"சத்குருவிற்கு எப்படி சத்குரு என்ற பெயர் வந்தது? சத்குரு ஏன் இமயமலைப் பயணம் அழைத்துச் செல்கிறார்?" - இந்த இரு கேள்விகளுக்கும் பதில் இங்கே...

Question: உங்களை அழைக்க, "சத்குரு" என்ற சொல்லை அமைத்துக் கொடுத்தது யார்?

சத்குரு:

இந்தியாவில் அதுதான் ஆச்சரியம். படிப்பறிவே இல்லாத விவசாயியிடம் கேட்டால் கூட தர்மம் என்றால் என்ன என்று அவனுக்குத் தெரியும். முக்தி என்ற வார்த்தை தெரிந்திருக்கும். பண்டைய காலத்தில் பாரபட்சமற்ற விதத்தில் எல்லோரும் எல்லாவற்றையும் அறிந்திருப்பதற்குப் பெரு முயற்சி எடுத்துக் கொள்ளப்பட்டது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இந்தப் பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ளாவிட்டால் கூட "நான்" என்கிற ஒரு சிறு நிகழ்வையாவது புரிந்து கொள்ள வேண்டும் என்று எழுந்த முயற்சி இது. முக்தி போல, தர்மம் போல குரு என்ற வார்த்தையையும் ஒவ்வொரு குடிமகனும் பாரதத்தில் அறிந்திருக்கிறான். ‘சத்குரு’ என்றால் படிக்காத குரு. முறை சார்ந்த ஆன்மீகக் கல்வி பயிலாதவருக்கு சத்குரு என்று பெயர். அவற்றையெல்லாம் அவர் உள்நிலை அனுபவத்தில் கொண்டிருக்கிறார். ஆன்மீகக் கல்வி என்று அவருக்கு ஏதுமில்லை. வேதங்கள், கீதைகள், உபநிஷதங்கள் போன்றவற்றிலிருந்து அவர் வருவதில்லை. அவற்றில் அவருக்கு பயிற்சியும் இல்லை. இது உள்நிலை அனுபவம். "நான்" என்கிற விஷயத்தை, என்னைக் குறித்த விஷயத்தை தவிர, எல்லாவற்றிலும் ஒருவித அறியாமையில் தான் நான் இருக்கிறேன். எனக்குத் தெரிந்ததெல்லாம் ‘நான்’ என்பது தான். இது தெரிந்தாலே இந்த பிரபஞ்சத்தைத் தெரிந்து கொண்டதாக அர்த்தம்.

எனவே ‘சத்குரு’ என்ற சொல்லுக்கு அர்த்தம், ஒருவர் தன்னிலிருந்து வருபவர் என்பது. இன்னொருவரால் பயிற்றுவிக்கப்பட்டவர் என்று இல்லை. அதாவது ஒரு குறிப்பிட்ட மரபிலேயிருந்து வருபவர் அல்ல சத்குரு என்பவர். அவர் தன்னிலிருந்து தோன்றியவர். ஒரு குறிப்பிட்ட பாரம்பரியத்தை அவர் சார்ந்திருக்க மாட்டார். அதனால் தான், அவருக்கு முன்னோடிகள் என யாரும் இல்லை என்பதனால் தான் இந்த சமூகத்தில் அவரை அங்கீகரிப்பதற்கு நீண்டகாலம் ஆகிறது.

ஒரு மனிதரைக் குறிப்பிட்ட விதத்தில் காண்கையில் அவரை குரு என்று அழைக்கத் தோன்றினால், இந்தியாவில் அப்படி அழைக்கத் துவங்குவார்கள். அப்படித்தான் என்னை சத்குரு என்று அழைக்கத் துவங்கினார்கள். யாரோ அறிவுஜீவிகள் அமைத்ததில்லை இந்த வார்த்தை. சாதாரணர்கள் விரும்பி அழைத்த வார்த்தை அது. மற்ற பல வார்த்தைகளை விட இது என்னை ஓரளவு நியாயமாக விவரிப்பதாக நினைத்ததால், நான் அதைக் கேள்வி கேட்கவில்லை.

பதினைந்து, இருபது வருடங்களாக என்னை அறிந்தவர்கள் பலர் இன்றைக்கும் என்னை சத்குரு என்று அழைக்காமல், என் செல்லப் பெயர் சொல்லி அழைக்கிறார்கள். இப்படித் தான் அழைக்கப்பட வேண்டும், அப்படித் தான் குறிப்பிடப்பட வேண்டும் என்று எந்தத் தத்துவமும் நான் வைத்துக் கொள்ளவில்லை.

Question: இமயத்துக்கும் கைலாசத்திற்கும் ஏன் நீங்கள் பயணங்கள் அழைத்துச் செல்கிறீர்கள்?

sadhguruvirku-eppadi-sadhguru-endra-peyar-vanthathu-1

சத்குரு:

இமயமலையைக் காணாதவர்களே இந்த கேள்வியைக் கேட்க முடியும். ஒரு முறை பார்த்து விட்டவர்கள் இப்படிக் கேட்க மாட்டார்கள். மலைகளில் இமயம் சொற்களுக்கு அப்பாற்பட்ட ஓர் அற்புதம். அந்த அற்புதத்தைக் காண இரண்டு கண்கள் போதாது.

பல்லாயிரம் வருடங்களாக யோகிகளும் ஆன்மிக குருமார்களும் தங்கள் ஞானத்தை இமயமலைகளில் சேமித்து விட்டுப் போயிருக்கிறார்கள். அவர்கள் இருந்த சமூக சூழ்நிலையில் அதை மற்றவர்களுடன் முழுமையாகப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவில்ல. ஆனால், அந்த ஞானத்தை வீணடிக்க விரும்பாமல், பிற்பாடு வருபவர்களுக்குக் கிடைக்கும் வண்ணம் சக்தி வடிவில் இமயத்தின் பல பகுதிகளில் விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

நீங்கள் படைப்பைப் பற்றியும் படைத்தவனைப் பற்றியும் என்னென்ன அறிந்து கொள்ள விரும்புகிறீர்களோ, அத்தனை விஷயங்களும் இமயத்தில் உள்ளன. கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் உங்களுக்கு இருந்தால், அத்தனை விவரங்களையும் தேக்கி வைத்திருக்கும் அற்புத நூலகமாக இமயம் இருக்கிறது. தேவையான தகவல்கள் அத்தனையும் சக்தி நிலையில் பொதிந்து இருக்கின்றன.

இமயமலையின் மடியில் இருந்தால் போதும், கிரகித்துக் கொள்ளும் திறமை இல்லா விட்டாலும் அதன் பிரம்மாண்டம் உங்களுள் மாற்றத்தைக் கொண்டு வரும். வாழ்நாளில் ஒரு முறையாவது இமயத்துக்குப் போய் விடுங்கள். உங்கள் கால்களில் நடக்கும் சக்தி இருக்கும் போதே போய் வாருங்கள்.

இந்திய மண்ணில் பிறந்து இமயத்தைப் பாராது இருந்தால், மிகப் பெரிய பாக்கியம் ஒன்றைத் தவற விட்டவர்களாவீர்கள்.