சத்குருவுடன் காசி யாத்திரை மேற்கொண்ட திருமதி. மஹேஷ்வரி (பாரா மெடிக்கல் கல்லூரி விரிவுரையாளர்) அவர்கள் பயணக் கட்டுரையாக எழுதியுள்ள யாத்திரை அனுபவங்களை, திங்கள்தோறும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறோம்.

காசி என்றாலே வாழ்ந்து முடித்தவர்களுக்கான இடம் என்ற எண்ணம் உண்டு. அதை மாற்றும் விதமாக அமைந்துள்ள இந்தப் பயணக்கட்டுரை காசியின் தெருக்களையும், கோவில்களையும் நம் கண் முன் நிறுத்துகிறது. ரயில் பயணம் தொடங்கி 'மணிகர்ணிகா காட்' என்னும் இடத்தில் பிணங்கள் எரிவது வரை, தான் காசியில் கண்ட அத்தனை காட்சிகளையும் நாம் வாழ்ந்து பார்க்கும் வண்ணம் வர்ணிக்கிறார் மஹேஷ்வரி.

காசி - உண்மையைத் தேடி... பகுதி 1

மஹேஷ்வரி:

ஈஷா புனித பயணத்தின் ஒரு பகுதியான வாரணாசி பயணத்திற்கு சத்குரு வருவார் என்று சொன்னதும் உடனடியாக என் பெயரை பதிவு செய்து கொண்டேன். "காசி" என்ற வார்த்தையே என்னுள் ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்தியது.

சீன தேசத்தில் இருந்து வந்த யுவான் சுவாங் முதல் ஜெர்மனியிலிருந்து வந்த மாக்ஸ் முல்லர் வரை காசியைப் பற்றி பிரம்மிப்புடன் பேசியிருக்கிறார்கள். பல ஞானிகளையும் யோகிகளையும் மட்டுமல்லாமல், பல அறிஞர்களையும் கவிஞர்களையும் தன் வசம் ஈர்க்கும் இந்தக் காசியில் அப்படி என்னதான் இருக்கிறது?

இதுபோன்ற பல விஷயங்கள் என்னைக் காசியை நோக்கி ஈர்த்தது. காசிக்கு போகிறேன் என்று சொன்னதும் அனைவரும், "காசிக்கா போற? இந்த வயசிலயா?" என்று கேட்டு கிண்டலாக சிரித்தனர். ஆனால் சத்குருவின் அருளினால்தான் எனக்கு இந்தப் பாக்கியம் கிடைத்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கடந்த ஆண்டு செம்டம்பர் 14ம் தேதி இந்த புனிதப் பயணம் துவங்கியது. இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் 440 ஈஷா தியான அன்பர்கள் இதில் கலந்து கொண்டனர். எங்கள் குழு சென்னையிலிருந்து புறப்பட்டது. கிட்டதட்ட இரண்டு நாட்கள் ரயிலில் பயணம்! எப்படி இந்த இரண்டு நாட்கள் நகரப் போகிறது என்பது என்னுள் பெரிய கேள்வியாக இருந்தது. ஆனால் ஈஷா தியான அன்பர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்தால் அங்கே மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்திற்கும் கேட்கவா வேண்டும்?Sacred walks என்றால் முதலில் நடக்க வேண்டும் அல்லவா? ரயிலில் முதல் பெட்டியிலிருந்து கடைசி பெட்டி வரை ஒரு சுற்று வந்தேன். புத்தகத்தின் பக்கங்களுக்குள் காணாமல் போன முகங்களும் மொபைல் போனிற்குள் தொலைந்து போன செவிகளும், மடிக்கணினியின் முன்னே மணித்துளிகளைப் போக்கும் சோகமான முகங்களும் பார்ப்பதற்கு பாவமாகவே இருந்தது.

இதற்கு நடுவில் நம் ஈஷா அன்பர்கள் மட்டும் அரட்டையும் சிரிப்பும் பாட்டும் விளையாட்டுமாய் பயணம் செய்தது, ரயிலிலிருந்த சக பயணிகளின் கவனத்தை ஈர்த்தது. "இத்தனை அமர்க்களம் செய்யும் இவர்கள், காலையில் எழுந்து அமைதியாக தியானம் செய்வது, குப்பைகளை தூக்கிப் போடாமல் சுத்தமாக வைத்திருப்பது என வித்தியாசமாக நடந்து கொள்கின்றனரே!" என்ற ஆச்சர்யத்துடன் சிலர் "நீங்களெல்லாம் எங்கிருந்து வருகிறீர்கள்? இது என்ன யோகா?" என்று கேட்டனர்.

முதல் நாள்...

ரயில் கொஞ்சம் தாமதமாக சென்று சேர்ந்தபோதும் 'எப்படா ஸ்டேஷன் வரும்' என்று சன்னலுக்குள் தலையை விட்டுக் கொண்டு புலம்பிக் கொண்டிருக்காமல் ஒவ்வொரு நொடியையும் கொண்டாட்டமாக்கி காசிக்கு வந்து சேர்ந்தோம். முதலில் 'முகல் சாராய்' என்ற ரயில் நிலையத்தில் இறங்கினோம். அங்கிருந்து காசிக்கு பஸ் மூலம் செல்ல வேண்டும்.

ரயில் நிலையத்திற்கு வெளியே தயாராக பேருந்துகள் நின்று கொண்டிருந்தன. ரயிலை விட்டு இறங்கியதும் சில்லென்ற சிறு தூறல்! மிதமான குளிர்! காசி எங்களை அன்போடு வரவேற்றது. இங்கிருந்து நாங்கள் தங்கப் போகும் ஹோட்டலுக்கு சுமார் 40 நிமிடம் பயணம் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். மூடிய கண்ணாடி சன்னல் வழியே நான் மழையை ரசித்துக் கொண்டே சென்றேன்.

வீட்டிற்கு வெளியே கட்டப்பட்டிருக்கும் மாடுகள், இயற்கையை பெரிதும் பாதிக்காத வீடுகளின் அமைப்பு, மிகக் குறுகிய சாலை, ஆங்காங்கே கண்களில் தென்படும் ரிக்ஷா வண்டிகள் என்று காசி நமக்கு பல நூற்றாண்டு பழமையை நினைவில் கொண்டு வந்தது. அப்போது ஸ்வாமி ஒரு குறுகிய சாலையை காட்டி "இதுதான் காசியிலேயே அகலமான பாதை" என்று சொன்னதும் அனைவரும் சிரித்து விட்டோம். அத்தனை சிறிய சாலை அது.

காலை 9 மணிக்கு சாலை காலியாக இருந்தது. நகரத்தின் எந்த பரபரப்போ படபடப்போ இல்லாத இந்த சாலைகளில் பயணம் செய்வது மனதிற்கு மிகவும் இதமாக இருந்தது. இயந்திர வாழ்வில் சிக்கிப் போய் இருக்கும் என் போன்றவர்களுக்கு இதுபோன்ற பயணம் அடிக்கடி தேவை என்று மனதில் எண்ணிக் கொண்டே இருக்கும்போது மீண்டும் ஸ்வாமி வந்து "காசியில் தொடர்ந்து 4 நாட்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது. கங்கையில் வெள்ளம் ஓடுகிறது. யாரும் கங்கையில் குளிக்க அனுமதி இல்லை. எப்போதும் பிணங்கள் எரிக்கப்படும் 'மணிகர்ணிகா காட்' என்ற இடத்தில் கூட மழை காரணமாக பிணங்கள் எரிக்கப்படவில்லை. நாம் அங்கும் செல்ல முடியாது. கோவிலுக்கும் மட்டும் இன்று போய் வரலாம்," என்று சொன்னார்.

"இவ்வளவு தூரம் வந்துவிட்டு கங்கையில் குளிக்காமலா?" என்று பலரிடம் கேள்வி எழுந்தது. வேறு ஏதாவது குழுவுடன் சென்றிருந்தால் மக்கள் புலம்பித் தீர்த்திருப்பார்கள். ஈஷா மக்கள் என்பதால் "குரு எப்படி விடுகிறாரோ அப்படி" என்று விட்டுவிட்டு ஆனந்தமாக 'ஆம் நமச்சிவாய' உச்சாடனம் செய்து கொண்டு வந்தனர். காசி மண்ணில் 'ஆம் நமச்சிவாய' என்னும் மந்திரமே வேறு விதமாக ஒலித்தது...

(பயணிப்போம்...)

அடுத்த வாரம்...

காசி விஷ்வநாதர் முதல் காலபைரவர் வரை தான் கண்ட தரிசன அனுபவங்களை வெகுவாக விவரிக்கிறார் மஹேஷ்வரி. காசியில், சாலை நெரிசலை ஏற்படுத்திய ரிக்ஷாக்களை மட்டும் விட்டுவைத்தால் எப்படி? அடுத்த திங்கள் வரை காத்திருங்கள்...

காசி புனித பயணம்

ஒளியின் நகரம் என்றழைக்கப்படும் காசி, 15000 வருடங்கள் பழமையானது. ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு பின்பும், இன்றளவும் இந்நகரம் உயிரோட்டமாகவும், அதிர்வுமிக்கதாகவும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்த்த வண்ணம் உள்ளது. புனிதமான இந்நகரத்திற்கும், மேலும் பல்வேறு புனித ஸ்தலங்களுக்கும், ஈஷாவிலிருந்து யாத்திரை அழைத்துச் செல்வது வழக்கம்.

அவ்விதத்தில், வரும் காசி யாத்திரை நவம்பர் 21-25 தேதிகள் வரை நடக்கவுள்ளது.

மேலும் விபரங்களுக்கு: sacredwalks.org

தொ.பே: +91 9488 111 333
இ -மெயில்: tn@sacredwalks.org