ஆந்திர முதல்வர், ஆந்திர அமைச்சரவை சத்குருவிடம் யோகா கற்க... கற்றுக் கொடுத்தவருக்கு எப்படி இருந்தது? தன் அனுபவத்தை இந்த வார சத்குரு ஸ்பாட்டில் எழுதுகிறார் சத்குரு. வியக்க வைக்கும் ஆந்திர முதல்வரது துரித முடிவுகள் கார்ப்பெரெட் தலைவர்களையும் விஞ்சுகிறது என மெய்சிலிர்க்கிறார். உருவாகிக் கொண்டிருக்கும் புதிய மாநிலம் நமது நெஞ்சத்தில் விதைத்திருக்கும் புதிய நம்பிக்கையையும் விவரிக்கிறார்...

ஆந்திர பிரதேச அரசவைக்கு 3 நாள் ஈஷா யோக வகுப்பு எடுத்து முடித்து கோவை திரும்பியிருக்கிறோம். இதுபோல், ஒரு அரசவை முழுவதும், நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் என ஒரே சமயத்தில் உள்முகமாக திரும்ப முயல்வது இந்தியாவில் மட்டுமல்ல, இந்த உலகிலேயே முதல்முறை இதுதான். நிர்வாக பொறுப்பதிகாரிகள், மந்திரிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள், மேயர்கள் என 300 பேர் தங்கள் குடும்பத்துடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதுபோன்றதொரு நிகழ்ச்சி வேறெங்கும் நிகழ்ந்ததாக எனக்கு தெரியவில்லை. மிகுந்த கேள்விகளோடும், ஐயப்பாட்டோடும் நிகழ்ச்சி தொடங்கினாலும் நிறைவு நாளில் அனைவரும் சிரித்து, பாடி, ஆடி களித்து பரிபூரண ஈடுபாட்டுடன் பங்கேற்றனர். அரசாங்கம் இப்படி ஆடிப் பாடி மகிழ்ச்சியில் திளைப்பது நல்லதே.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

முதல்வரின் வார்த்தைகளில் சொன்னால், "2029 ஆண்டில் ஆந்திர மாநிலத்தை இருப்பதிலேயே ஆனந்தமான, சிறந்த மாநிலமாக மாற்றுவதற்கான அடிப்படையாக இந்நிகழ்ச்சி இருக்கும்," என்றார். நமக்கு தற்சமயம் கிடைக்கத் துவங்கியிருக்கும் அரசியல் தலைவர்கள் தன் கடமை என விதிக்கப்பட்டிருக்கும் விஷயங்களை மட்டும் கருத்தில் கொள்ளாமல், மனிதர்களுக்கு நல்வாழ்வினை உருவாக்குவது எப்படி எனப் பார்ப்பது அற்புதமான ஒரு விஷயம். இது ஒரு மைல்கல். இந்த முயற்சி நிர்வாகத்திற்கும் மக்களுக்கும் நூறு சதவிகித பலனை வழங்குவதை நான் உறுதிப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். இது புதிதாய் பிறந்துள்ள மாநிலம் என்பதால், இங்கு அளவிலா நாட்டத்தை காண முடிகிறது.

என்னோடு இருக்கும் நீங்கள் அனைவரும் இதற்கு கை கொடுப்பீர்கள் என நினைக்கிறேன். ஆந்திர மக்களை ஏமாற்றமடையச் செய்யக்கூடாது. அவர்கள் மிகக் கடினமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள். நகரத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு, கிராமங்களுக்கு சென்றால் அவர்களது வாழ்வு பெரும்பாடாய் இருப்பதைக் காணலாம். இந்தியாவில் அபாரமான அறிவாற்றல் நிறைந்திருந்தாலும், தனக்கே உண்டான பாரம்பரியம் இருந்தாலும் நாம் வாழ்வதென்னவோ மிக மோசமான வாழ்க்கைச் சூழலில்தான். ஆப்பிரிக்காவின் ஏதோ ஒரு மூலைக்குள் சென்றாலும் அங்குள்ள குழந்தைகள் நலமாய் உண்பதைக் காணலாம். இது இந்தியாவில் நிகழ வேண்டும்.

புதிய மாநிலத்தை உருவாக்குவதில் இவர்கள் காட்டும் உறுதி, இவர்கள் கொண்டுள்ள கனவு வியப்பிற்குரியது. இவர்கள் எடுத்துள்ள இந்த முயற்சிக்காக இவர்களை நான் பாராட்ட விரும்புகிறேன். முதல்வர் அவர்கள் தீவிர உறுதியுடனும், அனைத்து விஷயங்களிலும் அத்தனை கூர்மையுடனும் இருந்ததைப் பார்த்தது இனிமையாய் இருக்கிறது. கார்ப்பரேட் தலைவர்கள் கூட இவர்போல வேகமாய், தெளிவாய் முடிவெடுத்து நான் பார்த்ததில்லை. அரசியல் தலைவர்களும், ஆட்சியாளர்களும் மக்களுக்கு ஏதோ ஒன்றைச் செய்யத் துடிப்பதை பார்ப்பது மிகுந்த ஊக்கமளிப்பதாய் இருந்தது. இதனைக் காண வேண்டுமென நான் நெடுநாளாக காத்திருந்தேன்.

மத்திய அரசிலும் முத்தாய்ப்பான மாற்றங்கள் நிகழ்வது சிறப்பு. வரும் வருடங்களில் மாற்றங்கள் நிகழும் என்பது உறுதி. கடந்த 60 வருடங்களாக சீரிய தலைமை இந்த தேசத்திற்கு கிட்டவில்லை. நமக்கு தேவைப்படுவதெல்லாம் ஒரு தலைவர் அல்ல, பல நிலைகளில் பல தலைவர்கள் தேவை. தன் நல்வாழ்வையும் கடந்து சிந்திக்கும் தலைமை தேவை.

ஆந்திர பிரதேசத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் மாநிலத்தை உருவாக்கும் ஒரு தனிப்பட்ட, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாய்ப்பிருக்கிறது. பூமியை பகுதிபகுதியாய் உடைப்பதைப் பற்றி நான் இங்கு பேசவில்லை, 5 கோடி மக்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதற்கான சாத்தியத்தைப் பற்றி பேசுகிறேன். இவர்கள் வாழ்வைத் தொட்டால், பலருக்கும் தெரியாத ஒரு திருப்தியை நீங்கள் உணர முடியும். சரியான விஷயங்களைச் செய்தால், பெரிய மாற்றத்தை நீங்கள் ஏற்படுத்த முடியும்.

நிர்வாகம் சார்ந்த, நீங்கள் செய்யக்கூடிய வேலையைச் சார்ந்த ஆலோசனைகளை, பயிற்சிகளை நீங்கள் யாரிடமிருந்தும் பெறமுடியும். ஆனால், உங்கள் உள்நிலையைப் பொருத்தவரையில் உங்களுக்கு எல்லாவிதத்திலும் உறுதுணையாய் இருந்து அதனை நிகழச்செய்ய வேண்டும் என நான் நினைக்கிறேன். வளமான, ஆனந்தமான ஆந்திரபிரதேசத்தை உருவாக்குவது நமக்கொரு புனித கடமை. இதனை நாம் நிகழச் செய்வோம்.

Love & Grace