ஈஷாவின் பல்வேறு சமூகநல செயல்பாடுகளுக்கு உறுதுணை புரிந்து வரும், ஈஷாவைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, இன்று ஈஷா சார்பாக ஒரு மாநாடு சிறப்பாக நடந்தது. இந்தியக் குடியரசு தினமான இன்று, இந்நிகழ்ச்சியில், பிரபல எழுத்தாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் சத்குருவுடன் கலந்துரையாடிய உரையின் தொகுப்பும் இங்கே உங்களுக்காக!

ஈஷா கிராமநல மேம்பாட்டுத் திட்டத்தின் மாநாட்டிற்காக, சத்குரு அவர்கள் ஈஷாவைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு சிறப்பு அழைப்பு விடுத்திருந்தார். சத்குருவின் கனிவான வரவேற்பை ஏற்று, பெரும் திரளாக வந்திருந்த கிராம மக்களும் விவசாயப் பெருமக்களும், கிராமத் தலைவர்களும் இன்று சுமார் 9.30 மணியளவில் ஈஷா மையத்தில் ஒன்று கூடினர். மடக்காடு, தாணிக்கண்டி, பட்டியார் கோயில்பதி, செம்மேடு, இருட்டுப்பள்ளம், முள்ளாங்காடு, முத்திபாளையம், முட்டத்து வயல், நரசிபுரம், தொண்டாமுத்தூர், நாதேகவுண்டன்புதூர், தேவராயபுரம், காளம்பாளையம், மத்வராயபுரம், சென்னனூர் என 40 கிராமங்களிலிருந்து வந்திருந்த சுமார் 500 பேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

வந்திருந்த அனைவருக்கும் ஈஷா மையத்திலுள்ள சூரியகுண்டத்தின் முன்பு தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் ஆசிரமவாசிகளால் சிறப்பு வரவேற்பு செய்யப்பட்டது.
2
1

சுமார் 10.30 மணியளவில் கிராம மக்கள் அனைவருக்காகவும் லிங்கபைரவியில் சிறப்பு ஆரத்தி நிகழ்த்தப்பட்டது. 11 மணியளவில் ஆதியோகி ஆலயத்தில் சத்குருவின் சத்சங்க நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தியக் குடியரசு தினமாக அமைந்த இன்று, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எழுத்தாளர் திரு. பட்டுக்கோட்டை பிரபாபகர் அவர்கள், நாட்டு நலன் குறித்தும் சமூக நலன் குறித்தும் சத்குருவிடம் தனது சந்தேகங்களையும் கேள்விகளையும் முன் வைக்க, நிகழ்ச்சி சுவாரஸ்யமான கலந்துரையாடலாக அமைந்தது.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, இந்த அளவிற்கு ஈஷா தனது தன்னார்வத் தொண்டுகளை சிறப்பாக ஆற்ற உறுதுணையாக இருந்த அண்டை கிராம மக்களுக்கு நன்றி தெரிவித்த சத்குரு, ஆசிவழங்கி பிரசாதமும் வழங்கினார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மேலும், நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாய் அமைந்த ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களின் கர்நாடக இசைக் கச்சேரியும் களரிப்பயட்டு விளையாட்டுகளும் அனைவரையும் ரசிக்க வைத்ததுடன் பிரம்மிக்கவும் வைத்தது.
inside-post---3

சத்குருவுடன் பட்டுக்கோட்டை பிரபாகர் கலந்துரையாடியதிலிருந்து...

மரங்களின் வெளிமூச்சு மனிதனின் உள்மூச்சு!

"நீங்கள் த்ரில்லர் கதை எழுதுகிறீர்கள். ஆனால் என்னால் த்ரில்லாக வாழத்தான் முடியும். என்னால் எழுத முடியாது" எனக் கூறி ஆரம்பம் முதலே நகைச்சுவைத் ததும்பும் தன் பதில்களின் மூலம் வெடிச் சிரிப்புகளை வரவழைத்த சத்குரு, பட்டுக்கோட்டை பிரபாகர் கேட்ட கேள்விகளுக்கு தனது ஆழமான விளக்கங்களை அளித்தார்.
4
3

ஈஷா யோகா மையத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து யோகா போன்ற ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதால் அதன் நேர்மறை அதிர்வுகளை மற்ற இடங்களிலும் உணர முடியுமா என்ற கேள்வியை திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் கேட்டபோது,

"மனிதன் எப்போதும் தனித்து இல்லை. மனிதன் மனதில் வேண்டுமென்றால் அப்படி நினைத்துக் கொள்ளலாம். ஆனால், தனி-மனிதன் என்று சொல்வதில் உண்மையில்லை. மரங்களின் வெளிமூச்சுதான் மனிதனின் உள்மூச்சு. எனவே மனிதன் எப்படி தனித்து செயல்பட முடியும்" என்று தனது விளக்கத்தை அளித்த சத்குரு, ஈஷாவில் மக்களால் உணரப்படுவது, உலகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் உணரப்பட வேண்டும் எனத் தனது ஆவலைத் தெரிவித்தார்.

"மொட்டை மாடியிலிருந்து நான் வானத்தைப் பார்க்கும்போது, இந்தப் பரந்த பிரபஞ்சத்தைப் பற்றி பலவித கேள்விகள் எழுகின்றன; நான் என்றால் என்ன என்ற கேள்வியும் எழுகிறது" என்று திரு.பிரபாகர் கேட்க, தனது பள்ளி நாட்களில் தனக்கு 'நான் என்றால் என்ன' என்ற கேள்வி வந்தபோது, தனக்கு ஏற்பட்ட உள்நிலை மாற்றத்தைப் பகிர்ந்துகொண்ட சத்குரு, கேள்விகள் மட்டுமே உண்மையை அறிய வழிவகுக்கும் என்று கூறினார். ஆனால் சிலர் கேள்விகள் என்றாலே பிரச்சனை என நினைத்துக் கொள்கிறார்கள் எனக் கூறியபோது சிரிப்பலை!

பக்தியும் குற்றமும்

பக்தியின் காரணமாக சில பிரசித்தி பெற்ற கோயில்களில் கூட்டம் அலைமோதும் அதே சமயத்தில், நாட்டில் குற்றங்களும் அதிகரிக்கின்றனவே எனக் கேட்ட பிரபாகரிடம், கூட்டம் அதிகரிப்பது பக்தியினால் அல்ல, மக்கள் தொகைப் பெருக்கத்தினால் என நகைச்சுவை செய்த சத்குரு, பக்தி என்றால் கடவுளிடம் 'நான் உனக்கு 10 ரூபாய் தருகிறேன்; நீ எனக்கு 1000 ரூபாய் கொடு' என்று போடும் ஒப்பந்தம் அல்ல எனக் கூறியதோடு, உண்மையான பக்தி என்ன என்பதை விளக்க பிச்சைக்கார யோகி ஒருவரின் கதையைக் கூறினார்.

பிச்சையெடுத்து வாழும் யோகியை அந்த நாட்டின் அரசியார் பார்த்து, அவருக்கு தங்கத்தினாலான பிச்சைப் பாத்திரத்தை பரிசாக தருகிறார். யோகியின் வீட்டிற்கு வரும் திருடன் ஒருவன், அதை திருட நினைத்து யோகியின் வாசலின் நிற்கும்போது, அந்த யோகி தங்கப் பாத்திரத்தை தூக்கி வெளியில் வீசுகிறார்.

இதைப் பார்த்து வியப்படைந்த அந்த திருடன், 'இந்த பாத்திரத்தை விடவும் விலைமதிப்பான வேறொன்று உங்களிடம் உள்ளது; அது என்ன?' என யோகியிடம் கேட்க, தனது யோக வழிமுறையை அவனுக்கு எடுத்துரைக்கிறார். அதோடு, 'நீ திருடச் சென்றாலும் பக்தியோடு செல்!' எனக் கூறுகிறார். இதனால், திருடச் சென்ற இடங்களிலெல்லாம் பக்தியுணர்வில், மனிதர்களையும் பொருட்களையும் வணங்க ஆரம்பித்த அந்த திருடன், இறுதியில் திருட முடியாமல் யோகியாக மாறிவிட்டான்.

இந்தக் கதையின் மூலம் உண்மையான பக்திக்கு விளக்கமளித்தார் சத்குரு.

எனது வீடு! எனது குடும்பம்!

இப்போதெல்லாம் எனது வீடு எனது குடும்பம் என்று மனிதர்கள் இருக்கிறார்களே, இந்த நிலை சரியா? எனக் கேட்கப்பட்டபோது,

'நான்' என்பது ஒரு எல்லை; பலருக்கும் இந்த எல்லை எனது வீடு என்ற நிலையிலேயே இருக்கிறது. எனது ஜாதி; எனது மதம் என்ற நிலையிலும் சிலருக்கு இருக்கிறது. ஆனால் உண்மையான மனிதனாக வாழ வேண்டும் என்றால், எனது உலகம் என்ற நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். குறைந்தது எனது நாடு என்ற நிலையிலாவது வாழ்ந்தால், அனைவரும் நன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணம் தானாக வரும் என்று சத்குரு கூறிய பதில், குடியரசு தினத்தில் அனைவருக்கும் அற்புத செய்தியாக அமைந்தது.
5
6