நம்மவரு நம்மாழ்வார்... பகுதி 25

பூமி எப்போதும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளத் தயாராக இருக்கிறது. ஆனால் மனிதன்தான் அதற்கு அனுமதிப்பதில்லை. மனிதனின் இந்த முட்டாள்தனத்தை உணர்த்தும் விதமாக உள்ளது நம்மாழ்வாரின் இந்தக் கட்டுரை.

நம்மாழ்வார்:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

குரங்கு நிலையில் இருந்து மாறிய மனிதர்கள் நீண்ட நெடுங்காலம் இயற்கையோடு நெருக்கமாக உறவாடி இருந்தார்கள். நாடோடிகளாக இருந்தவர்கள் ஓரிடத்தில் தங்கி பயிர்த் தொழிலில் ஈடுபட்டபோது அவர்கள் இயற்கையைச் சிதைப்பது தொடங்கியது.

நிலம், உணவு, ஆரோக்கியம் இவை ஒவ்வொன்றைப் பற்றியும் பேசுவதற்கு ஆயிரக்கணக்கில் நிபுணர்கள் உண்டு. ஆனால், இவைகளுக்கிடையில் உள்ள இணைப்பைப்பற்றி சிந்திக்கின்ற ஆட்கள் குறைவாக இருக்கிறார்கள்.

ஆற்றங்கரையில் வாழ்ந்தவர்கள் கால்நடைகளையும் பராமரித்தார்கள். கால்நடைகளை நிலத்திலே படுக்க வைத்தார்கள். கால்நடைகளின் கழிவுகள் நிலத்தில் சேர்ந்தபோது, பயிர் அடிக்கடி நல்ல விளைச்சலைத் தந்தது. பயிர்களை மாற்றி மாற்றிப் பயிர் செய்யவும், பல பயிர்களைக் கலந்து பயிர் செய்யவும் கற்றார்கள்.

5,000 ஆண்டுகளாகக் கெட்டுப்போகாத மண் வளம் கடந்த 50 ஆண்டுகளாகப் பாதிப்பைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறது. விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறிக் கொள்ளும் மனிதர்கள் இயற்கை தன்னைப் புதுப்பித்துக் கொள்வதை அனுமதிப்பதாக இல்லை. பூமி விளைச்சல் இழப்பு ஏற்படும் போதெல்லாம் பூமியில் ஏதோ பற்றாக்குறை இருக்கிறது. அதை நிறைவு செய்தால் விளைச்சல் எடுக்கலாம் என்று முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்தார்கள்.

பூமி தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்வதற்கு வாய்ப்பு அளிப்பதற்குப் பதிலாக, விஞ்ஞானி பூமித்தாய்க்கு வைத்தியம் பார்க்க முயலும் போதெல்லாம் பூமித்தாயின் ஆரோக்கியம் சிதைகிறது. பூமித்தாயின் ஆரோக்கியம் குறையும்போது, முளைத்து வளரும் பயிரின் ஆரோக்கியமும் குறையும். விளைந்த பொருளை உண்ணுபவர்களுடைய ஆரோக்கியமும் சிதையும். நிலம், உணவு, ஆரோக்கியம் இவை ஒவ்வொன்றைப் பற்றியும் பேசுவதற்கு ஆயிரக்கணக்கில் நிபுணர்கள் உண்டு. ஆனால், இவைகளுக்கிடையில் உள்ள இணைப்பைப்பற்றி சிந்திக்கின்ற ஆட்கள் குறைவாக இருக்கிறார்கள்.

'நமது கண்ணுக்கு முன் உள்ள மண்ணில் விழுந்தவற்றை உண்டதால்தான் குழந்தையாக இருந்த நாம் 50 கிலோ, 60 கிலோ, 70 கிலோ எடையுள்ள மனிதர்களாக வளர்ந்து நிற்கிறோம். அப்படியானால் இந்த நிலத்தையும், நீரையும், காற்றையும் நாம் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டாமா?' இப்படி சத்குரு அடிக்கடி கேட்பதுண்டு.

எட்வர்டு ஃபால்க்னர் என்ற அமெரிக்கர் 1959-ம் ஆண்டு இது பற்றி எழுதியிருக்கிறார். அவர் அப்போதே உழுவது, நீர் பாய்ச்சுவது, ரசாயனங்கள் இடுவது அனைத்தையும் நிறுத்திவிட்டு சோதனை செய்து பார்த்தார். முதல் நான்கு ஆண்டுகளில் விளைச்சல் மன நிறைவைத் தரவில்லை. இருந்தாலும் அவர் தயக்கமில்லாது சோதனைகளைத் தொடர்ந்தார். ஐந்தாவது ஆண்டு ஒரு ஏக்கர் நிலத்தில் ஏராளமான தக்காளி விளைந்தது கண்டு ஆச்சரியப்பட்டார். அப்போது போதிய அளவு ஓய்வு கொடுத்தால் ரசாயன உப்புக்களைக் கொட்டிக் கெடுக்கப்பட்ட நிலம் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு வந்தது.

காடுகளை அழித்து தொழிற்சாலைகளும், சாலைகளும் அமைத்ததால் வானம் பொழியவில்லை. மனிதர்கள் உண்ணும் உணவும் சத்துள்ளதாக இல்லை. ஆதலால், குறைந்த எடையுடன் குழந்தை பிறக்கிறது. உடல்நிலை குறைவோடு பள்ளி செல்கிறார்கள். இவை அனைத்தும் நமக்கு உணர்த்துவது ஒன்றுதான். பூமித்தாயின் ஆரோக்கியத்தை அழித்து பூமியின் குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ முடியாது!

தொடர்ந்து விதைப்போம்...

nature, nammalvar, agriculture

இயற்கை உணவு, இயற்கையோடு இயைந்த வாழ்வு, மனிதனால் இயற்கைக்கு உண்டாகும் சீரழிவு என தன் வாழ்நாள் முழுவதையும் இயற்கை நலனிற்காவும் சமூக நலனிற்காகவும் அர்ப்பணித்தவர் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள். அவருக்கு ஒரு அர்ப்பணிப்பாக இங்கே அவரது எழுத்துக்களைப் பதிகிறோம்!