'புரட்சி' என்றால், இன்று பலர் வன்முறை, கல்வீச்சு, அடிதடி என தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர். வழக்கமாக செய்துவரும் அர்த்தமற்ற பழக்கங்களை புரட்டிப்போடும் விதமாக ஒருவர் மேற்கொள்ளும் புது முயற்சியே உண்மையான புரட்சி. அந்த வகையில், சத்குரு ஒரு புரட்சியாளரா? அவரிடமே கேட்போம்!


Question: ஆன்மீகத்தில் கிளர்ச்சியாளர் என்று உங்களைச் சொல்கிறார்களே?

சத்குரு:

ஆன்மீக வளர்ச்சி என்பது வாழ்க்கையை எதிர்க்கும் கிளர்ச்சியல்ல. சொல்லப் போனால், வாழ்க்கையின் இலயத்தோடு இசைந்துப் போகாத முறைகளால் ஆன்மீக முன்னேற்றத்துக்கு வழியே இல்லை.

பழகிப்போன சில செயல்களிலிருந்து விடுபட முடியாதவர்கள் என் செயல்களைக் கண்டு புரட்சி செய்வதாகவும் கிளர்ச்சி செய்வதாகவும் நினைக்கிறார்கள். எல்லா மனிதர்களும் தவழ்ந்து நகர்கையில், ஒரு மனிதன் எழுந்து நின்றால், அவன் புத்திசாலியா, புரட்சியாளனா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வாழ்க்கைக்கு எதிரானவனாக எந்தக் கிளர்ச்சி செய்யவும் எனக்கு விருப்பமில்லை. வாழ்க்கையோடு முழுமையாக இசைந்து செல்லும் எனக்கு எதையும் எதிர்க்கும் அவசியம் இல்லை.

பார்வையில்லாத சிலர் தொட்டுத் தடவி யானையைப் புரிந்து கொள்ள முயற்சிப்பது போல் ஏதோ ஒரு பகுதியை மட்டும் பார்த்து என் செயல்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்பவர்கள் எனக்குக் கொடுத்திருக்கும் பட்டமே கிளர்ச்சியாளன். பழமையை உடைக்கிறேன் என்பது என் மீதான குற்றச்சாட்டானால்... ஆம், முன்னேற்றத்துக்காக தடைகளைத் தகர்க்கிறேன்.

Question: மக்களுக்கு சேவை செய்ய எது சிறந்த வழி?

சத்குரு:

மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்றால், உங்களுக்குள் எப்படியிருந்தாக வேண்டும் என்பதை முதலில் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். வெளிச்சூழ்நிலையில் எந்த மாற்றம் நிகழ்ந்தாலும் அதனால் பாதிப்படையாமல், உங்களுக்குள் அமைதியும் ஆனந்தமுமாக இருப்பது எப்படி என்று அறிந்திருந்தீர்கள் என்றால், நீங்கள் பிறருக்குச் சேவை செய்யும் தகுதி பெற்றிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

நீங்கள் முழுமையாக ஆனந்தமாயிருந்தால், உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்குத் தேவையானதை உங்கள் திறமைக்கேற்றபடி தானாகவே செய்வீர்கள். சேவை செய்யலாமா வேண்டாமா என்ற கேள்வியே எழாது. ஓர் ஆனந்தமான நபராக உங்களை அளிப்பதைவிட உலகுக்கு வேறு சிறப்பான பரிசு என்ன உங்களால் தந்துவிட முடியும்?

Question: சமாதி நிலை அடைந்த பல ஞானிகளிடம் கூட தீட்சை பெற்றிருக்கிறேன். ஆனால் பலனேதும் இல்லை. அதையெல்லாம் ஒதுக்கி விட்டு ஈஷாவில் சேர்ந்தால் பலன் கிடைக்குமா?

சத்குரு:

நிச்சயமாக. பல ஞானிகளைச் சந்தித்தும் அவர்களிடமிருந்து உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்பது அவர்கள் தவறல்ல, உங்கள் குறைபாடு. அது உங்களுக்குத் தான் அவமானம். அவர்கள் வழங்கிய உன்னதங்களை அனுபவிக்கத் திறனின்றி, அவர்களுடைய இடங்களுக்கு நீங்கள் உணர்வற்ற பாறை போன்று போய் வந்திருக்கிறீர்கள் என்று புரிகிறது. ஈஷாவுக்கு வாருங்கள். உங்களைப் போன்ற பாறைகளைத் துளைப்பதற்கும் உரிய முறைகள் வைத்திருக்கிறோம்.