சாமியாடுவது நரம்புத் தளர்ச்சியா?

Samiyaduthal1

அம்மன் கோவிலில் சாமி ஆடியவர்களை கையெடுத்து கும்பிட்டு வழிபட்டது ஒருகாலம். ஆனால் இதுபோன்ற உணர்வுகள் நம் அனுபவத்தில் இல்லாததால், இவற்றை வெறும் நடிப்பு, நரம்புத்தளர்ச்சி என்றெல்லாம் முத்திரைக் குத்தத் துவங்கிவிட்டோம். உண்மையில் அவரை சாமி ஆட்டுவிக்கிறதா அல்லது நம்மை அவர் நடிப்பால் ஆட்டுவிக்கிறாரா? தொடர்ந்து படியுங்கள்…


கேள்வி
சத்குரு, மாரியம்மன் கோவில் திருவிழாவில் சிலர் சாமி வந்து ஆடுவதைப் பார்த்திருக்கிறேன். நரம்புக் கோளாறு என்று நினைத்திருந்தேன். ஆனால் யோகாவில் சேர்ந்த பிறகு எனக்கும் சில நேரங்களில் உடல் ஆடுகிறது. எனவே இதுபற்றி விளக்குங்கள்.

சத்குரு:

நம் கலாச்சாரத்தில் கோவில் திருவிழாக்களில் பல நூறு ஆண்டுகளாக இப்படி நடந்துகொண்டு இருக்கிறது. உங்கள் நவீன கல்வி அரைகுறையானது. அதனால்தான் எளிதில் இந்த மாதிரி ஓர் அவசர முடிவுக்கு வருகிறீர்கள். தெரியாத விஷயத்தில் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வரக் கூடாது. கோவிலில் ஆடுபவனுக்குள் என்ன நிகழ்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அவனுக்கு நரம்புக் கோளாறு பிரச்னை என்றால், மறுபடி மறுபடி கோவிலுக்குச் செல்ல விரும்புவானா? அவனுக்கு ஆடும்போது ஏதோ ஒரு சுகமான உணர்வு ஏற்படுவதால்தானே அங்கே போகிறான்.

நரம்பு மண்டலம் அவ்வளவு துன்பம் தருகிறது என்று உணர்ந்தால், மாரியம்மன் கோவிலிலே போய் அவனால் உட்கார முடியுமா? ஆயிரம் வருடங்களாக நடந்து கொண்டு இருக்கிற விஷயம் இது. வாழ்க்கையில் நாம் உணராமல் இருப்பது குறித்து எப்போதும் முடிவெடுக்கக் கூடாது. திறந்த மனதோடு இருக்கும்போதுதான் எதையும் புரிந்துகொள்ள முடியும்.

ஆயிரம் வருடங்களாக நடந்து கொண்டு இருக்கிற விஷயம் இது. வாழ்க்கையில் நாம் உணராமல் இருப்பது குறித்து எப்போதும் முடிவெடுக்கக் கூடாது.
இப்போது உங்களுக்கே அது நடக்கிறது. உங்களையும் தாண்டி ஏதோ ஒன்று நடப்பது இப்போது உங்களுக்குப் புரிகிறது. இப்போது உங்கள் அனுபவத்தில் வெறுமனே உடல், மனம் இரண்டு மட்டும்தான் இருக்கின்றன. இரண்டுமே வெளியில் இருந்து சேகரித்தவைதானே? இவற்றைத் தாண்டி உள்ளே இருக்கின்ற ஒரு தன்மையைக்கூட, அவன் சப்தம் செய்யும்போதுதான் கவனம் கொடுக்கிறீர்கள். இல்லையென்றால், இவ்வளவு மகத்தான படைத்தலைச் செய்தவனைக் கவனிக்கவே மாட்டீர்கள். தியானம் செய்யும்போது மட்டுமல்ல. எப்போதுமே உள்ளே ஆட்டம் நடந்துகொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் கவனம் எங்கேயும் செல்லாமல் அவன் மீதே நிலைத்திருக்கும்.

படைத்தலுக்கு மூலமாக இருக்கின்ற ஒரு தன்மை நமக்குள் ஒவ்வொரு கணமும் துடித்துக்கொண்டு இருந்தாலும் அவன் சிறிது ஆர்ப்பாட்டம் செய்தால்தான் உள்நோக்கிய கவனம் வருகிறது. முழுமையாக ஆர்ப்பாட்டம் செய்ய வைத்துவிட்டால் அவனைக் கவனிக்காமல் இருக்கவே முடியாது. எனக்குள்ளே எப்போதுமே அவனின் தாண்டவம்தான். எப்போதுமே நெருப்பு எரிவதுபோல எரிகிறான். ஒரு கணம்கூட அவனைக் கவனிக்காமல் என்னால் இருக்க முடியவில்லை.

இப்போது இந்த யோகா செய்வது அமைதிக்காக அல்ல. அமைதியினால் நமக்கு பயன் ஏதும் இல்லை. ஆனந்தமாக எரிமலைபோன்று உங்களுடைய உயிர் முழுமையாக எரிய வேண்டும். முழுமையான வீச்சில் துடிக்க வேண்டும். உங்களுக்கு இப்போது உள்ளே உடல் தாண்டி ஏதோ ஒன்று சிறிது துடிப்பது நல்ல விஷயம்தானே தவிர, நரம்புத் தளர்ச்சி ஒன்றும் இல்லை. ஏனென்றால், நரம்பு மண்டலத்துக்கும், இதற்கும் சம்பந்தமே இல்லை.

வாழ்க்கையில் உங்களுக்குப் புரியாதது மிக அதிகமாக உள்ளது என்பதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்!
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert