அன்றாட வாழ்வில் ஆரோக்கியம் - சில எளிய குறிப்புகள் - பகுதி 7

மூலிகைகள் என்றால் காட்டிலோ அல்லது எங்கோ மலைப் பிரதேசத்திலோதான் வளர வேண்டுமா? ஏன் நம் வீட்டில் வளரக் கூடாது?! ஆம்! நம் வீட்டிலேயே வளர்க்கக் கூடிய மூலிகைகள் குறித்தும் அடிக்கடி நம்மைத் தாக்கும் சாதாரண நோய்களை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் குறிப்புகளைப் படித்து அறியுங்கள்!

மூலிகைத் தோட்டம் அமைத்தல்

வீட்டுத் தோட்டத்தில் மூலிகை மற்றும் மருத்துவ குணம் வாய்ந்த செடிகளையும் நாம் வளர்க்கலாம். நீடித்து வாழும் மருத்துவ குணமுள்ள மரங்களோடு, கீழ்காணும் மூலிகைச் செடிகளையும் வளர்க்கலாம்:

துளசி: சிறந்த பூச்சி விரட்டியாகத் திகழும் இது ஜுரம், சளித் தொந்தரவு, குழந்தைகளுக்கு வரும் நோய்கள் போன்றவற்றை குணமாக்கப் பயன்படுகிறது.

கற்பூரவல்லி: இதற்கு கிருமிகளைக் கொல்லும் தன்மையும், நச்சுமுறிவுத் தன்மையும் உள்ளதால், இதை துளசி மற்றும் மிளகுடன் சேர்த்து உட்கொள்ளும்போது, சளி மற்றும் இருமல் குணமாகிறது. பல வகையான புற்றுநோய்களைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வெற்றிலை: இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்துகிறது. நரம்புத் தளர்ச்சி, தலைவலி, தொண்டை அழற்சி, தீப்புண் இவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

கற்றாழை: சிறிய புண்கள், வெட்டுக் காயங்கள், தோல் எரிச்சல் இவற்றுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுகிறது.

சாதாரண நோய்களும், அவற்றுக்கான சிகிச்சைகளும்:

மூட்டு வலி

  • வாயு உண்டாக்கும் உணவுப் பொருட்களை(உருளைக்கிழங்கு, வாழைக்காய், கொண்டக்கடலை போன்றவை)தவிர்க்க வேண்டும்.
  • உடல் எடையை குறைக்க வேண்டும்.
  • யோகப் பயிற்சிகள் செய்யலாம்.
  • பிண்ட தைலம் நல்ல மருந்து.
  • உளுந்து மாவை, வலியும் வீக்கமும் உள்ள மூட்டுக்களின் மீது போடலாம்.
  • முடக்கத்தான் கீரை, வாதநாராயணன் கீரை நல்லது.

சுவாசக் கோளாறுகள் (அலர்ஜி)

  • பஞ்ச பூதங்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.
  • கபத்தைத் தூண்டும் உணவுகளைத் (வாழைப் பழம், பால் மற்றும் பால் பொருட்கள்) தவிர்க்க வேண்டும்.
  • ஆசனப் பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சி போன்றவற்றை செய்யலாம்.
  • நல்ல காற்றோட்டமுள்ள அறையில் வசித்தல், போதுமான உடலுழைப்பு, துளசி+மிளகு, துளசி+தேன், தேன்+மிளகு மற்றும் கொள்ளு போன்றவற்றை உட் கொள்ளுதல் உதவி செய்யும்.
  • புகை பிடித்தல் கூடாது.
  • காதுகளை மூடி வைத்திருக்க வேண்டும்.
  • குளிரான காலை/மாலை வேளைகளில் தலையைப் போர்த்தி வைக்க வேண்டும்.

காய்ச்சல்

  • 300 மில்லி தண்ணீரில் 10 நிலவேம்பு இலைகள், இரண்டு துண்டு அதிமதுரம், இரண்டு துண்டு சிற்றரத்தை இவைகளை தட்டி போட்டு அடுப்பிலேற்றி 100 மில்லி ஆக வற்றவைத்து தினம் இருவேளை குடிக்கவும்.
  • அகத்தி மரப்பட்டையை கஷாயம் செய்து குடிக்க காய்ச்சல் குணமாகும்.

தலைவலி

  • சுக்கைப் பொடித்து தண்ணீருடன் கலந்து பசையாக்கி நெற்றிப் பொட்டில் பசையாகப் போடலாம்.
  • மஞ்சளைச் சுட்டு புகையை முகர தலைவலி குணமாகும்.
  • திருநீற்றுப் பச்சிலை இலையை கசக்கி முகர தலைவலி குணமாகும்.

சளி, இருமல்

  • ஆடாதோடை இலைகள் 3, துளசி இலைகள் 10, மிளகு 5 சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து 1 டம்ளராக வற்ற வைத்து ஒரு நாளைக்கு இருவேளை கொடுத்து வரலாம்.
  • நொச்சி இலைகளுடன் மஞ்சள் சேர்த்து கொதிக்கின்ற நீரிலிட்டு ஆவி பிடிக்கலாம். தொண்டைக் கட்டு இருந்தால் சூடான பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், அதிமதுரத் தூள் சேர்த்து இரவில் சாப்பிட்டு வந்தால் தொண்டைக் கட்டிற்கு இதமாய் இருக்கும்.

மலக்கட்டு

  • தினமும் 2 துண்டு பப்பாளி பழம் சாப்பிட்டு வரலாம்.
  • திரிபலா சூரணம் (கடுக்காய்+ நெல்லிக்காய்+தான்றிக்காய் சம அளவு) 2 கிராம் அளவு இரவு இளம் சூடான நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலம் சிக்கலில்லாமல் கழியும்.

அன்றாட வாழ்வில் ஆரோக்கியம் தொடரின் பிற பதிவுகள்

அடுத்த வாரம்...

வயிறு சம்பந்தமான பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கான ஆரோக்கிய குறிப்புகளும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு ஆலோசனைகளும் காத்திருக்கின்றன.