ஒருபுறம், "சாதிகள் இல்லா சமூகம் அமைப்போம்" என்ற கூக்குரல்கள், மறுபுறம் குழந்தைகளை LKG யில் சேர்க்கப் போனாலே சாதிச் சான்றிதழ் கேட்கும் அதிகாரிகள். இதைப் பார்த்தால், "சாதிகள் இல்லையடி பாப்பா!" என்ற பாரதியின் பாட்டு, குழந்தைகளுக்கு மட்டும்தான் போலும் என்றே எண்ணத் தோன்றுகிறது. இந்த சாதி உருவானது எப்படி என்பதைப் பற்றின சத்குருவின் விளக்கம் இக்கட்டுரையில்...

சத்குரு:

இந்தியாவில் சாதி அமைப்பு என்பது, எந்த குறிப்பிட்ட தொழிலுக்கான முறையான பயிற்சி மையங்களும் இல்லாதபோது உருவான ஓரு விஷயம். எந்த பயிற்சி மையங்களும் இல்லாதபோது, குடும்பத்தில் பயிற்சியளிப்பது ஒன்றே வழி. அதனால், கொல்லர் கலாச்சாரம், பொற்கொல்லர் கலாச்சாரம் என்றெல்லாம் இருந்தது. ஏன், ஒரு செருப்பு தைப்பவருக்கு கூட அவர் கலாச்சாரத்தை பராமரிப்பது மிகவும் முக்கியமானதாக இருந்தது; இல்லாவிட்டால், கைத்திறன் இல்லாமலே போயிருக்கும்.

உங்கள் தந்தை ஒரு கொல்லராக இருந்திருந்தால், 6 வயதில் நீங்கள் சுத்தியலை பிடித்து, பட்டறையைச் சுற்றி விளையாடி இருப்பீர்கள். 8 வயது இருக்கும்போது எப்படியும் சுத்தியைக் கொண்டு அடித்து விளையாடத் துவங்கிவிடுவீர்கள். "சரி, எப்படியோ அடித்து விளையாடுகிறான் பிள்ளை, அதை சிறிது உபயோகமாக பழகுவது சிறப்பாக இருக்குமே," என்று உங்கள் தந்தை ஆயுதத்தை பயன்படுத்த பழக்கியிருப்பார். 12 வயதை அடைந்தவுடன், ஏதோ ஓரளவுக்கு வேலை பிடிபட்டிருக்கும். 18 அல்லது 20 வயது அடைந்தவுடன், சொந்தமாக வாழ்க்கை வாழ, கைத்தொழிலும், அதில் நிபுணத்துவமும் உங்கள் கைவசம் இருந்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எனவே, உங்கள் தந்தை ஒரு கொல்லராக இருந்ததால், நீங்களும் ஒரு கொல்லராக இருந்தீர்கள்; உங்கள் தந்தை ஒரு பொற்கொல்லர், நீங்களும் ஒரு பொற்கொல்லராகவே இருந்தீர்கள். அன்று ஒவ்வொரு தொழிலுக்கும் குடும்பத்திலேயே பயிற்சி மையங்கள் இருந்தன. சமூகத்தில், இந்த கட்டமைப்பின் மூலமாக மட்டுமே தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு, அனைத்து கைத்தொழில்களும் திறமைகளும் உருவாக்கப்பட்டன.

நீங்கள் ஒரு கொல்லர் என்றால், நீங்கள் தச்சருடைய வேலையை போய் முயற்சி செய்ய வேண்டாம், நீங்கள் ஒரு கொல்லரின் வேலையை மட்டும் செய்வீர்கள். சமூகத்தில் கொல்லரின் தேவை இருக்கத்தானே செய்கிறது? எண்ணிக்கைப் பெருகி, ஆயிரம் கொல்லர்களாக அவர்கள் விரிவடையும்போது, இயல்பாகவே அவர்கள் சாப்பிடுவது, திருமணம் என அனைத்து விஷயங்களைச் செய்யவும் தங்கள் சொந்த வழியை பின்பற்றியதால் அவர்கள் ஒரு சாதியை உருவாக்கினார்கள்.

ஒரு நிலையில் பார்த்தால், உண்மையில் அதில் எந்தத் தவறும் இல்லை. இது வெறும் சமுதாயத்தின் வசதிக்கான ஏற்பாடாக இருந்தது. ஒரு கொல்லருக்கும் ஒரு தச்சருக்கும் இடையே அவர்களின் வேலை, அவர்கள் பயன்படுத்த சுத்தியின் வகை, அவர்களின் தோற்றம், உணவுப் பழக்கங்கள் என அனைத்து விஷயங்களும் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. ஏனெனில், அவர்கள் பணியின் தன்மை மிகவும் மாறுபட்டிருந்தது.

ஒரு காலகட்டத்திற்கு பிறகுதான் அது சுரண்டலுக்கான ஒரு வழியாக மாறியது. கோவிலை பராமரிப்பவரை விட பள்ளியை நடத்துபவரே மேலானவர். பள்ளியை நடத்துபவர், கொல்லப்பட்டறை வைத்திருப்பவரை விட மேலானவர் என்று நாம் சொல்லத் தொடங்கிவிட்டோம்.

சமுதாயத்தில் உள்ள இந்த வேறுபாடுகளுக்கு அனைவரும் ஏதாவது செய்ய வேண்டும். ஆனால் முறையாக ஒரு காலகட்டத்திற்கு பிறகு நாம் வேறுபாடுகளை பாகுபாடாக பார்க்கத் துவங்கினோம். வேறுபாடுகள் இருப்பது நல்லதுதான். உலகம் வித்தியாசமாகத்தான் இருக்கும். ஆனால் இனம், மதம் அல்லது பாலினம் என்று நாம் ஒவ்வொரு வித்தியாசத்தையும் பாகுபாடாக மாற்ற முயற்சிக்கிறோம்.

நாம் வேறுபாடுகளை மட்டும் பராமரித்து இருந்தால் நமக்கு ஒரு நல்ல வண்ணமயமான கலாச்சாரம் இருந்திருக்கும். ஆனால் நாம் நம்முடைய அறிவை இழந்து எல்லாவற்றையும் பாரபட்சமாக மாற்ற தொடங்கிய போதுதான், சாதி அமைப்பு ஒரு அசிங்கமான முறையாக மாறியது. ஒரு சமூகத்தில் திறன்களை வளர்க்க மிகவும் பொருத்தமான வழியாக இருந்த ஒன்று, துரதிர்ஷ்டவசமாக, பாரபட்சமான ஆக்கமற்ற எதிர்மறை விஷயமாக மாறிவிட்டது.

ஒவ்வொரு மனிதனும் அவன் தான் இருக்கும் நிலையை விட, சிறப்பாக இருக்க வேண்டுமென ஏங்குகிறான். அதைச் செய்ய சிறந்த வழி, தனக்கு அருகில் இருக்கும் மனிதனை தரம் தாழ்த்துவதே! உண்மையில் இவரது ஆசையே, வாழ்க்கையின் சுவையை பிரம்மாண்டமாய் உணர்வதுதான், ஆனால் தன்னை மேம்படுத்திக் கொள்ள வழிதெரியவில்லை, வேறென்ன செய்வது? இன்னொருவரை மட்டம் தட்டுவது தானே? இது ஒரு பக்குவம் பெறாத மனதின் அடையாளம். பலகாலமாக இப்படியே வாழ்ந்து பழகிவிட்ட நாம் இன்றும் அதே முறையையே பயன்படுத்துகிறோம்.

இதை மாற்றி அமைப்பதற்கான நேரம் வந்துவிட்டது. பழைய சாதி முறைகளை தோலுரிப்பதன் மூலம் எல்லாம் மாறிவிடப் போவதில்லை; சாதியத்தால் தன்னை பல ஆயிரம் வழிகளில் நிலைநிறுத்திக் கொள்ள முடியும். உதாரணமாக, நியூயார்க்கில் எந்த சாதி முறையும் இல்லை என்று நினைக்கிறீர்களா? கல்வி, பொருளாதார திறன்களின் அடிப்படையில், வித்தியாசமான சாதி முறை அங்கேயும் உள்ளது! பாரபட்ச மனம் கொண்ட பல்வேறு குழுக்களை இவை உருவாக்கும். மனித மனதில் மகத்தான மாற்றம் ஏற்படுத்தினாலே ஒழிய இந்த நிலை மாறப் போவதில்லை.

தனிப்பட்ட மனிதர்கள், தங்களின் உள்ளார்ந்த ஒற்றுமையை உணராதவரை எந்தவொரு ஒற்றுமையை ஏற்படுத்தும் அமைப்புகளும், நடவடிக்கைகளும் அர்த்தமற்றவைதான். தனிநபர்கள், தங்களின் உள்ளார்ந்த ஒற்றுமையை அனுபவிக்கவில்லை என்றால், அவர்களின் முயற்சிகள் அனைத்தும் மிகவும் பாரபட்சமான செயல்முறைகளை உருவாக்குவதில் முடிவடையும்.

ஆன்மீகத்தின் அடிப்படை அம்சமே, அனைத்தையும் இணைத்துக் கொள்பவனாக ஒரு மனிதனை உருவாக்குவதுதான். அதே நேரத்தில் ஒருவரை, அதிக பயனுள்ளவராகவும், திறனுடையவராகவும், இன்னும் சமநிலையானவராகவும், அதிக உற்பத்தி திறன் மிக்கவராகவும் மாற்ற அது ஆயத்தப்படுத்துகிறது.

alles-schlumpf @ Flickr