இன்று மாலை நடந்த தரிசன நேரத்தில், பொதுமக்கள், தியான அன்பர்கள் மற்றும் ஆசிரமவாசிகளுடன், சத்குருவிடமிருந்து ஆசிகள் பெறுவதற்காக மாணாக்கரும் ஆசிரியர்களும் கூடியிருந்தார்கள். அவர் பேசியதிலிருந்து சில துளிகள் இங்கே உங்களுக்காக.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஈஷா வித்யா பள்ளிகளிலிருந்து இவ்வருடம் 10ஆம் வகுப்பு எழுதவிருக்கும் மாணவர்கள் பலரும், புதிதாய் ஈஷா யோகா ஆசிரியர் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் சிலரும் அவர் அருளுடன் தங்கள் வாழ்க்கையில் புதியதோர் படியை எடுக்கக் காத்திருந்தார்கள்.

மாணவர்களில் ஒருவர் சூரியனை படைத்தது யார் என்று கேட்க, சத்குரு அவரிடம் "மற்றவையெல்லாம் எங்கிருந்து தோன்றியது என்று புரிந்துவிட்டதா? இது மட்டும்தான் புரியவில்லையா?" என்று கேட்டுவிட்டு, அனைத்தையும் புரிந்துகொள்ள, அவற்றைப் பற்றிய கேள்வியை ஆழமாக்கச் சொன்னார். முட்டை வந்ததா கோழி வந்ததா என்று தெரியுமா என்று விளையாட்டாகக் கேட்டுவிட்டு, சங்கரன் பிள்ளை கதை ஒன்றை சொல்லலானார்.
சங்கரன் பிள்ளையும் அவர் நண்பர்களும் பத்தாம் வகுப்பு முடித்த பிறகு, வாழ்க்கையில் வெவ்வேறு திசைகளில் சென்றுவிட்டார்கள். பத்து வருடங்களுக்குப் பிறகு ஹோட்டலில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்து அனைவரும் கூடினார்கள். நண்பர்கள் கூடினால் சும்மாவே சுவாரஸ்யமான பேச்சிற்கு பஞ்சமில்லை. அதிலும் பத்து வருடங்களுக்குப் பிறகு சந்தித்தவர்களுக்கு பேசிக்கொள்ள ஏராளமான விஷயங்கள்.

பேச்சு வளர்ந்து விவாதமானது. முதலில் கோழி வந்ததா அல்லது முட்டை வந்ததா என்று பெரும் விவாதம் நடந்துகொண்டிருந்தது. சங்கரன் பிள்ளை மட்டும் எதிலும் கலந்துகொள்ளாமல் மேஜைக்கு வந்த chips-ஐ அசைபோட்டுக் கொண்டு இருந்தார். விவாதம் தீவிரமானதும் அவரையும் விட்டுவைக்கவில்லை. நண்பர்களில் ஒருவர், "நீ சொல், எது முதலில் வந்தது, முட்டையா கோழியா?" என்று அதட்டினார்.

சங்கரன் பிள்ளை அவரை வெறித்துப் பார்த்துவிட்டு, "நீ முதலில் எதை order செய்தாயோ அதுதான் வரும்." என்றார்.

உன் கேள்விக்கு நான் பதிலளித்துவிட்டால் பதில் தெரியுமென்ற திமிரும் செருக்கும் தான் வருமே தவிர உண்மையை உணர மாட்டாய். அதிபுத்திசாலி என்று உன்னை கருதிக்கொள்ளும் அடிமுட்டாளாக மாறிவிடுவாய். பிறர் கேள்வி கேட்கும் முன் நீயாக கேள்விகளைக் கேட்டு உன் புத்தியை கூர்மையாக்கு. அப்போது உணர்வதற்கு என்னவெல்லாம் இருக்கிறதோ அவை அனைத்தையும் உணர்வாய்.

இன்றைய தரிசனத்தில் ஒரே மூச்சில் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வழிகாட்டிச் சென்றார் சத்குரு.