இந்தியாவில் முன்பு மக்கள் ஏன் புனிதத் தலங்களுக்குச் சென்று உயிர்விட விரும்பினார்கள்?

சத்குரு:

முன்பெல்லாம் ஓரளவு விழிப்புணர்வு உள்ளவர்கள், தங்கள் இறுதிக் காலத்தில் குடும்பத்தைவிட்டு விலகி ஆன்மீகரீதியாக சக்தி வாய்ந்த ஒரு புனிதத் தலத்துக்குச் சென்று சாகும் வரை அங்கேயே தங்கிவிடுவார்கள். ஏனெனில், அவர்கள் தங்கள் குடும்பத்தினர் மத்தியில் மரணமடைய விரும்பவில்லை. பற்றற்ற ஒரு நிலையில் மரணமடையவே விரும்பினார்கள். இந்த உடல், அதன் மீதான பற்று மற்றும் போராட்டங்கள் போன்ற எந்தத் தொடர்பும் இல்லாத நிலையில் மரணமடைய நினைத்தார்கள். ஏனெனில், குடும்பத்தின் சூழலில் இறப்பது என்பது மரணத்துக்கான ஒரு மகத்தான வழி அல்ல.

கொஞ்சம் அன்பு இருக்க வேண்டியதுதான். ஆனால், அதனுடன் நிறையப் பற்றும் சேர்ந்துவிடுகிறது. உங்கள் வாழ்வின் கடைசி வினாடியில், உங்கள் மகனையோ, மகளையோ, கணவனையோ, மனைவியையோ பார்த்தால் வெறும் அன்பு மட்டும் வராது. இன்னும் பல விஷயங்கள் தோன்றும். அவர்களுடைய முகங்கள் இந்த வாழ்வின் பல விஷயங்களை உங்களுக்கு நினைவூட்டுகின்றன. ஏனென்றால், உறவுகள் என்பவை அன்பைச் சார்ந்தவை மட்டும் அல்ல. அதில் வேறு பல விஷயங்களும் இருக்கின்றன. அவை அனைத்தும் ஒவ்வொன்றாக வரும்.

எனவே, மரணத்தைத் தொடும்போது குடும்பச் சூழ்நிலையில் இருக்க வேண்டாம் என்று இந்தியாவில் எப்போதும் போதிக்கப்படுகிறது. எனவேதான் இந்தக் கலாசாரத்தைச் சேர்ந்தவர்கள், ஒரு குறிப்பிட்ட வயதைத் தாண்டியவுடன் குடும்பத்தைவிட்டு விலகி பிரயாணத்தில் உள்ள பற்பல இடர்களையும் தாங்கி காசி போன்ற தலங்களுக்குச் சென்று அங்கேயே சாகும் வரை தங்கி உயிர்விட்டார்கள்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.