சத்குருவுடன் சேகர் கபூர் - பகுதி 1

சமீபத்தில் ஈஷா யோகா மையம் வந்த டைரக்டர் சேகர் கபூர் அவர்கள் சத்குருவுடன் மையத்தைச் சுற்றி நடந்தபடியே உரையாடலில் ஈடுபட்டார். ஆங்காங்கே அவர் கண்ட காட்சிகள் குறித்தும், தனது பல்வேறு சந்தேகங்கள் குறித்தும் கேள்விகள் பல எழுப்பினார். நமஸ்காரம், பிரம்மச்சரியம், லிங்கபைரவி கோவில், நந்தி, ஹோம் ஸ்கூல், பாம்பு, பிரதிஷ்டை, மறுபிறப்பு இப்படி பல விஷயங்கள் குறித்து நடைபெற்ற உரையாடலின் தொகுப்பு ஒவ்வொரு வாரமும் தொடராகப் பதிவு செய்யப்படுகிறது.

ஒருவரைக் கண்டால் நமஸ்காரம் செய்கிறோம். இதன் விஞ்ஞானத்தை உண்மையில் நாம் அறிந்துதான் செய்கிறோமா அல்லது பிறரைப் பார்த்து வந்த பழக்கமா? என்ற கேள்வியையும், நீங்கள் ஏன் மற்ற ஆன்மீகக் குருமார்களைப் போல அற்புதங்கள் நிகழ்த்துவதில்லை என்று சத்குருவை சேகர் கபூர் கேட்க, அதற்கு சத்குருவின் விளக்கம்... உள்ளே!


சேகர் கபூர்: நமஸ்காரம் சத்குரு

சத்குரு: நமஸ்காரம்

சேகர்: சத்குரு, நாம் இருவருமே இப்போது கை குவித்து வணங்கி, நமஸ்காரம் பரிமாறிக் கொண்டோம். இதற்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? அல்லது இது நமது கலாச்சாரத்தில் காரணமே இல்லாமல் உள்ள ஒரு பழக்கமா?

எப்போது ஒன்றை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையோ அப்போது அதை நீங்கள் அற்புதம் என்கிறீர்கள்.

சத்குரு: இதில் பல அம்சங்கள் உள்ளன. உங்கள் உள்ளங்கையில் பல நரம்புகள் வந்து முடிகின்றன. உண்மையில் உங்கள் நாக்கை விடவும், உங்கள் குரலை விடவும் அதிகமாக உங்கள் கை பேசுகிறது. உண்மையாகத்தான் சொல்கிறேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

யோகாவில் முத்திரைகளுக்கு (கை விரல்களை ஒரு குறிப்பிட்ட விதமாக வைத்துக் கொள்வது) என்று  ஒரு பெரிய விஞ்ஞானமே இருக்கிறது. உங்கள் உடல், மனம், உணர்ச்சி ஆகியவற்றில் ஒவ்வொரு முத்திரையும் ஒவ்வொரு விதமாக வேலை செய்கிறது.

சேகர்: ஆமாம், இங்கு யோகப் பயிற்சியின் போது, பல முத்திரைகளை சொல்லிக் கொடுத்தார்கள்.

சத்குரு: அதே போலத்தான் இப்படி கை குவித்து வணங்குவதும் ஒரு முத்திரை. உங்கள் இரு கைகளையும் இப்படி குவித்து ஒன்று சேர்த்து வணங்கும்போது, உங்கள் விருப்பு வெறுப்பு போன்ற இருமைக் குணங்கள் சமமாகிறது. அப்போது உங்கள் சக்திநிலையும் திசை மாறாமல் ஒரே விதமாக செயல்படுகிறது.

சேகர்: சரி, ஒரு குரு என்றால் அற்புதங்கள் நிகழ்த்த வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் நீங்கள் ஏன் அற்புதங்கள் நிகழ்த்துவதில்லை?

சத்குரு: வாழ்க்கையை 2 விதமாகப் பார்க்க முடியும். ஒரு சிறிய அணுவைக்கூட உங்களால் முழுவதுமாக புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே, ஆழமாகப் பார்த்தால், ஒவ்வொன்றுமே அற்புதம்தான். மற்றொரு பார்வையில் எதுவுமே அற்புதம் இல்லை.

உலகில் அனைத்துமே காரணம் காரியத்தின் அடிப்படையில்தான் நடக்கிறது. எனவே உங்கள் புரிதல் ஆழமாக இருக்கும்போது, உங்களுக்கு நடக்கும் ஒவ்வொன்றையும் நீங்கள் விளங்கிக் கொள்ள முடியும். எனவே எப்போது ஒன்றை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையோ அப்போது அதை  நீங்கள் அற்புதம் என்கிறீர்கள்.

சேகர்: ஆமாம்.

சத்குரு: தீர்த்தகுண்டம் போகும்போது அங்கு பாதரசத்தாலான லிங்கத்தை உங்களுக்குக் காட்டுகிறேன். அந்த லிங்கத்தின் உயரம் 2 அடி கூட இல்லை. ஆனால் அதன் எடை 680 கிலோ. நவீன விஞ்ஞானத்தின் படி பாதரசம் திட வடிவத்தில் இருக்க முடியாது. ஆனால் நாம் பாதரசத்தை திட வடிவத்திற்கு மாற்றி பயன்படுத்தி இருக்கிறோம்.

ஏனெனில் அதற்கான செய்முறைகள் நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் அந்த செய்முறை தெரியாததால் விஞ்ஞானிகளுக்கே இது அற்புதம்தான். இதே செல்போன் 1000 வருடங்கள் முன்னால் நான்  வைத்திருந்தால் நான் என்னை ஒரு கடவுளாகக் காட்டிக் கொண்டிருக்க முடியும். (இருவரும் சிரிக்கின்றனர்)

தொடரும்...


அடுத்த வாரம்...

சேகர் கபூர்: பிரம்மச்சரியம் என்றால் ஒவ்வொன்றையும் மறுப்பது என்ற அளவில்தான் நாங்கள் புரிந்து வைத்திருக்கிறோம். எனவே பிரம்மச்சரியம் என்றால் என்ன என்பதை சொல்லுங்கள்...