சென்ற பௌர்ணமி தினத்தில் சேலத்தில் லிங்கபைரவி பிறந்தாள். பிரதிஷ்டையைக் காண கிட்டத்தட்ட 4000 பக்தர்கள் கூடியிருந்தனர். பிறப்பு முதல் இறப்பு வரையில் மட்டுமல்லாமல், முக்தி வரை தேவியின் கைகோர்த்துச் செல்ல, வரும் தலைமுறைகளுக்கு கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பினை இந்தவார சத்குரு ஸ்பாட்டில் விளக்கியுள்ளார் சத்குரு.

பிழைப்பு, குடும்பம், தொழில் என்று எல்லாவற்றிற்கும் தேவியை ஒருவர் பயன்படுத்திக்கொள்ள முடியும். அனைத்துக்கும் மேலாக பக்தியுடன் நமக்குள் நாம் ஒரு இனிமையான நிலையை உருவாக்கிடமுடியும். நாம் நம்மை மிகவும் இனிமையான நிலையில் வைத்துக்கொள்வது மிகமுக்கியமானது. இதற்கு தேவி ஓர் அற்புதமான கருவி, வெறுமனே அவள் பெயரை உச்சரித்தாலே போதும், பக்தி பெருக்கெடுக்கும். நம்மை முக்திவரை கூட்டிச்செல்லும் சாத்தியம் கூட அவளிடம் இருக்கிறது.

ஒரு தீவிரமான சக்திவடிவத்தின்மீது நீங்கள் ஆழமாக காதல்வயப்பட்டிருக்கும்போது, உங்கள் வாழ்க்கையில் ஒருவிதமான இனிமை இருக்கிறது. உங்களுக்கு என்ன நடந்தாலும் சரி, இந்த பக்தி உங்களுக்குள் சலனமற்ற ஓர் இனிமையை உருவாக்கும். ஒரு சாதாரண பாடபுத்தகத்தில் உங்கள் மனதை ஒருசில நிமிடங்கள் அசைவின்றி வைக்க முயன்றால், உங்கள் மனது வேறு எங்கெங்கோ போகும். ஆனால் அடுத்தவீட்டில் இருப்பவர் மீது காதலில் விழுந்தால், உங்கள் மனம் எப்போதும் முயற்சியின்றி அவர்மேல் இருக்கும். பக்தி இதைப் போன்றதுதான், ஒரு தீவிரமான சக்திவடிவத்தின் மேல் முயற்சியின்றி நீங்கள் ஆழமாக காதலில் விழுந்துவிட்டீர்கள். இப்போது இவர் மனிதராக வாழமாட்டார், தெய்வீகமாக வாழ்வார்.

அவள் பிறந்துவிட்டாள். அவளை நன்றாக வைத்துக்கொண்டால், அவள் உங்களையும் என்னையும் கடந்து வாழ்வாள். 1000 வருடங்களுக்கு மேலும் அவள் இருப்பாள். இது நமக்கு மட்டுமல்ல, வரும் தலைமுறைகளுக்கும் இது மாபெரும் வரமாக இருக்கும்.

Love & Grace

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.