சத்குருவுடன் சேகர் கபூர் - பகுதி 20

இணையதளம் வழியாக சேகர் கபூர் சத்குருவுடன் நிகழ்த்திய உரையாடலில் இந்த வாரம், பங்கேற்பாளர்களின் சுவாரஸ்யக் கேள்விகளும் இடைபெறுகின்றன. சேகர் கபூர் சத்குருவைப் பற்றி திரைப்படம் எடுப்பாரா? இந்தக் கேள்விக்கு சேகர் கபூர் என்ன சொல்கிறார்...? தொடர்ந்து படியுங்கள்!

சேகர் கபூர்: மேற்கத்திய நாடுகளில் அன்பு, உண்மைப் பற்றி பேசி வருகின்றனர். அதாவது உச்சபட்ச உண்மை என்பது அன்பே என்கின்றனர். சத்குரு, இதனுடன் நீங்கள் உடன்படுகிறீர்களா?

சத்குரு:
ஒரு சமூகம் பசியுடன் இருந்தால் அந்தச் சமூகத்தில் உணவிற்குத்தான் உச்சபட்ச மதிப்பு இருக்கும். நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால், ஆரோக்கியமே மதிப்புடையதாக அமைந்திருக்கும். அன்பு செலுத்தப்படாத இடத்தில், அன்பே பிரதானமாக இருக்கும். உங்களிடம் எது இல்லாமல் இருக்கிறதோ, அந்தக் கணத்தில் அதுவே உயர்ந்ததாக தோன்றும். ஆனால் அது அவர்களுக்குக் கிடைத்த பின்னர் அது உயர்ந்த மதிப்புடையது அல்ல என்பதை உணர்ந்து கொள்வார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

"அன்பே இப்பிரபஞ்சத்தின் அடிப்படை" என அன்பு பற்றிய இந்தப் பேச்சுக்கள் எல்லாமே அன்புநிலை குறைந்துள்ள ஒரு தன்மையிலிருந்துதான் வெளிப்படுகிறது. பாரம்பரியமிக்க இந்தியக் குடும்பங்களில் வளர்ந்தவர்களுக்கு அன்பை பற்றிய யோசனையே எழுவதில்லை. அன்பு ஒரு மனிதன் வாழ்வதற்கான ஒரு இனிமையான வழி. அது நல்ல வழி, அற்புதமான வழியும் கூட எனக் கூறும் அதேசமயம் அதனை நாம் இதற்குமேல் மிகைப்படுத்துதல் கூடாது.

சேகர் கபூர்: சத்குரு, பங்கேற்பாளர் ஒருவர் உங்களிடம் ஒரு கேள்வி கேட்டுள்ளார். ஆன்மீகத்தை எப்பொழுதுமே தீவிரத்தோடுதான் அறிந்துக்கொள்ள வேண்டும். நான் என் செயல்களில் தீவிரமாகவே ஈடுபடுகிறேன். ஆனால் இந்தத் தீவிரம் என்னை ஆன்மீகத்தை நோக்கி இட்டுச் செல்லுமா? அல்லது என் அகங்காரத்தை வளர்க்குமா? என்பது எனக்கு தெரியவில்லை. என் தீவிரமான செயல்கள் தவறானதா என்பதை எப்படி அறிவது?

சத்குரு: உங்கள் தன்மையைத் தீவிரப்படுத்தாமல் உங்கள் செயல்களை மட்டும் தீவிரத்தோடு செய்து வந்தால், செய்வதை அறிவற்ற நிலையில் செய்யத் தொடங்கிவிடுவீர்கள் அல்லது உங்களை முழுவதுமாக களைப்படையச் செய்து இளைத்துப் போவீர்கள். உங்கள் தன்மையை முழுமையாக தீவிரப்படுத்திக் கொண்டால், வாழ்க்கை முறையில் நீங்கள் எதைச் செய்தாலும் தீவிரமும் அதேநேரத்தில் உங்களுக்குள் ஒரு இலகுவான தன்மை இருப்பதையும் உணரமுடியும். இந்த இலகுவான தன்மை இல்லாமல் உங்களுக்குள் தீவிரம் வருமானால் உங்களை நீங்களே முழுவதுமாக எரித்துக் கொள்வீர்கள்.

பங்கேற்பாளர்: இந்தக் கேள்வி சேகர் கபூருக்கானது. நீங்கள் சத்குருவைப் பற்றி ஒரு திரைப்படம் இயக்குவீர்களா?

சேகர் கபூர்: நான் கண்டிப்பாக இயக்குவேன். ஆனால் என்னுடன் இங்கு அமர்ந்திருக்கும் ஒருவர் (சத்குருவை நோக்கி) அந்த திரைப்படத்தில் மையப் பொருளாக இருக்க ஒத்துக்கொள்ள வேண்டும் (சத்குரு சிரிக்கிறார்). மேலும் அதை எப்படி முடிப்பது, எங்கு முடிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. யாராவது ஒருவர் இந்தக் திரைப்படத்தின் கடைசி பகுதியை எழுதினால் நான் இயக்குகிறேன். நான் கண்டிப்பாக இயக்குவேன் என உறுதி அளிக்கிறேன். ஆனால் உங்களால் இப்போதைக்கு அந்தக் கதையின் இறுதிக் கட்டத்தை எழுதமுடியாது. (சத்குரு சிரிக்கிறார்).

சேகர் கபூர்: சத்குரு ஒரு புதிய கேள்வி உங்களுக்கு - நம் நாட்டில் பல குருமார்கள் உள்ளனர். பல வழிமுறைகள் உள்ளன. பல பேர் பின்பற்றுகின்றனர். ஆனால் வெகுசிலரே தன்னை உணர்ந்தவர்களாக உள்ளனர். இது ஏன்?

சத்குரு: நான் இதில் உடன்படவில்லை. அதாவது இங்கே அத்தனை குருமார்கள் இல்லை, பண்டிதர்கள்தான் அதிகமாக உள்ளார்கள். ஆசிரியர்கள், பாசாங்கு செய்பவர்கள், இவர்கள்தான் உள்ளனர். உண்மையில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே குருமார்கள் உள்ளனர். தன்னைப் பற்றியே ஏதும் அறியாதவர்கூட பகவத்கீதையின் ஒரு பாகத்தை படித்துவிட்டு தான் ஒரு குரு எனக் கூறிக்கொள்கிறார். கேள்வியின் இரண்டாவது பகுதியான தன்னையுணர்ந்த மனிதர்கள் குறைவாகத்தான் உள்ளனரா? இல்லை. அவர்கள் மிகுந்த அளவில் உள்ளனர். ஆனால் அவர்கள் நான் என்னை உணர்ந்தவன் என பிரகடனப்படுத்திக் கொள்வதில்லை.

நிறைவடைகிறது!


ஆனந்தஅலை.காம் வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுவந்த 'சத்குருவுடன் சேகர்கபூர் தொடர்' இந்த வாரத்துடன் நிறைவடைகிறது. அடுத்த வாரம் முதல் புதிய தொடர் துவங்கவிருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்!