பழமையில் இருந்தால் முன்னேற்றம் வரவே வராது. நாமும் முன்னேற வேண்டுமென்றால் நம்முடைய வீட்டின் பெண்களும் நல்ல கல்வி பயின்றால்தான் எதிர்காலக் குழந்தைகளுக்கு நல்ல வாய்ப்பிருக்கும்.

பெண்கள்… அன்றும், இன்றும், என்றும்! தொடரின் பிற பதிவுகள்
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert