சத்குரு உண்மையில் மனிதர்தானா? இந்தக் கேள்வி ஒவ்வொரு முறையும் சத்குரு மேற்கொள்ளும் பயணங்களைப் பார்க்கும் போதெல்லாம் நமக்கு எழும். தான் உணர்ந்த பேரானந்தம் உலக மக்கள் அனைவருக்கும் ஒரு துளியாவது சென்று சேர வேண்டும் என்ற தணியாத தாகத்தை வேள்வியாக்கி, தன்னையே அர்ப்பணித்து வரும் சத்குருவின் தீவிரமான பயணங்கள் பொதுவாக பலரும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத கனவுகளாகத்தான் இருக்கின்றன.

ஈஷாவில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வுமே பிரம்மாண்டமாக, இதற்கு முன் இல்லாத அளவில், அதேசமயம் வெகு இயல்பாக நடந்து முடிந்து விடுகிறது. இதற்குப் பின் இருக்கும் எண்ணற்ற தன்னார்வத் தொண்டர்களின் உற்சாகமும் அர்ப்பணிப்பும் புதிய உலகை கனவு காணும் அனைவருக்கும் நம்பிக்கையை அளித்துள்ளது.

சமீபத்தில், Inner Engineering புத்தகம் மூலம் மேற்கத்திய நாடுகளுக்கு ஆன்மீகத்தை இன்னும் ஒரு படி நெருங்க வாய்ப்பு ஏற்படுத்த அமெரிக்கா சென்ற சத்குரு அவர்களுடன் பயணிக்கும் பெரு வாய்ப்பு கிடைத்த சாதகரின் அனுபவப் பதிவு நம்மையும் அப்பயணத்தில் உடன் அழைத்துச் செல்கிறது.

இனி நிக்கி அவர்களின் வார்த்தைகளில்...

ஒவ்வொரு பயணத்திலும் நமக்கு பலவித அறிமுகங்களும் அனுபவங்களும் ஏற்படுகின்றன. நடைப் பயணம், நெடுந்தூரப் பயணம், கேளிக்கை, உற்சாகம், சுவாரஸ்யம், சுற்றுலா, யாத்திரை என உலகியல் அனுபவங்களுடன் உள்நிலையில் ஆன்மீக அனுபவமும் ஒரு சேர நிகழும் வாய்ப்பாய் இவை இருக்கின்றன. Inner Engineering புத்தகம் வெளியிடுவதற்காக சத்குரு அமெரிக்கா வந்திருந்தபோது, அவர் அருளால் அவருடன் இணைந்து பயணிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது.

நமக்கு அறிமுகமற்ற விஷயங்களில் நம்மை ஈடுபடச் செய்வார். அதன் மூலம் நாம் புதிதாகக் கொண்டு வரும் அடையாளங்களை மறக்கவும் சொல்வார். இதுவரை நம்மை பற்றி நாம் வைத்திருக்கும் நமது அடையாளங்களைத் துறப்பதன் மூலம், தெரியாத திசையில் நடக்கும் நமது பயணத்தில், இன்னும் ஆழமாக ஈடுபட முடியும் என்பதற்காகவே இப்படி, என நினைக்கிறன்.

17 நகரங்களில் 21 நிகழ்ச்சிகள், அதுவும் 28 நாட்களில்... இந்த வேகம், வெளியில் இருந்து பார்க்கும் அனைவருக்கும் மலைப்பை ஏற்படுத்தும். இந்த எல்லையற்ற படைத்தலுக்கு மூலமானதுடன் தொடர்பில் அவர். அத்துடன் விழிப்புணர்வும் கவனமும் சங்கமிக்கும் தீவிரமும் இந்த வேகத்தை அவருக்குச் சுலபமாய் கொடுக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

இத்தனை பயணத்திற்கு இடையேயும் அவருக்கே உரிய சிரிப்புடன் சத்குரு...

ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு வகையில் நம்மை இன்னும் மெருகேற்றிக்கொள்ள சத்குருவின் நிகழ்ச்சிகள் நமக்குப் பெரும் வாய்ப்பை வழங்குகின்றன. நேரம், ஒலி-ஒளி சாதனங்கள், மனிதர்கள் என்று சவால் எதுவானாலும், குழுவாக ஒருங்கிணைந்து எளிதாக அந்தச் சூழ்நிலைக்குத் தேவையானதைச் செய்துவிட்டு அப்படியே நகர்ந்துவிட முடிகிறது. யாராவது பாராட்ட வேண்டும் என்றோ, கவனிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்போ ஏற்படுவதில்லை.

சத்குரு, தனக்கே உரிய நேர்த்தியுடன், எப்போதும்போல சரியான நேரத்தில் நிகழ்ச்சியைத் துவங்கி, கடைசிப் பங்கேற்பாளர் விடைபெறும் வரை அரங்கத்தில் இருப்பார். இதனால், இரவுகளில் வெகுநேரம் ஆனாலும், அடுத்த நாள் அதிகாலையில் அடுத்த நிகழ்ச்சிக்கான பயணம் மீண்டும் துவங்கும். நேரம் இல்லாமல் ஓட வேண்டிய சூழ்நிலையிலும்கூட சத்குருவிடம் பரபரப்பே இருக்காது. ஏதோ ஒருவகையில், நேரம்கூட அவருக்கு வளைந்து கொடுக்கிறது என்றே தோன்றுகிறது. இந்த அருள் நாம் செய்ய வேண்டியதைச் செய்து முடிக்க நமக்கு எப்போதும் துணைபுரிகிறது. அமெரிக்கா முழுவதும் நடந்த புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளில் சுமார் 26000-க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தன்னார்வத் தொண்டர்கள் முழு ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்புடனும் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளில், நியூயார்க், நியூஜெர்சி, ஃபுளோரிடா, டெக்ஸாஸ், கலிஃபோர்னியா, வாஷிங்டன், வான்கூவர், மின்னசோடா, விஸ்கான்சன், டென்னஸி, இல்லினாய்ஸ் என எல்லா நகரங்களிலும் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த மக்கள் வெள்ளம், இயல்பான சிரிப்பலையுடன் அரங்கை நிறைத்தது.

ஒரு நகரத்தில் இருந்து அடுத்த நகரம் நகரும் பொழுதுகள் எப்போதுமே பொன்னான நேரங்களாக அமைந்தது. அப்போதுதான் மிகச் சிறப்பாக கதைகளை நமக்குச் சொல்லும் சத்குரு, தன் பாணியில் தன் சொந்த வாழ்க்கையில் நடந்த பலவற்றைப் பகிர்ந்துகொண்டார். அவற்றில் சில மென்மையானவை, பல சிரிப்பு வெடிகள்.

அவரது மோட்டார் சைக்கிள் அனுபவங்கள் சிலிர்ப்பை ஏற்படுத்தின. கையில் வண்டி... காலடியில் எல்லைகளற்ற நீண்ட சாலைகள்... போகும் இடம் பற்றிய கவலை இல்லாமல், பயணம் மட்டுமே நோக்கமாக, பயணிக்கும் அனுபவம் மட்டுமே முக்கியமாகக் கொண்ட தனித்துவமான பயணங்கள்.

காலையில் துவங்கி 5 மணி நேரத்தில் பக்கத்தில் இருக்கும் நகரம் வரை சென்று, மாலையில் மீண்டும் வீடு திரும்புவது, சத்குருவிற்குச் சாதாரணமான ஒன்று. தலை சாய்ந்து, கிட்டத்தட்ட படுத்த நிலையில் தன்னைப் பற்றிய லட்சியம் இன்றி, தன் உடலே பைக்கின் இன்னொரு அங்கமாக மாறிவிடும் கணங்கள் அவை.

கிட்டத்தட்ட நாடு முழுவதும் பைக்கிலேயே சுற்றி வரும்போது, சத்குரு தூங்கியதும் பைக்கின் மேலேதான். இது எப்படிச் சாத்தியம் என்று கேட்டபோது “ஹேண்டில் பார் மீது பையைக் குறுக்காக வைத்து, அப்படியே சாய்ந்துகொண்டு பைக்காகவே மாறுவதும், தனியாக இருப்பதைவிட பைக்கின் மேலேயே இருப்பதே விருப்பமானதாக இயல்பாக இருந்தது” என்றும் குறிப்பிட்டார்.

சாலைகளின் வழியே உலகைத் தெரிந்துகொள்ளும் அவரின் இளமைக் காலப் பயணங்கள், சுதந்திர வானில் சிறகு முளைத்த பறவையாக விரிந்தது என பல கதைகள் எங்கள் பயணங்களின் போது நிகழ்ந்தது.

புத்தக வெளியீட்டுப் பயணத்தில் நானும் சேர்ந்தபோது எனது பங்கு என்னவாக இருக்கும் என்று தெரியாமலே இருந்தது. நானே ஆச்சரியப்படும்விதமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகச் செயல்படும் வாய்ப்பு கிடைத்தது. உண்மையில் மக்கள் கூட்டத்தில் பேசுவதற்கு எனக்கு தயக்கம் இருப்பது இல்லை. போதுமான அவகாசமும், தயாராவதற்குரிய நேரமும் மட்டுமே போதும். ஆனால், இந்த சௌகர்யத்தை, ஒவ்வொரு நாளும் ஒரு புதிய இடத்தில், புதிய மக்கள் மத்தியில் துவங்கும் நிகழ்ச்சியில் எதிர்பார்க்க முடியுமா?

நிகழ்ச்சி துவங்க சில நிமிடங்கள் இருக்கும்போது சத்குரு அழைத்து நான் தயாரித்த உரையைத் திருத்தி, புதிய குறிப்புகளையும் வழங்குவார். வாயில்கூட நுழையாத பல இந்திய வார்த்தைகள் அவற்றில் இருக்கும். தயாராவதற்குரிய கால அவகாசமும், சரி பார்க்கும் நேரமும் இல்லாமல், கையில் குறிப்புகள் நிறைந்த ஒரு துண்டுக் காகிதத்தை மட்டும் வைத்துக்கொண்டு நிகழ்ச்சியைத் துவங்கவேண்டும் எனும் போதெல்லாம் பயணத்தின் ஆரம்ப நாட்களில் எனக்கு வயிற்றைக் கலக்கியது.

நமக்கு அறிமுகமற்ற விஷயங்களில் நம்மை ஈடுபடச் செய்வார். அதன் மூலம் நாம் புதிதாகக் கொண்டு வரும் அடையாளங்களை மறக்கவும் சொல்வார். இதுவரை நம்மை பற்றி நாம் வைத்திருக்கும் நமது அடையாளங்களைத் துறப்பதன் மூலம், தெரியாத திசையில் நடக்கும் நமது பயணத்தில், இன்னும் ஆழமாக ஈடுபட முடியும் என்பதற்காகவே இப்படி, என நினைக்கிறன்.

நான் இன்று எப்படி இருக்கிறேன் என்று என்னை நான் பார்க்கிறேன். ஆனால், அவரோ நாளை நான் எப்படி இருக்க முடியும் எனப் பார்க்கிறார். இதை அசௌகர்யமாக உணராத வரை, இது சௌகர்யமாகவே இருக்கிறது. ஒரு கணம் அவர் உடன் இருந்தாலும், அதிகாலையில் மெல்ல ஊடுருவும் குளிராகவோ, உச்சி பொழுதில் துளைக்கும் கதிரவனின் கதிராகவோ அவரது அருள் நடந்தே இருக்கிறது.

எப்போதும் அருளின் நிழலில்...

இந்த பயணம் முழுவதும் பல நுட்பமான மெல்லிய கணங்கள் எனைச் சூழ்ந்தது. நெருப்புடன் பயணம் செய்யும்போது நாமும் சேர்ந்தே எரிக்கப்படுகிறோம். ‘நான்’ என்று என்னைப் பற்றி நான் வைத்திருந்த விடாப்பிடியான அடையாளங்கள் மெல்ல என்னிலிருந்து ஒவ்வொன்றாக பிரிக்கப்பட்டது. உள்ளிருக்கும் கண்ணருவி ஊற்றெடுப்பதே முதன்மையானதாய் இருந்தது.

என்னை என்னிலிருந்தும் அவரிடமிருந்தும் மறைத்துக்கொள்ள இடமும் இல்லை அவசியமும் இல்லை. உடன் பயணம் செய்த எங்கள் மீது அவர் கொண்ட அன்பின் ஆழம் எங்கும் நிறைந்தது. தன்னில், நம்மில், இந்த வாழ்வின் சுவாசத்தில் என எங்கும் கலந்தே இருக்கும் படைத்தலுக்கு மூலமானதை தொடும்போது அவரின் கன்னங்களில் வழிந்தோடும் சிற்றருவி, ஆன்மீகப் பயணத்தை நாமும் தேர்ந்தெடுப்போம் என்று அறிந்த அன்பின் ஊற்றுதானே!

இன்னும் வேண்டும் என்ற தாகம்...

சீயாட்டில் நகரில் நடந்த நிகழ்ச்சியில், சத்குரு பேசிக் கொண்டிருக்கும் போதே, இளைஞர் ஒருவர் மேடை மீது வந்து நெடுஞ்சான்கிடையாக விழுந்து நமஸ்கரித்தார். ஒரு வினாடியில் இது நடந்துவிட்டது. ஒரு யுகமாக நீண்ட அடுத்த வினாடியில் சத்குரு அந்த இளைஞரை நெருங்கி மெல்ல தன் கரத்தை அவர் மீது வைத்தார்.

அதைத் தொடர்ந்து மேடையைவிட்டு கீழே இறங்கிய சத்குரு, மக்கள் மத்தியில் கலந்தார். நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னும் மக்கள் அரங்கைவிட்டு வெளியேறாமல், சிலர் நடனமாடியும், சிலர் தங்கள் வாழ்க்கை மலர்வதற்காக சத்குரு வழங்கிய வாய்ப்பை கண்ணுற்ற சாட்சிகளாக, இன்னும் வேண்டும் என்ற தீராத தாகத்தில் அங்கேயே நின்ற காட்சி... வேறு எங்கும் காணக் கிடைக்காத அபூர்வம்.

12 பேனாக்களை...

சத்குரு தாமாகவே புத்தகத்தில் கையெழுத்திட துவங்கிய முதல் நாள் மாலையே 700 புத்தகங்கள் விற்றுத்தீரும் என்று யார் அறிவார். மக்கள் வெள்ளம் கையில் புத்தகத்தை ஏந்தியவாறு மேடைக்கு அருகில் வர, அனைவருக்கும் பொறுமையாக கையெழுத்திட்ட சத்குருவிற்கு 12 பேனாக்களின் ‘மை’ போதவில்லை. நிகழ்ச்சி நிறைவடைய எவ்வளவு நேரமானாலும் பொறுமையுடனும் மலர்ந்த முகத்துடனும் காத்திருந்த தன்னார்வலர்களை சத்குரு சந்தித்த எல்லா நாட்களுமே ஒரே குடும்பத்தினர் ஒன்றுகூடும் திருவிழாவாகவே ஆனது.

24x7

எப்போது ஓய்வு கிடைத்தாலும், அனைவரும் ஒன்றுகூடும் விதமாக அதை சத்குரு மாற்றிவிடுவார். அப்படிப்பட்ட ஒரு ஓய்வு கிடைத்த ஒரு நாள் மாலை சத்குரு திரைப்படம் பார்க்கலாம் என்று கூற, அனைவரும் சேர்ந்து “விக்கிலீக்ஸ்” பற்றி வெளிவந்துள்ள டாக்குமென்ட்ரி ஒன்றினைப் பார்த்தோம். எல்லா துறைகளின் மீதும் பாரபட்சமின்றி சத்குரு காட்டும் ஆர்வம் பிரம்மிப்பூட்டுவதாகவே அமைகிறது.

மிக அரிதான ஓய்வு நேரங்களில் ஏதேனும் ஒரு புத்தகமோ, பத்திரிக்கையோ சத்குருவின் கரங்களில் இருக்கும். இந்தப் பயணம் முழுவதும், அரிதான ஒன்றிரண்டு சமயங்களில் மட்டுமே சத்குருவிற்கு தனித்து இருக்கும் சூழல் ஏற்பட்டது. எனக்காக உங்களுக்காக என எப்போதுமே நம் சார்பாக உழைத்துக்கொண்டு இருக்கும் சத்குருவிற்கு, ஒரு நாளின் 24 மணிநேரமும் போதவில்லை எனலாம்.

ஒவ்வொருவருடனான தனித்த சந்திப்புகள், தொலைபேசி வழியாக உலகெங்கும் இருந்து எல்லா நேரங்களிலும் வரும் அழைப்புகள் என நிகழ்ச்சி முடிந்தபின் அடுத்தடுத்த நிகழ்வுகள் இந்தப் பயணம் முழுவதும் காத்திருந்தது. ஒரு சமயம், படித்து கொண்டிருந்த சத்குரு, கண்களை தேய்த்துக்கொண்டு, தம் கண்களில் எப்போதும் நிறைந்திருக்கும் ஜொலிப்புடன் அப்படியே மேலே பார்த்தவாறு அமர்ந்தார். ஒருவேளை, இந்த பயணத்தின் மீது வைத்திருக்கும் மரியாதை அத்தனை சோர்வையும் விரட்டியதோ...!

சத்குரு குறிப்பிடுவது போல, “உங்களால் செய்ய முடியாததை செய்யாவிட்டால் பரவாயில்லை. உங்களால் செய்ய முடிந்த ஒன்றை செய்யாமல் விடுவது பெரும் குற்றம்,” எனும் வாசகம் நமது வாழ்க்கை பயணத்தில் எங்கோ ஓரிடத்திற்கு நிச்சயம் பொருந்தும். சத்குரு செய்து கொண்டிருக்கும் செயல்களை பார்த்த பின்பும் ஒரு மனிதர் அவரது முழு திறனை அடைய முயற்சி செய்யாமல் இருப்பதை என்னால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை.