"சத்குருவின் சத்சங்கங்களில் ஏன் இசை? அவருக்கு இசை ஞானம் உண்டா?" - இப்படிப்பட்ட சந்தேகங்களை போக்கும்படி உள்ளது இந்தக் கட்டுரை. தன்னுடைய சிறு வயதில் தன்னைச் சுற்றி இருந்த இசை, தியானத்தில் ஆழ்ந்த போது தனக்கு மட்டுமே கேட்ட இசை, சவுன்ட்ஸ் ஆப் ஈஷா உருவான கதை... இவைகளைப் பற்றி சத்குரு வாயிலாக இங்கே நாம் தெரிந்துகொள்வோம்.

சத்குரு:

சிறு வயதிலிருந்தே என்னைச் சுற்றிலும் இசை இருந்திருக்கிறது. என் அம்மா மிக நன்றாகப் பாடுவாள். சிசுவாக நான் தொட்டிலில் இருந்த காலத்திலிருந்தே அவள் பாடல்களைக் கேட்டு வந்திருக்கிறேன். சமைக்கும்போது பாடுவாள். பூஜை செய்கையில் பாடுவாள். எங்களுக்கு சாதம் ஊட்டுகையில் பாடுவாள். பாடாத நேரங்களில் நன்றாக வீணை வாசிப்பாள்.

மிக அமைதியான இரவில், மிக நிசப்தமான சூழலில், தியானத்தில் இருக்கையில் எனக்குள் இனிமையான இசை போன்ற ஒலிகள் ஒலிப்பதைக் கவனித்தேன்.

என் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் சாஸ்திரிய இசையில் ஆர்வம். எங்கள் வீட்டில் ஒரு கிராமஃபோன் இருந்தது. எம்.எஸ்., மதுரை மணி ஐயர் என ஏழெட்டு இசைத் தட்டுகளை மறுபடி மறுபடி ஓடவிட்டுக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

என் நண்பர்களுக்கு சினிமா பாடல்களிலும், ஆங்கில இசையிலும் ஆர்வம். என் சகோதரர்கள் ரேடியோவைத் திருகி பாடல்களைக் கேட்பார்கள்.

எப்போதும் காற்றில் மிதந்தபடி இருந்த இசையைத் தேடி போய்க் கற்க வேண்டும் என்று ஏதோ எனக்கு ஒருபோதும் ஆர்வம் வந்ததில்லை. கற்றுக் கொள்வதில் மட்டுமல்ல. எந்தக் குறிப்பிட்ட இசைத்தட்டைச் சேகரிக்கவும் எனக்கு ஆர்வம் வந்ததில்லை. சொல்லப்போனால், எந்த இரைச்சலும் இல்லாமல் அமைதியாக, நிசப்தமாக இருந்தால்தான் எனக்குப் பிடிக்கும்.

நண்பர்களோடு நேரத்தைச் செலவு செய்கையில், இளைஞர்கள் மத்தியில் பிரபலமாயிருந்த பாப் இசையைக் கேட்பது தவிர்க்க முடியாமல் போனது. இசையைக் கேட்க வேண்டும் என்று ஏக்கமில்லாமலேயே இசையைக் கேட்டுக் கொண்டிருந்த காலம் அது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நூற்றுக்கணக்கான இசை டேப்களைச் சேகரித்த நண்பர்கள் பலரை எனக்குத் தெரியும். என் நண்பர்கள் மட்டுமல்ல. என் சகோதரனிடம்கூட கேசட்கள் இருந்தன. ஆனால், என்னிடம் ஒரு கேசட் கூடக் கிடையாது.

பிற்பாடு, எனக்கு 22, 23 வயதிருந்தபோது, பல மணி நேரங்கள் தியானத்தில் ஈடுபட்டேன். மிக அமைதியான இரவில், மிக நிசப்தமான சூழலில், தியானத்தில் இருக்கையில் எனக்குள் இனிமையான இசை போன்ற ஒலிகள் ஒலிப்பதைக் கவனித்தேன். அந்த இசை என்னை அறியாமலேயே எனக்கு மிக இனிமையான உணர்வைத் தந்தது. அதுபற்றி நான் விவரித்துச் சொன்னால், ஒவ்வொருவர் ஒவ்வொருவிதமாகக் கற்பனை செய்ய ஆரம்பித்துவிடுவீர்கள்.

இசை ஓர் அற்புதமான கருவி. இசையின் துணையுடன் மற்றவர்களை அணுகுவது சுலபம் என்று அப்போதுதான் உணர்ந்தேன். அதனால்தான், என் வகுப்புகளில் இசையை அதிகம் பயன்படுத்துகிறேன்.

இசையில் நான் விற்பன்னன் அல்லன். ஆனால், கண்களை மூடி அமர்ந்தால், இசை ஓர் அற்புதமான கட்டமைப்பு என்பதைக் கவனிக்கிறேன். நிசப்தம் போல் ஊடுருவி உள் நுழைவதல்ல, இசை. நிசப்தத்தின் ஆழத்துடன் ஒப்பிட்டால், இசை ஓரளவு மேம்போக்கானதுதான். ஆனால், நிசப்தத்தை எவ்வளவு பேரால் ரசிக்க முடிகிறது? ஏதோ ஒரு கட்டமைப்பைத்தானே மனிதன் ரசிக்கிறான்? பேசுவதைவிட, பாடினால்தான் கட்டமைப்பு இன்னும் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஆனால், இசையைக் கற்றுக் கொண்டதில்லை. இனி கற்பதற்கான நேரமும் இல்லை.

எனக்கு ராகம், தாளம் இதெல்லாம் தெரியாது. 'சரிகமபதநிச' கூட முறையாக சொல்லத் தெரியாது. எங்கள் பள்ளிக் குழந்தைகள் கூட சிறப்பாகச் சொல்கிறார்கள்.

பாடுவேன். அதில் கவிதை இருக்குமே தவிர, இசை நுணுக்கங்கள் இருக்காது. மனிதரின் நாடி, நரம்புகளை ஊடுருவும் ஒலியின் அபார சக்தியைப் பயன்படுத்தும் விதத்தை அறிந்து தேர்ந்திருக்கிறேன். அதன் மூலம் அவர்களை வேறு நிலைகளுக்கு என்னால் எடுத்துச் செல்ல முடிகிறது. என் பாடலால் அதீத மகிழ்ச்சியை உண்டு பண்ண முடியும். கண்களில் கண்ணீரைக் கொண்டு வர முடியும்.

மற்றபடி, எனக்கு ராகம், தாளம் இதெல்லாம் தெரியாது. 'சரிகமபதநிச' கூட முறையாக சொல்லத் தெரியாது. எங்கள் பள்ளிக் குழந்தைகள் கூட சிறப்பாகச் சொல்கிறார்கள்.

தியானலிங்கத்தின் சுற்றுப்புறம் மிக மிக அமைதியாகவே பராமரிக்கப்படுகிறது. அந்த நிசப்தம் மிகவும் அழுத்தமாக இருப்பதாகப் பலர் சொன்னதால், அதில் ஒரு சிறு தளர்வு ஏற்படுத்த முடிவு செய்தேன். நாளின் குறிப்பிட்ட நேரத்தில் சில ஒலிகளை எழுப்பி, அந்த ஒலிகளைச் சமர்ப்பிக்கும் நாத ஆராதனை என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

சில பிரம்மசாரிகளை அழைத்தேன். "இந்த ஆழமான நிசப்தத்தைத் தளர்த்துவதற்கு, கேட்பதற்கு இனிமையான ஒலி இருந்தால் நல்லது. ஏதாவது நல்ல பாடல்களைப் பாடுங்கள்" என்று சொல்லி வைத்தேன்.

மிக்க ஆர்வத்துடன் இரண்டு பிரம்மசாரிகள் வந்தனர். 'நடராஜா நடராஜா' என்று பஜனைப் பாடல்களைத் தினம் பாடினர்.

கோவையிலிருந்து வந்திருந்த அன்பர்கள் சிலர் இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு,, 'சத்குரு, தயவுசெய்து அந்த பிரம்மசாரிகள் பாடுவதை உடனே நிறுத்தச் சொல்லுங்கள்' என்று கோரிக்கை வைத்தனர். ஏன் என்று அறிய பாடலைக் கேட்டேன். மயக்கம் வந்தது. இசையின் இனிமையினால் அல்ல... அந்த கோரமான ஓசையால்!

பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹேண்டல் என்ற பிரபல இசைக் கலைஞருக்குப் பொறுமை குறைவு. அபஸ்வரத்தை அவரால் தாங்க முடியாது.

இது பற்றித் தெரிந்திருந்த ஒரு குறும்புக்கார சிஷ்யன், இளவரசர் முன் நடக்க இருந்த கச்சேரியில் ஹேண்டலுடன் விளையாடத் தீர்மானித்தான். அவர் வரும் முன் குழுவினர் சுருதி சேர்த்து வைத்திருந்த கருவிகளில் சுருதி மாற்றி வைத்துவிட்டான்.

சிம்பொனி துவங்கியதும், ஒவ்வொரு இசைக் கருவியும் ஒவ்வொரு சுருதியின் ஒலியெழுப்பின. இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்த அத்தனை பேரும் நடக்கும் கூத்தைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தனர். ஹேண்டல் தன்னிலை இழந்தார். குழுவினரின் இசைக் கருவிகளைப் பிடுங்கி எறிந்தார். சிலவற்றை மேடையில் மோதி உடைத்தார். ஆத்திரத்தில் கால்களை மேடையில் மாறி மாறி உதைத்தார்.

இளவரசரே வந்து அவரைச் சமாதானம் செய்ய, வெகு நேரம் பிடித்தது. ஹேண்டல் அளவுக்கு நான் பொறுமை இழக்கவில்லை. ஆனால், உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று உணர்ந்தேன்.

ஆசிரமத்தில் இருப்பவர்களில் சிலரை முறையாக இசை கற்பதில் ஈடுபடுத்தினேன். சில மாதங்களில் மெள்ள மெள்ள அவர்கள் இசையில் சிறப்பான பயிற்சி பெற்றார்கள். ஈஷாவின் அற்புதமான இசைக் குழுவாக 'சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா' பிறப்பெடுத்தது. இன்று அபார ஆற்றலுடன் வளர்ந்துவிட்டது.

இப்படித்தான், என் வாழ்வில் இசையை நான் விரும்பித் தேர்ந்தெடுக்காதபோதும், இசை எப்போதும் என்னுடன் இசைந்து இருக்கிறது.