சத்குரு:

பெண்ணிற்கு அழகு எப்படியோ, ஆணுக்கு வீரம் அப்படி. தினசரி வாழ்வில் தங்களது வீரத்தையும், செயல்திறனையும், ஆற்றலையும் வெளிப்படுத்த கிராம இளைஞர்கள் தங்களுக்கு இருந்த வழிவகைகளை இன்று இழந்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் வழக்கத்தில் இருந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு, தமிழ் இளைஞர்களுக்கு தங்கள் ஆற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பாய் இருந்தது. உடலுறுதி, திறமை, துரிதமாய் செயல்படும் குணம், போட்டி போடக்கூடிய பலம் இவையாவும் ஜல்லிக்கட்டு விளையாட தேவையான அடிப்படை குணங்கள். இதனால், மது, போதைப் பொருள் போன்ற தீயபழக்கங்களில் கிராமப்புற இளைஞர்கள் சிக்கிக்கொள்ளாமல் இருக்கிறார்கள்.

https://youtu.be/-O8ynAwmpmI

நம் கலாச்சாரத்தில் மாட்டினை நாம் வெறும் விலங்காக பார்க்கவில்லை, நம் வாழ்வில் பல அம்சங்களில் மாடுகள் அங்கம் வகிக்கின்றன. நாம் விவசாயம் செய்தாலும் சரி, விளையாடினாலும் சரி, மாட்டுடனும் அதன் பாலுடனும் நமக்கொரு சம்பந்தம் இருக்கின்றது. அதைப் போலவே, அதனுடன் விளையாடும் பழக்கமும் நம் கலாச்சாரத்தில் நெடுங்காலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது.

ஜல்லிக்கட்டில் போட்டியிடும் காளைகளை யாரும் துன்புறுத்துவதும் இல்லை, கொல்வதும் இல்லை. காயம் ஏற்படுவதோ, தற்செயலாக மரணம் சம்பவிப்பதோ மனிதர்களுக்குத்தான், காளைகளுக்கு அல்ல. விலங்குகள் உரிமை, விலங்குகள் துன்புறுத்தல் என்று பேசுபவர்கள், உண்மையுடன் இருந்தால், தினமும் லட்சக்கணக்கான மிருகங்களை கொன்று வருகின்ற கசாப்பு தொழில்சாலைகளை மூடுவதற்கு பாடுபடட்டும்.

ஒரு மிருகத்தின் உயிரை எடுப்பது கொடுமை அல்லவா! ஆனால், அது குறித்து யாருக்கும் கவனம் இல்லை. உணவிற்காகக்கூட அவற்றை கொல்வதில்லை, ஏற்றுமதி செய்வதற்காக கொல்கிறார்கள். உலகிலேயே அதிக மாட்டுக்கறி ஏற்றுமதி செய்வது இந்தியாதான். வெட்கக்கேடான விஷயம் இது.

தனி மனிதர் தன் வீட்டில் வெட்டிச் சாப்பிடுவது வேறு. அது அவருடைய தனிப்பட்ட விஷயம். ஆனால், நம் தேசம் மாட்டுக்கறி ஏற்றுமதியில் முன்னணியில் இருப்பதை நான் விரும்பவில்லை. ஏதோவொரு மத நம்பிக்கையால் இதனை சொல்லவில்லை, நான் எந்த மதத்துடனும் என்னை அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. மாட்டுக்கறி உண்பது சுற்றுச்சூழலுக்கு உகந்தது அல்ல, அது சுற்றுச்சூழலை சீரழிக்கும். இன்று உலகமே இதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறது.

உலகில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசினில் 14.5% கால்நடைகளை உண்பதால் ஏற்படுகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? ரெட் மீட் என அழைக்கப்படும் இம்மாதிரியான கறி வகைகளை நெடுநாட்களாக உண்ணும் மேற்கத்தியர்களை, "மனிதர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்," எனக் கூறி மருத்துவர்கள் தடுத்து வருகிறார்கள்.

நமக்கு ஊட்டமளித்து, நமக்காக உழைத்து, நம் மண்ணை வளப்படுத்திய இந்த விலங்குகளை வெறும் பணத்திற்காக வெட்டிக் கொல்கிறோம். நம் தாயின் பாலினை குடித்தது போலவே, இந்த விலங்குகளின் பாலினையும் நாம் குடித்திருக்கிறோம். ஆனால், அவற்றை வெட்டி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். அவமானத்திற்குரிய செயல் இது.

இவற்றையெல்லாம் எதிர்த்து சண்டையிடுவதற்கு பதில், தமிழக கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு கிடைக்கும் எளிமையான சந்தோஷத்தினை அழிக்கப் பார்ப்பது முறையல்ல. ஜல்லிக்கட்டு விளையாட்டு உயிர்ப்புடன் இருக்கவேண்டும், எதிர்காலத்திலும் இது மிகுந்த சிறப்புடன் நடக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை.