Question: இந்த கேள்வியை எப்படி கேட்பது என்று எனக்கு தெரியவில்லை. சத்குரு, நீங்கள் எங்களைப் போலத்தான் தோற்றமளிக்கிறீர்கள். ஆனால் நீங்கள் எங்களை போல் இல்லை என்று எனக்குத் தெரியும். இப்படி ஒரு விளையாட்டை எங்களுடன் விளையாடுவதில் திட்டம் ஏதாவது இருக்கிறதா? உங்கள் உண்மையான ரூபத்தை எங்களிடம் வெளிப்படுத்தும் எண்ணம் உங்களுக்கு இல்லையா?

சத்குரு:

நான் பார்ப்பதற்கு அவரைப்போல இருக்கிறேன் என்று, இந்த பெண்மணி சொல்கிறார். இது உண்மையா? அவர் அந்த வாக்கியத்தால் சொல்ல முற்பட்டது - நான் ரத்தமும் சதையுமாக எல்லோரையும் போல்தான் இருக்கிறேன் என்று. ஆனால் அதேசமயம், நான் வேறு ஏதோ தன்மையுடன் இருப்பதாக அவர் எண்ணுகிறார் அல்லது உணர்கிறார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
சிறிது கவனம் செலுத்தி முயற்சி செய்தால், இந்த மண்ணாகிய உடலையும் தெய்வமாக்கலாம். இது, வணங்கத்தக்க தெய்வமாகவே ஆகிவிடும். இதை எப்படி செய்வது என்பதற்கு, ஒரு முழு விஞ்ஞானமே உள்ளது.

நான் ஏன் இந்த விளையாட்டை விளையாடுகிறேன்? எப்போது என் உண்மையான ரூபத்தை காட்டுவேன்? நான் எப்படி என்னை வெளிப்படுத்திக் கொண்டாலும், பலவகைகளில் தவறாகத்தான் புரிந்து கொள்ளப்படுவேன். இதில் எந்தத் தவறான புரிதல் பரவாயில்லை என்று தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன் (சிரிக்கிறார்). எப்படியும் உங்களால் சரியாக புரிந்துகொள்ள முடியாது. எனவே அது பயன்படும் படியான தவறான புரிதலாகவாவது இருக்கட்டுமே! என்று நினைக்கிறேன். இந்த உடல், எலும்பும், ரத்தமும் நிறைந்த வெறும் சதைப்பிண்டமாகவும் இருக்க முடியும். அல்லது இதை ஒரு சக்தி வாய்ந்த கருவியாகவும் மாற்ற முடியும். அப்படி சக்திவாய்ந்த கருவியாக மாற்றும்போது, எல்லை கடந்த பரிமாணத்தை தொடும் சாத்தியம் பெற்றுவிட்டால், அதையே ஒரு தெய்வம் என்றும் வணங்குவோம்.

நம் நாட்டில் ஏன் நிறைய தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன என்று உங்களுக்குத் தெரியுமா? இப்போது நம் அனுபவத்தில் இல்லாத பரிமாணங்களை உணர்வதற்கு, பிரதிஷ்டை செய்யப்பட்ட தெய்வ உருவங்கள் ஒரு நுழைவாயிலாக இருக்கும் என்பதால் தான்.

நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் போதும், ஈஷா யோக மையத்தில் இருக்கும் போதும், யோகா செய்கிறீர்கள். உடலை வளைத்து, மூச்சை அடக்கி, இப்படியாக பலவற்றையும் செய்கிறீர்கள். இவையெல்லாம் எதற்காக? மெதுமெதுவாக சதையும் ரத்தமுமாக இருக்கும் இந்த உடலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தத்தான். மண் தான் நம் உடலாக இருக்கிறது. நாம் எல்லோரும் உணவு உண்டு தான், உடல் வளர்த்தோம். அந்த உணவு எங்கிருந்து வந்தது? மண் தான் உணவானது, பின்னர் அது உயிர்துடிப்பு கொண்ட நம் உடலானது. ஆனால் இந்த சதைக்குவியலுக்கு என்று காலவரையறை உண்டு. சில ஆண்டுகளுக்கு பின் இது மீண்டும் மண்ணாகிவிடும். எனவே மண் மனிதனாகும் இந்த மாற்றம், ஒரு மிகப் பெரிய வாய்ப்பு. இது வெறும் வாய்ப்பாக (possibility) இருக்கலாம் அல்லது உங்களுக்கு நிலை மாற்றம் தரக்கூடிய ஒரு சக்தியாக மாறலாம்.

வாய்ப்பு என்பது ஒரு வாசல் போல. ஒருவர் இந்த வாசலைக் கடந்து அந்தப் புறம் போகலாம், அல்லது ஒருவர் கூட இந்த வாசலைப் பயன்படுத்தாமலும் இருக்கலாம். இது எப்போதுமே கேள்விக்குறி தான். அதேபோல் தான், இந்த மனித உடல் குறிப்பிட்ட வாய்ப்புடன் வந்துள்ளது. இதை உபயோகிப்பதும், நழுவ விடுவதும் நம் கையில்தான் உள்ளது.

நாம் பிறந்தபோது இந்த உடல் வெறும் ஒரு உயிரியல் சாரம்தான். அதற்கு தற்காப்பு, இனப்பெருக்கம் என்ற இந்த இரண்டு மட்டும் தான் தெரியும். இவை இரண்டு தான் அதை இயக்கும் சக்திகள். ஆனால் சிறிது கவனம் செலுத்தி முயற்சி செய்தால், இந்த மண்ணாகிய உடலையும் தெய்வமாக்கலாம். இது, வணங்கத்தக்க தெய்வமாகவே ஆகிவிடும். இதை எப்படி செய்வது என்பதற்கு, ஒரு முழு விஞ்ஞானமே உள்ளது.

இந்தியாவில் பல தெய்வங்கள் உள்ளன. மூன்று லட்சத்திற்கும் அதிகமான தெய்வங்கள் உள்ளன. இவையெல்லாம் வெறும் கேலிக்கூத்து அல்ல. அவற்றுள் பல, சிறப்பாக, சக்தி வாய்ந்ததாக, பிரதிஷ்டை செய்யப்பட்டவை. ஒவ்வொருவரின் நல்வாழ்விற்கும், வளர்ச்சிக்கும், முக்திக்கும் உறுதுணையாக இருக்க, இத்தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. பெரும்பாலானவை நல்வாழ்விற்காக உருவாக்கப்பட்டவை. அவற்றுள் சில முக்திக்காகவே உருவாக்கப்பட்டவை. எப்போதுமே, உச்சக்கட்ட முக்தியை நாடுவோர், சிவனையே வழிபடுவார்கள். ஏனென்றால் சிவன் அழிப்பவர். அழிப்பவர் என்றால்... உங்கள் அறியாமையை, உங்கள் எல்லைகளை, அழிக்கும் சக்தியாக இருப்பவர். அப்படித்தான் அந்த வடிவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அப்படியானால், அவர் உண்மையிலேயே இருக்கிறாரா? நீங்கள் இங்கே இருப்பது எந்த அளவு உண்மையோ, அதேபோல் அவர் இருப்பதும் உண்மை.

உங்களுக்குத் தெரியுமா? இந்த கேள்வியை கேட்ட நீங்கள், வீர சைவர் குலத்தை சேர்ந்தவர். அலம மஹாபிரபு என்பவர் ஒரு உயர்ந்த வீரசைவ துறவி. அவர் சிவனை துதித்துப் பாடுகிறார், வணங்குகிறார், ஆனால் பெரும்பாலான சமயம் பார்த்தால், அவர் சிவனை ஒரு குழந்தையாக்கி, சிவனுடன் விளையாடிக்கொண்டு இருப்பார். அதுபோன்ற தருணங்களில் அவர் சிவனை விடவும் பெரியவராக இருப்பார். வேறு சில சமயங்களில் அவர் சிவனை வேண்டி அழுது கொண்டிருப்பார். இப்படி அவர் தன்மை மாறி மாறி இருக்கும்.

மக்கள் என்னிடமும் இதை கேட்கிறார்கள். பல வழிகளில் நீங்கள் மதமோ, கடவுளோ இல்லாதவராக இருக்கிறீர்கள். ஆனால் சிவனுடன் மட்டும் உங்களுக்கு நெருக்கம் ஏன்? என்று. நான் எப்போதும் சொல்வேன், சிவன் என் 50% கூட்டாளி என்று. அவர் உறங்கும்போது நான் விழித்திருக்கிறேன். அவர் விழித்திருக்கும்போது நான் உறங்குகிறேன் என்பேன். (சிரிக்கிறார்) இந்த விளையாட்டை எங்களுக்குள் ஆடியபடியே இருக்கிறோம்.

இருவருமே விழித்திருந்து செயல் செய்தால், இந்த ஒரு உலகம் போதாது. இரண்டு உலகங்கள் தேவைப்படும். எனவேதான் எங்களுக்குள் இந்த ஏற்பாடு. எனக்கு இது நன்றாகவே வேலை செய்கிறது. இதைக் கேட்பவர்களுக்கு, என்ன இவர் இப்படி திமிராக பேசுகிறாரே என்று நினைக்கத் தோன்றும். ஆனால் இதுதான் உண்மை.

வெளிநாட்டுக் கலாச்சாரத்தில் இருந்து வந்தவர்களுக்கு இது புரிய வாய்ப்பில்லை. இங்கே பிறந்தவர்களுக்கு புரியும். சிவன் என்று நீங்கள் நினைக்கும் எல்லாமே... நான் தான். (சிரிக்கிறார்). பல நிலைகளிலும் இது தான் உண்மை.