ஜான்சன் - எதேர்ச்சயாக ஒரு செய்தித்தாளைப் புரட்டப்போய் அவருக்குள் நிகழ்ந்த அதிசயத்தையும், அதனால் அவர் வாழ்வில் ஏற்பட்ட வியப்பூட்டும் மாற்றங்களையும் நம்முடன் பகிர்கிறார். தன் இரயில் அனுபவம் வாழ்வின் போக்கையே மாற்றியதையும் இங்கு மனம் திறக்கிறார்...

ஜான்சன்,சாந்தா:

2004ஆம் வருடம். பிப்ரவரி மாதம். எனது இறை வாழ்க்கைக்கு ஒரு சிறந்த வழிகாட்டி இருந்தால் நன்றாக இருக்குமே என மனம் ஏங்கித் தவித்த நேரம் அது. இத்தனைக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல் தெளிந்த ஓடையாக வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. கிறிஸ்தவ மத பாரம்பரியத்தில் வந்த எனக்கு, குரு என்கிற தன்மையே கேள்விப்படாத விஷயம். நான் ஒரு குருவைத் தேடுகிறேன் என்பது கூட பின்புதான் எனக்குப் புரிந்தது. ஏறக்குறைய 1 மாதம் இப்படியே நகர்ந்தது.

அற்புதமான காரியங்கள் அனுபவரீதியாக உயர்வாக தெரிந்தாலும் இறைத்தன்மை என்பது அதையும் கடந்து போக வேண்டிய விஷயம் என்பதை எங்களுக்கு அவர் உணர்த்தினார்.

ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் ஒரு நாள் காலை தினசரித் தாளை புரட்டும்போது உள்ளே இருந்த ஈஷா யோகா வகுப்பு பற்றிய மடலைப் படிக்க நேர்ந்தது. எனக்குள் அரித்துக் கொண்டிருந்த கேள்விக்கு பதில் கிடைத்தது போல ஒரு நிம்மதி ஏற்பட்டது. அறிமுக வகுப்புக்கு போனேன். அதை தொடர்ந்து 13 நாள் வகுப்பை முடித்தேன். இப்போது அடுத்த பிரச்சனை ஆரம்பம் ஆனது. எனக்குள் இப்படி ஒரு உயர்ந்த தன்மையை உணர வைத்த சத்குருவை நேரடியாய் பார்க்க வேண்டும் என்கிற ஏக்கமே அது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கோயம்புத்தூர் அந்த சமயத்தில் எனக்கு புதிய இடம். எனக்குள் எப்போதுமே இருக்கும் தயக்கம் வேறு. இருந்தாலும் அவரைப் பார்த்தே தீரவேண்டும் என்கிற ஏக்கம் ஒருபுறம். அலுவலக வேலையாக தர்மபுரி செல்வதாக வீட்டில் கூறிக்கொண்டு கோயம்புத்தூர் போனேன். எனது மனைவி ஈஷாவை பற்றி அறியாத சமயமது. ஒரு கால் டாக்ஸி டிரைவர் உதவியுடன் ஈஷா யோகா மையம் அடைந்தேன். ஏதோ போனவுடன் குருவை பார்த்து விடலாம் என்கிற எண்ணம்.

sharing, Sadhguru, isha, yoga, meditation, kriya

ஜான்சன் - சாந்தா

போனவுடன் தியானலிங்கத்தைப் பற்றி தன்னார்வத் தொண்டர்கள் அளித்த விவரங்களைக் கேட்ட பிறகு தியானலிங்கம் கோவிலுக்குள் நுழைந்தேன். தியானலிங்கத்தில் எனக்கு கிடைத்த அனுபவங்கள் மிகவும் மலைப்பாக இருந்தது. இத்தனைக்கும் ஏற்கனவே சத்குருவின் mystics musings புத்தகம் மூலமாக தியானலிங்கம் பற்றிய செய்திகளை அறிந்திருந்தேன். ஆனால் ஆசிரமத்தின் வேறு எந்த பகுதிக்கும் போக வாய்ப்பு கிடைக்காததால் அங்கிருந்து திரும்பினேன். இருந்தாலும் உள்ளுக்குள்ளே என் குருவை பார்க்க முடியவில்லை என்கிற ஏக்கம் என்னை வாட்டியது.

சென்னைக்கு நான் திரும்பி செல்ல வேண்டிய ரயில் எனக்கு இரவு 10.30 மணிக்குதான். இருந்தாலும் புதிய இடம் என்பதால் மாலை 6 மணிக்கே ரயில் நிலையம் வந்துவிட்டேன். சென்னை செல்லும் ரயில் புறப்படும் நடைமேடை பற்றி விசாரித்து அங்கே இருந்த ஒரு நீளமான இருக்கையில் அமர்ந்து கொண்டேன். எனக்குள் குருவை காணாத ஏக்கம் அதிகமாகிக்கொண்டே போனது. என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வழிந்தது. சிறிது நேரம் கடந்தது.

இப்போது எனது வலது பக்கம் அசைவு தெரிய திரும்பி பார்த்தேன். பின் பக்கம் சிறிது தொங்கினார் போல தலையில் டர்பன் கட்டி, இடுப்பில் கட்டிய வேஷ்டியுடன், மேலாடை இல்லாமல் நீளமான தாடியோடு அச்செடுத்தது போல அப்படியே சத்குரு சாயலில் ஒரு நபர் என்னருகே அமர்ந்தார். பார்த்ததும் எனக்கு தூக்கிவாரி போட்டதுபோல் இருந்தது. இது என்ன அற்புதமா, மந்திரமா, மாயமா என எதுவும் தெரியாத குழப்பமான நிலையில் இருந்தேன். சந்தோஷம், அதிர்ச்சி, பயம், மலைப்பு என எல்லா உணர்வுகளும் கலந்த நிலை அது. ஏதோ ஒரு அனுபவம் காத்திருக்கிறது என்பது தெளிவாக புரிந்தது. ஏறக்குறைய முக்கால் மணி நேரம் கடந்து போனது. அந்த உருவமோ வெறுமனே என்னை பார்ப்பதும், மீண்டும் குனிந்து கொள்வதுமாக இருந்தது. என் கண்களிலோ கண்ணீர் தாரை தாரையாக வழிந்த வண்ணம் இருந்தது. பின்னர் வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் அந்த தண்டவாளத்தில் வர, அதில் ஏறி அது போய்விட்டது. நான் சுய உணர்வுக்கு வர சிறிது நேரமானது.

இப்போது கண்களை மூடி எனக்குள் என்ன நடக்கிறது என பார்க்க ஆரம்பித்தேன். என்ன ஆச்சர்யம்! இத்தனை நேரமாக எனது குருவை பார்க்க முடியவில்லையே என எனக்குள் இருந்த ஆதங்கம் இப்போது இல்லாமல் எனக்குள் தெளிவோடு இருப்பதை உணர்ந்தேன். என்னுடைய ஏக்கத்தைத் தீர்க்க என் குருவே சூட்சுமமாக வந்ததைப்போல ஒரு உணர்வு எனக்குள் உறுதியானது.

இப்போது எனக்குள் இரண்டு கேள்விகள் பிறந்தது. வந்தது வேறு ஏதோ ஒரு மனிதராய் இருக்கட்டும். ஏன் அந்த சமயத்தில் சரியாக வர வேண்டும்? இரண்டாவது கேள்வி இத்தனை நேரம் எனக்குள் இருந்த என் குருவை பார்க்க வேண்டும் என்கிற ஏக்கம் இப்போது இல்லையே, இது எப்படி சாத்தியம்?

காலம் கடந்தது. தொடர்ந்து பக்தி வழியில் நான் பலப்பட பல வாய்ப்புகள் எனக்கு அவர் மூலமாக கிடைத்தது. ஈஷாவின் அனைத்து வகுப்புகளையும் முடித்தேன். தொடர்ந்து எனது மனைவியும் வகுப்புகளை முடித்தாள். அற்புதமான காரியங்கள் அனுபவரீதியாக உயர்வாக தெரிந்தாலும் இறைத்தன்மை என்பது அதையும் கடந்து போக வேண்டிய விஷயம் என்பதை எங்களுக்கு அவர் உணர்த்தினார். அற்புதங்களில் சிக்கிக்கொள்ளாமல் அதையும் கடந்து செல்ல வேண்டிய பாதையை எனக்கு அவர் காட்டினார்.

பக்தி, கடவுள் நம்பிக்கை என்கிற பெயரில் எங்களை சுற்றி இருக்கும் மக்கள் நடத்தும் சர்க்கஸ்களில் சிக்கிக் கொள்ளாமல், எங்கள் குருவோடு தொடர்பில் இருப்பதால், குரு என்கிற விஷயம் உருவத்தை தாண்டிய விஷயம் என்பதை உணர்ந்தோம். எங்கள் வாழ்க்கை மிகவும் ஆனந்தமாக, அமைதியாக செல்கிறது. இந்த பிறவியில் எங்களுக்கு இந்த பெரும் வாய்ப்பினை வழங்கிய சத்குருவை எப்போதும் வணங்கி நமஸ்கரிக்கிறோம்.

Khem ☺ @ flickr